Chillzee KiMo Books - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு : Nee illaatha vazhvu verumaiyadi - RaSu

நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு : Nee illaatha vazhvu verumaiyadi - RaSu
 

நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு

Chillzeeயில் தொடர்கதையாக வெளி வந்த போது வாசகர்களின் ஆர்வத்தை தூண்டி சுவாரசியத்தோடு வாரம்தோறும் படிக்க வைத்த கதை!

ராசுவின் கை வண்ணத்தில் உருவாகி இருக்கும் அழகான குடும்ப சென்டிமென்ட்டுகள் நிறைந்த காதல் கதை.

 

- 01 -

நீ என்னப்பா சொல்றே?”

மூத்த முகனின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தவாறே அவனது பதிலுக்காக காத்திருந்தார் வனிதாமணி.

மகேந்திரன் என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றான்.

அவனுக்கே அவனது மனம் என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை.

அறைக்குள்ளே நின்றவாறே தாய்க்கு தூண்டுதல் போட்டவாறு இருந்த தம்பி யுகேந்திரன் ஜாடையில் பேசுவது அவனுக்குத் தெரியத்தான் செய்தது.

அவர்கள் இருவரின் ஆர்வம் கண்ட பிறகு அவர்கள் மனம் கோண நடக்க அவனுக்கு மனம் வரவில்லை. அவர்களைச் சுற்றிதான் அவனது வாழ்க்கையே. அப்படியிருக்க அவர்களின் சந்தோஷத்திற்கு அவனால் தடையாக இருக்க முடியாது.

அதற்காக அவர் கேட்பதற்கு எப்படி அவனால் சம்மதம் சொல்ல முடியும்?

அவர் என்ன சாதாரண விசயத்தையா கேட்கிறார்?

தம்பிதான் வயதில் சிறியவன். இன்னும் அனுபவ முதிர்ச்சி இல்லை. அதனால் அவன் ஆசைப்படுகிறான். ஆனால் அம்மாவுக்கு என்னவாயிற்று?

அவருக்கு இந்த சமுதாயத்தில் ஒவ்வொரு விசயத்தையும் எப்படி கண், காது, மூக்கு எல்லாம் வைத்து இல்லாததையும், பொல்லாததையும் பேசுபவர்கள்தான் அதிகம் என்று தெரியாததா என்ன?

“கிருஷ்ணா பாவம்பா. பெற்றவர்களும் இல்லை. அதுதான் கிருஷ்ணா நம்ம வீட்டில் படிப்பு முடியும் வரைக்கும் இருக்கலாம்னு யுகேந்திரன் ஆசைப்படுறான். இதுதான் கடைசி வருடம். ஒரு வருடம்தானே? இருக்கட்டுமா?”

இதுதான் அவனது தாயாரின் வேண்டுகோள்.

அவர் என்மோ சாதாரணமாக கேட்டுவிட்டார்.

ஆனால் அதற்கு என்ன பதில் சொல்வது என்றுதான் அவன் விழித்துக்கொண்டிருக்கிறான்.

அவனருகிலேயே சாருலதாவும் நடப்பதை எல்லாம் கண்டும் காணாத மாதிரி நின்றுகொண்டிருந்தாள்.

அதைக் காணும்போது அவளுக்கு நேரே மகனிடமே கெஞ்ச வேண்டி வந்துவிட்டதே என்று அவருக்கு மனம் சுணங்கியது.

தாயும் மகனும் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்று கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் அருகிலேயே நக்கல் சிரிப்போடு நின்று கொண்டிருக்கிறாளே.

அவளை மனதிலேயே கடிந்துகொண்டார்.

அவர் பல்லைக்கடித்துக் கொண்டிருப்பது அவளுக்கும் புரியத்தான் செய்தது. இருந்தும் நமட்டுச் சிரிப்போடு நின்று கொண்டிருந்தாள்.

உள்ளே நின்றிருந்த யுகேந்திரனோ அவளது கழுத்தை நெறித்துவிடும் உத்தேசத்தில் இருந்தான். இதை எல்லாம் இந்த அண்ணன் பார்க்கமாட்டானே?

அவளும் அவனுக்கு நேராக மிகவும் நல்லவளாக நடிக்கிறாளே. எத்தனையோ பேரை சமாளித்து தொழிலை நன்றாக நடத்தி வருகிறான். எதிராளியைப் பார்த்த மாத்திரத்திலேயே எடை போட்டு விடுபவனுக்கு இந்த சாருலதா குடும்பத்தைப் பற்றி மட்டும் ஏன் புரிய மாட்டேங்குது?

பாட்டியின் உறவினர்கள் என்று பேசாமல் இருக்கிறானா? இல்லை அப்பா வருத்தப்படுவாரே என்று யோசிக்கிறானா? அப்பாவின் ஒன்று விட்ட தங்கையின் மகள்தான் சாருலதா. அவனது பாட்டியின் தங்கை பேத்தி.

பாட்டிதான் இல்லை. அவரது உறவினர்களாவது நம்முடன் இருக்கட்டும் என்று முன்பே அப்பா சொன்னதாக அவர்களது அன்னை சொல்லியிருக்கிறார்.

அதனாலேயே அவர்களது வரவை தடுக்க இயலாமல் போய்விட்டது. அதுவும அவர்களது இயல்பை மறைத்து நாடகமாடும் அவர்களின் உண்மையான சுயரூபம் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் தெரியாலே போய்விட்டது.

அவனுக்கும் அவனது தாய்க்கும் இந்த விசயம் தெரிய வந்தது தற்செயலான விசயம்தான்.

அதுவும் இந்த சாருலதாவால்தான் தெரிய வந்தது.

எங்கெங்கோ ஞாபகம் சுற்றி வருவதை உணர்ந்து தன் தலையில் தட்டிக்கொண்டான்.

இப்போது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தால் அந்த சாருலதா ஏதாவது தில்லுமுல்லு செய்து அண்ணன் மனதில் நஞ்சைக் கலக்கிவிடுவாள்.

இப்போதைக்கு இந்த வீட்டிற்கு கிருஷ்ணா வரவேண்டியது மிகவும் முக்கியம்.

என்ன நடக்கிறது என்று பார்த்தான்.

மகேந்திரன் மட்டும் யோசித்து பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டால் எதுவுமே நடக்காது என்று இப்போதே தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.

இந்த சாருலதா அந்த கிருஷ்ணா யாரு என்னன்னு விசாரிக்க ஆரம்பித்து விட்டாள் என்றால் அதன் பிறகு எதையாவது சொல்லி கிருஷ்ணா வரவிடாமல் தடுத்துவிடுவாள்.

அதற்குள் அண்ணன் பதில் சொல்ல வேண்டுமே.

மகேந்திரன் தனது தந்தையின் அறைப்பக்கமாக திரும்பினான்.