Chillzee KiMo Books - கனவே கை சேர வா..! - பத்மினி செல்வராஜ் : Kanave kai sera va..! - Padmini Selvaraj

கனவே கை சேர வா..!  - பத்மினி செல்வராஜ் : Kanave kai sera va..! - Padmini Selvaraj
 

அன்பான வாசகர் தோழமைகளே!!!

அனைவருக்கும் வணக்கம்..!

மீண்டும் ஒரு புதிய கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

இந்த கதை அன்றும், இன்றுமாக பயணித்து பின் ஒன்றாக இணையும். இந்த கதையின் நாயகன் நாயகியோடு என்னுயிர் கருவாச்சி யின் நாயகன், நாயகி ராசய்யா , பூங்கொடி மற்றும் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த கதையிலும் உலா வருவார்கள்.

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, ஜாலியான காதல் கதைதான். படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!

- அன்புடன் பத்மினி செல்வராஜ்!

 

அத்தியாயம்-1.

  

சென்னை..!

  

நுங்கம்பாக்கம் மெயின் ரோட்டில் வரிசையாக அணிவகுத்து வீற்றிருக்கும் வணிக கட்டிடங்களில் ஒன்றில்,   எட்டாவது தளத்தில் அமைந்து இருந்தது அந்த சிறிய அலுவலகம்.

  

சாலையில் இருந்து நிமிர்ந்து பார்க்கும்பொழுது  பொதிகை சாஃப்ட்வேர் சொல்யூசன்ஸ் என சிறிய எழுத்துக்களால் ஆன பெயர்ப்பலகை அழகாக மின்னிக் கொண்டிருந்தது.

  

ஒரு ஐம்பது பேர்  அமர்ந்து வேலை செய்யும் சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனம் அது.

  

அந்த நிறுவனத்தின் நுழைவாயிலின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றால், ஒரு சிறிய ரிசப்சன் இருந்தது .

  

ஒருவர் மட்டும் அமரும்படி ஒரு சுழல் நாற்காலியும்,  அழகான சிறிய டேபிலும் அதன் மீது சின்ன சின்ன அலங்கார கலைபொருட்கள் அழகாக வைக்கபட்டு இருந்தது.

  

ரிசப்சனோடு இணைந்தவாறு சிறிய வரவேற்பறை...

  

மூவர் அமரும் ஒரு நீண்ட சோபா போடப்பட்டு இருந்தது. அதன் முன்னால் இருந்த டீப்பாயில் சில பிசினஸ் மேகசின்ஸ்கள், லேட்டஸ்ட் டெக்னாலஜிஸ் பற்றிய மேகசின்ஸ் வைக்கப்பட்டு இருந்தன.

  

வரவேற்பறையின் ஒரு மூலையில் குட்டி லைப்ரரி ஒன்று இருந்தது. எல்லாமே கம்யூட்டர் லேங்குவேஜஸ், லேட்டஸ்ட்  டெக்னாலஜிஸ் போன்ற பல புத்தகங்கள் அடுக்கப்பட்டு இருந்தன.

  

அதோடு மட்டும் அல்லாமல், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள், ரிலாக்சேசனுக்காக, சில பொதுவான புத்தகங்களும் வரிசைபடுத்தப்பட்டு இருந்தன.

  

வரவேற்பறையை ஒட்டி கண்ணாடி தடுப்பிலான கதவு இருக்க, அதை திறந்து கொண்டு உள்ளே சென்றால், பெரிய ஹால் போன்று இருந்தது. அதில் இரண்டு வரிசையில் நீளமாக டெஸ்க் அமைக்கபட்டு சிறு சிறு க்யூபிக்கலாக தடுக்கப்பட்டு இருந்தது.

  

ஒவ்வொரு க்யூபிக்களிலும் டெஸ்க்டாப் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஹாலின் ஓரத்தில், ப்ராஜெக்ட் சம்பந்தமாக டிஸ்கஸ் பண்ணுவதற்கு என்று சிறிய கான்ப்ரென்ஸ் அறையாக தடுத்து இருந்தார்கள்.

  

அந்த கான்ப்ரென்ஸ் அறையை ஒட்டி இருந்தது சிறிய அறை.

  

அந்த அறையின் கதவில், பொதிகை (மேனேஜிங் டைரக்டர்) என்று பொன்னிற எழுத்துக்கள் மின்னின...

  

அந்த அறையின் உள்ளே சென்றால் இரண்டு ஆச்சர்யங்கள் காத்திருக்கும்..!

  

அந்த சிறிய நிறுவனத்தை துணிச்சலாக ஆரம்பித்து நடத்துபவர் ஒரு பெண் என்பது ஆச்சர்யபடத்தக்கது முன்பெல்லாம்...!

  

ஆனால் இப்பொழுது நிறைய பெண்கள், சொந்தமாக  நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருவது இயல்பாகி போனது..!

  

அடுத்த ஆச்சர்யம்...எம்.டி என்ற சீட்டில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபரை எதிர்பார்த்தால்,  அங்கே அமர்ந்து இருந்ததோ சிறு இளம்பெண்.