Chillzee KiMo Books - காதல் சுகமானது - பிந்து வினோத் : Kadhal sugamanathu - Bindu Vinod

காதல் சுகமானது - பிந்து வினோத் : Kadhal sugamanathu - Bindu Vinod
 

காதல் சுகமானது - பிந்து வினோத் : Kadhal sugamanathu - Bindu Vinod

2017ல் எழுதிய இந்த சிம்பிள் & க்யூட் காதல் கதையில், சில பல மாற்றங்கள் சேர்த்து, இன்னும் கொஞ்சம் ‘என்டர்டெயினிங்” ஆக மாற்றி இருக்கிறேன். :-)

படிக்கும் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

படித்து விட்டுச் சொல்லுங்கள்.

 

அத்தியாயம் 01

2004 – புதுச்சேரி

“உள்ளே வாங்க...” என்ற அன்பான அழைப்பை ஏற்று ஆனந்துடன் வந்த அவனின் அம்மாவும் தம்பியும் அந்த வீட்டினுள் செல்ல, ஆனந்த் மட்டும் உள்ளே செல்லாமல் வெளியே இருந்த மரங்களின் பச்சை பசுமையையும், அதனால் அங்கே வீசிய சில்லென்ற தென்றலையும் அனுபவித்த படி நின்றான்.

பாண்டிச்சேரியின் மேல்தட்டு பகுதியில் அமைந்திருந்த அந்த வீட்டின் வடிவமைப்பு அவனின் கருத்தை கவர்ந்தது.

ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெற்று பல வருடங்கள் ஆன பிறகும், அந்த வீட்டின் வடிவமைப்பில் ஃபிரெஞ்சு நாட்டுத்தன்மை இருப்பது அவனுக்கு ரசிக்க கூடியதாக இருந்தது.

வேடிக்கை பார்த்து நின்றவனின் கண்ணில் மாடி செல்லும் படிக்கட்டுகள் பட, சின்ன யோசனைக்கு பின் அதில் ஏறினான்...

மேலே செல்ல, செல்ல, தென்றலின் வேகமும் அதிகமாவது போல அவனுக்கு தோன்றியது....

அதை ரசித்தப் படி படிகளில் மெல்ல ஏறியவனின் காதில்,

“இங்கே தான் இருக்கு... இரு இரு... எடுத்து தரேன்...” என்ற பெண்ணின் குரல் கேட்டது...

குரலில் இருந்த  இளமை அவனின் வயதிற்கே உரிய விதத்தில் அவனை அந்த குரல் வந்த திசையில் பார்க்க வைத்தது...

அருகே இருந்த சின்ன ஜாலிகளின் வழி பார்த்ததில் தெரிந்த பச்சை நிற சுரிதார் ஆர்வத்தை மேலும் தூண்ட, கொஞ்சம் வேகமாக அந்த வளைவான படிகளில் ஏறி, மாடியை அடைந்தான்...

அங்கே இருந்த ‘அவள்’ கையில் இருந்த காத்தாடியை அருகே இருந்த சிறுவனிடம் கொடுத்து,

“நெக்ஸ்ட் டைம் எடுத்து தர மாட்டேன்... சொல்லிட்டேன்...” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்...

அவன் நடந்து வந்த காலடி ஓசைக் கேட்டு திரும்பிப் பார்த்தாள்...

அவளின் விழிகள் ஆனந்தின் முகத்தில் பதிய... ஆனந்தின் காதில் ஆயிரமாயிரம் வயிலின்கள் இளையராஜாவின் இன்னிசை கீதம் இசைத்தன... ஏற்கனவே வீசிக் கொண்டிருந்த இனிய தென்றலில் நறுமணமும் இணைத்துக் கொண்டு அவனை திக்குமுக்காட வைத்தன...

“யார் நீங்க?”

கொஞ்சம் கடுமையுடன் ஒலித்த அவளின் கேள்வி ஆனந்தை அவனின் ஆனந்த உலகை விட்டு வெளியே அழைத்து வந்தது... அவளுக்கு பதில் சொல்ல,

“ஹாய்...” என்றான்.

அவள் கேள்வியோடு பார்க்க,

“சாரி, உங்க அம்மாவை சந்திக்க வந்தோம்... நான் வீடு அழகா இருக்கேன்னு இந்த பக்கம் வந்தேன்...” என்றான்.

அவனின் பதிலில் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் இருந்தாலும், அவனை பார்த்தால் கொஞ்சம் நாகரிகமானவனாக தோன்றவும், கடுமையாக எதையும் சொல்லாமல் சந்தேகமாக பார்த்தபடி படிகளில் கீழ் இறங்கி சென்றாள் அவள்.

எதனாலோ அவனுக்கு அதுவும் கூட ரசிக்கும் படி இருந்தது... தானாக புன்முறுவல் தோன்ற, அவனும் கீழே இறங்கி சென்றான்.

அவள் வீட்டினுள் செல்ல, அவனும் அவளின் பின்னே உள்ளே சென்றான்.

அங்கே சந்தோஷத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள் அவனின் அம்மா ராதாவும், அவர்கள் பார்க்க வந்த அம்மாவின் தோழி மாலதியும்...

“லாவண்யா... வா... இவ தான் ராதா... நான் சொல்லி இருக்கேனே என் பிரெண்ட்... ராதா, இவ என் பொண்ணு லாவண்யா... ஸ்டெல்லாமேரீஸ்ல பிஎஸ்சி பைனல் இயர் படிச்சிட்டு இருக்கா...”

லாவண்யாவையும், அவளின் பின்னே வந்த தன் மகனையும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ராதா, தோழி சொன்னதை கவனித்து விட்டு அவளின் மகளை பார்த்தாள்.

“அப்படியே உன்னை மாதிரியே இருக்கா மாலதி... அதே ஸ்மைல்... ஆனால் ஏன் ஸ்டெல்லாமேரீஸ்? இங்கேயே பக்கத்துல நல்ல காலேஜ் இருக்கே?” என்று விசாரித்தாள்.

“சென்னைல அவ பெரியப்பா, பெரியம்மா வீட்டுல தங்கி படிக்குறாப்பா...