முன்னுரை.
அடுத்தவர் செய்தத் தவறை தன் மீது போட்டுக் கொண்டு பிறந்த ஊரைவிட்டு கதாநாயகன் சிங்கப்பூர் செல்வதும் அங்கு நடக்கும் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு விழிப்பதும் அதில் அவனுக்கு கதாநாயகி உதவுவதும் இறுதியில் யாரை கதாநாயகன் திருமணம் செய்துக் கொள்கிறான் என்பதே இக்கதையாகும்.
பாகம் 1,
மானாமதுரை,
திருவிழா நடக்கும் மைதானத்தில் இருந்த மேடையில் அந்த ஊரைச் சேர்ந்த 10 பெரிய தலைகள் அமர்ந்திருந்தனர். அதில் வாசுதேவனும் அமர்ந்திருந்தார். அவர் பெரும் செல்வந்தர். பல ஏக்கரில் குண்டு மல்லி தோட்டம் வைத்து அதன் மூலம் அதிகளவு வருமானம் ஈட்டி வருபவர். மொத்தமாகவோ சில்லறையாகவோ கூட அவரிடம் இருந்து மல்லிகைகளை வாங்கி விற்பனை செய்பவர்கள் ஏராளம்.
மதுரை மற்றும் மானா மதுரையில் உள்ள பல முக்கிய இடங்களில் நடக்கும் முக்கியமான நிகழ்ச்சிகளில் முக்கியமானவராக இவரும் இருப்பார். அவரது பேரன் கள்ளழகர் எப்போது அந்த மல்லித் தோட்டத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டானோ அன்றிலிருந்து வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்வது ஆரம்பமானது.
வாசுதேவனை தெரியாதவர்கள் அந்த ஊரில் யாரும் இல்லை என்றால் அவரது பேரன் கள்ளழகரை தெரியாதவர்கள் அந்த மானா மதுரையிலேயே இல்லை.
வாசுதேவன் தன்னைப் போலவே தன் பேரனையும் கடுமையான உழைப்பாளியாக வளர்த்திருந்தார். வாசுதேவனின் மகனும் கள்ளழகரின் தந்தையான ரகுராமனும் ஆரம்ப கட்டத்தில் இந்த குண்டுமல்லி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்று அவருக்கு அரசாங்க வேலை கிடைத்ததோ அதோடு மல்லித் தோட்டத்திற்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு சென்றுவிட்டார்.
அதன்பிறகு தாத்தா வாசுதேவன் மட்டுமே தனி ஒருவராக வியாபாரத்தையும் பார்த்துக் கொண்டு ஊர் பிரச்சனைகள், விசேஷங்கள் என அனைத்திலும் தலைமை தாங்கிக் கொண்டு இருந்தார்.
ஆரம்பத்தில் அவரால் அனைத்தும் செய்ய முடிந்தது போக போக முதுமையின் காரணமாகவும், ஊர் வேலைகள் அதிகரிப்பின் காரணமாகவும் பள்ளிப்படிப்பு முடித்த கையோடு காலேஜ்க்கு அடி எடுத்து வைக்கும் நேரத்தில் தனது பேரன் கள்ளழகரை இழுத்து வியாபாரத்தில் விட்டார்.
அவனும் 1 வருடம் காலேஜ்க்கு செல்லாமல் குண்டுமல்லி வியாபாரத்தை கற்றுக் கொண்டு நன்றாக வியாபாரம் செய்யலானான். 1 வருடம் கழித்து அவனுக்கு அந்த வியாபாரத்தின் நுணுக்கங்கள் தெரிந்தபின்பு மீண்டும் படிக்கச் சென்றான்.
கல்லூரி படிப்பு முடியும் வரை படித்துக் கொண்டே வியாபாரம் செய்து ஒரு டிகிரி பெற்றான். கள்ளழகர் பி.பி.ஏ. குண்டு மல்லி வியாபாரம் என பெரிய அளவில் ஒரு போர்டு தயாரித்து அதை வீட்டின் முன்னால் இருந்த காம்பவுண்ட்டில் மாட்டிவிட்டார் தாத்தா.
பி.பி.ஏ படித்ததால் இன்னும் பொறுப்பானவனாகவும் வியாபாரத்தில் தலைசிறந்தும் விளங்கினான். முன்பெல்லாம் வாசுதேவன் பேரன் கள்ளழகர் என்று சொன்ன காலம் போய் இப்பொழுது கள்ளழகர் பி.பி.ஏவின் தாத்தா வாசுதேவன் என சொல்லும் அளவுக்கு ஊருக்குள் முக்கிய புள்ளியாகவே மாறிவிட்டான்,
என்னதான் வியாபாரத்தில் பிசியாக இருந்தாலும் அவனது தாய் வத்சலாவுக்கு என்றுமே அவன் குழந்தைதான். எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் சரி அவனுக்கு உணவு பரிமாறிவிட்டு அவன் சாப்பிட்டுவிட்ட பின்புதான் உறக்கமே கொள்வாள். அந்த