Chillzee KiMo Books - மலர்களே! மலர்களே!! - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Malargale! Malargale!! - Srija Venkatesh

மலர்களே! மலர்களே!! - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Malargale! Malargale!! - Srija Venkatesh
 

மலர்களே! மலர்களே!! - ஸ்ரீஜா வெங்கடேஷ்

மலர்களே! மலர்களே!! என்ற இந்த நாவல் வித்தியாசமான கதைக்களம் கொண்டது.

சேதுலட்சுமி அம்மாள் ஆதரவற்ற சில குழந்தைகளை வளர்க்கிறார். அவர் அப்படிச் செய்ய என்ன காரணம்? அவரது வளர்ப்பு மகள் அமுதாவின் காதலால் அவருக்கு ஏற்பட்ட கடும் அவமானத்துக்குக் காரணம் என்ன? அவரது கடந்த காலம் அமுதா மற்றும் இதர குழந்தைகளை பாதிக்குமா?

நற்பண்புகளே உருவான சேதுலட்சுமி அம்மாளின் வாழ்வில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன? அடிக்கடி வந்து போகும் ராஜு அண்ணனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அமுதாவின் காதலால் தாய், குழந்தைகள் என்று அவர்கள் இது வரை வாழ்ந்து வந்த வாழ்வு குலைந்து விடுமா?

சேதுலட்சுமி அம்மாள் உண்மையிலேயே நல்லவர் தானா? அமுதாவின் காதல் என்ன ஆனது?

இவற்றைத் தெரிந்து கொள்ளப் படியுங்கள் மலர்களே! மலர்களே!! நாவலை.

 

அத்தியாயம் 1.

இதமான மாலை வேளை. சென்னையின் புறநகர்ப்பகுதியில் ஒரு ஒதுக்குப்புறமான வீட்டின் வாசலில் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார் சேது லட்சுமி அம்மாள். அவளுக்குப்பக்கத்தில் அமுதா. இடது புறம் சிதம்பரம் , வலது புறம் சரோஜினி , பிறகு இந்திரா , கடைசியாக வாஞ்சிநாதன். இந்திராவும் வாஞ்சியும் ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறார்கள் , சிதம்பரம் +2 அமுதா கல்லூரி முடித்து விட்டு வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறாள். இவர்கள் அனைவருக்கும் ஆதரவு தருவது சேது லட்சுமி அம்மாள் , அவர் அரசு அலுவலகம் ஒன்றில் கிளார்க்காக இருந்து ஓய்வு பெற்றவர்.

"அம்மா! இந்த பரீட்சையிலயும் நான் தான் ஃபர்ஸ்ட். அதுக்கு எனக்கு என்னம்மா பெரிசு குடுக்கப் போறீங்க? என்றாள் இந்திரா.

"உனக்கு என்ன வேணும்? சொல்லு? "

"நாம எல்லாரும் ஏதாவது சினிமாக்குப் போயிட்டு வரலாமா?"

"சரி ! அப்ப்டியே செய்வோம். அமுதா! வர ஞாயித்துக்கிழமை ஏதாவது ஒரு நல்ல படத்துக்கு டிக்கெட் வாங்கிடும்மா" என்று சேது லட்சுமி அம்மாள் சொன்னதும் "ஹே" என்று கூச்சலிட்டார்கள் குழந்தைகள்.

"ஆனா இந்திரா உனக்கு அடுத்த மாசம் பொறந்த நாள் வருது. அப்பவும் சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போகச் சொல்லி என்னைக் கேக்கக் கூடாது. உங்கம்மா கிட்ட அத்தனை பணம் கிடையாது புரிஞ்சதா?"

"சரிம்மா! அம்மா உங்க கிட்ட ஒண்ணு கேக்கலாமா?"

"கேளும்மா!"

"இங்க இருக்கற நாங்க எல்லாருமே அனாதைங்கதான். அமுதாக்காவையும் சேர்த்து. அப்படி இருக்கும் போது எங்க பிறந்த நாள் உங்களுக்கு எப்படி அம்மா தெரியும்?"

கண்களில் நீர் குளம் கட்டியது சேது லட்சுமிக்கு. அந்த சின்னஞ்சிறிசுகளை இப்படி அனாதையாக  ஆக்கிய சமூகத்தின் மீது கோபம் வந்தது.

"இந்திரா ! எனக்கு உங்க பொறந்த தேதி தெரியாதும்மா! நான் என்னிக்கு உங்களை இந்த வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்தேனோ அந்த நாளையே தான் உங்க பொறந்த நாளாக் கொண்டாடிக்கிட்டு வரோம். அதான் வழக்கம்"

"அம்மா! நீங்க மட்டும் இல்லாட்டா எங்க நிலைமை எல்லாம் என்னம்மா ஆகியிருக்கும்? சிதம்பரமும் , வாஞ்சியும் ஆம்பிளைப் பசங்க எப்படியும் பொழச்சிப்பாங்க. ஆனா எங்க நிலைமை? இந்த சமூகம் எங்களை கேவலமான தொழிலுக்குத் தள்ளி விட்டிருக்கும். அது நடக்காம நீங்க காப்பாத்திட்டீங்கம்மா"

"ஏன் அமுதா இப்படியெல்லாம் பேசற? நான் பெறலையே தவிர நீங்க எல்லாருமே என் குழந்தைங்க தான். நாம என்னிக்காவது வேற மாதிரி நெனச்சிருக்கோமா? அவ்வளவு ஏன்? நீங்க இல்லன்னா என் நிலை என்ன? எனக்குன்னு யாருமே இல்லியே?"

"அம்மா நானும் கேக்கணும்னு நெனச்சிருந்தேன். உங்க சொந்த ஊரு எது? உங்களுக்குன்னு குழந்தை குட்டி எதுவும் இல்லியா? உங்க கணவர் எங்க?"

அதெல்லாம் பெரிய கதை அமுதா. அது எதுக்கு உங்களுக்கு? இப்போதைக்கு நான் உங்க அம்மா அது போதாதா உங்களுக்கு?"

அமைதியாகி விட்டாள் அமுதா.

அம்மா எப்போதுமே இப்படித்தான். தன்னைப் பற்றி எதுவும்  சொல்வதேயில்லை. எத்தனையோ நாட்கள் அவள் சிறு குழந்தையாக இருக்கும் போது அம்மா ராத்திரி நேரங்களில் அழுவதைப் பார்த்திருக்கிறாள். என்ன என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டாள். அவர்களுக்காக எப்போது தோன்றுக்கிறதோ அப்போது சொல்லட்டும் என்று விட்டு விட்டாள் அமுதா.

"இந்திரா , வாஞ்சி ரெண்டு பேரும் போய்ப் படிங்க ! இன்னும் நாலு நாள்ல காலாண்டுத் தேர்வு வருது. நல்லாப் படிச்சாத்தான் நல்ல எதிர்காலம் இருக்கும்"

"அம்மா எங்க ரெண்டு பேருக்கும் கணக்குல சில பாடங்கள் புரியல்ல! நீங்க சொல்லித்தாங்கம்மா பிளீஸ்"

"எனக்கு உங்க புது விதமான கணக்கெல்லாம் தெரியாதேம்மா? அமுதா நீ போய்க் கொஞ்சம் சொல்லிக்குடேன்"

"ஐயோ ! அம்மா எனக்கு கணக்கே வராது. எப்பவோ படிச்சது மறந்து வேற போச்சி! "

"நீங்க கவலைப் படதீங்கம்மா ! நான் அவங்களுக்கு சொல்லிக் குடுக்கறேன்" என்ற சிதம்பரம் அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். தனித்து விடப்பட்ட அமுதாவும் அம்மாவும் பேசாமல் இருந்தனர்.

அமுதா மெல்ல ஆரம்பித்தாள்.

"அம்மா! நான் கேக்கறேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க. நாம ஏம்மா கடந்த எட்டு ஆண்டுகளா வேற எந்தக் குழந்தையையுமே நம்ம வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வரல்ல?"

"நீ கேக்கறது எனக்குப் புரியுதும்மா! நான் ஓய்வு பெற்று ரெண்டு ஆண்டாச்சி ! அரசாங்க வேலைங்கறதால எனக்கு ஓய்வூதியம் வருது. நீயும் சம்பாதிக்கத் தொடங்கிட்ட! உன்னைக் கல்யாணம் கட்டி அனுப்பணும். அதுக்கு எங்கிட்ட கொஞ்சம் பணமிருக்கு!