முதல் பாதி நாயகியை விரும்பி அவளின் மனதில் இடம்பிடிக்க போராடும் நாயகனும் பிற்பாதியில் விலகிச் செல்லும் நாயகனை விரும்பி அவனின் மனதில் இடம்பிடிக்க போராடும் நாயகியும் அவர்களுக்கு எதிராக நிற்கும் இருவரின் குடும்பங்களும் அதையும் கடந்து அவர்கள் இணைந்தது எப்படி என சொல்வதே இக்கதையாகும்.
பாகம் 1.
காஞ்சிபுர நகரத்தின் அவுட்டரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதி.
விடிகாலை மணி 4.45,
படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த பூங்கொடியை யாரோ உலுக்கியது போன்ற உணர்வு அவள் மெல்ல கண்கள் திறந்துப் பார்த்தாள். சுற்றிலும் இருள் இருந்தாலும் ஜன்னல் வழியாக சிறிது வெளிச்சம் வந்தது, அந்த வெளிச்சத்திற்கு தன் கண்களை பழக்கிக் கொள்ள அவள் சில நொடிகள் எடுத்துக் கொண்டாள்.
அவளுக்கென தனியறை, சிங்கிள் பெட், கழுத்து வரை போர்த்தியிருந்த போர்வையில் இருந்து தனது இடது கையை மட்டும் வெளியே எடுத்து வழக்கமாக தலையணை பக்கத்தில் வைத்திருக்கும் சிறிய அளவிலான அலார கடிகாரத்தை எடுத்துப் பார்த்தாள். மணி 4.45 என இருக்கவே அவள் மனம் மகிழ்ந்தாள்.
”பரவாயில்லை 5 மணிக்கு அலாரம் வைச்சோம் ஆனா நாலே முக்காலுக்கே விழிப்பு வந்துடுச்சி, இன்னும் கால் மணி நேரம் படுத்து தூங்கலாம் அலாரம் அடிச்சாலே எழலாம்” என நினைத்து அலாரத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு கையை போர்வைக்குள் இழுத்துக் கொண்டு கண்கள் மூடி உறங்கலானாள்.
5 நிமிடம் கழித்து மீண்டும் அவள் கண்கள் திறந்தாள் மறுபடியும் அவளது கையை தானாகவே அலாரத்தை எடுத்தது இன்னும் ஐந்து மணியாக 10 நிமிடம் உள்ளது என வரவும் மீண்டும் புன்னகையுடன் உறங்கலானாள். மறுபடியும் சில நிமிடங்கள் கழிந்தது இம்முறை அவள் கடிகாரத்தை எடுத்துப் பார்த்து அதிர்ந்தாள் காரணம் மணி 4.59 என இருக்கவே சட்டென அந்த அலாரம் அடிப்பதற்குள் அதை அடிக்க விடாமல் ஆப் செய்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள்,
”நல்லவேளை அலாரம் அடிச்சிருந்தா என்ன ஆயிருக்கும்” என நினைத்தபடியே போர்வையை ஒதுக்கிவிட்டு எழுந்து அமர்ந்தாள், கசங்கிய நைட்டியை ஒழுங்குபடுத்திக் கொண்டே கட்டிலை விட்டு இறங்கினாள், சிறிய அறை என்பதால் கட்டிலும் சிறியது, பீரோ என எதுவும் இல்லை அதற்கு பதிலாக சுவரில் அலமாரி இருக்க அதில் நேற்று இரவே உறங்கும் முன் தயாராக வைத்திருந்த டவல், மாற்றுத் துணிமணி, பிரஷ் பேஸ்ட் வரை அனைத்தும் எடுத்துக் கொண்டு அறை வாசலுக்கு வந்தாள். அந்த அறைக்கு கதவு கூட இல்லை வெறும் துணி ஸ்கரீன் இருக்க அதை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாள்,
சிறிய வாடகை வீடு, அவளுக்கென ஒரு அறை மற்றபடி அவளது தந்தை வீட்டிற்கு வெளியே திண்ணையில் படுத்திருக்க தாயோ சமையல் அறையில் உறங்கிக் கொண்டிருக்க, அவளது அண்ணன் அண்ணி அவர்களின் குழந்தைகள் ஹாலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
மெதுவாக அவள் அடி மேல் அடி வைத்து நடந்து தன் அண்ணன் சேதுராமிடம் சென்று மெதுவாக அழைத்தாள்,
”அண்ணா சேது அண்ணா அண்ணா டேய் எழுடா கும்பகர்ணா” என அவனது தோளை உலுக்க அதில் அவன் அசைந்து அவளைப் பார்த்து,
”ம்ம் எழுந்துட்டியா ஏன் லேட்டு”,
”நான் சரியான நேரத்திலதான் எழுந்தேன் போ உள்ள போய் தூங்கு” என சொல்ல உடனே அவன் தன் மனைவி பிரியங்காவின் தோளை உலுக்கினான், அவளோ தூக்கத்தில்