வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - பிந்து வினோத் : Vaanum mannum katti kondathe... - Bindu Vinod
 

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - பிந்து வினோத்

ஆகாஷ் - அக்ஷ்ராவின் குடும்பங்கள் சொந்தம் போல நெருங்கிய நட்புடன் பழகும் குடும்பங்கள். இரண்டு குடும்பங்களின் பெரியவர்களும் ஆகாஷ், அக்ஷராவின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சினேகாவை சந்திக்கிறான் ஆகாஷ். அவள் மீது ஈர்க்கவும் படுகிறான். ஒரு பக்கம் வீட்டில் மும்முரமாக திருமண ஏற்பாடுகள் நடக்க, ஆகாஷின் மனம் சினேகாவை மறக்க முடியாமல் தவிக்கிறது. பெரியவர்களின் மனதை வருத்தவும் முடியாமல், மனதிற்கு பிடித்தவளை மறக்கவும் முடியாமல் இருக் கொல்லி எறும்பாக தவிக்கிறான் ஆகாஷ்.

பெரியவர்களின் மனம் நோகாமல் ஆகாஷின் காதல் நிறைவேற முடியுமா? அக்ஷரா நிலைமை என்ன? சினேகா ஆகாஷின் காதலை ஏற்றுக் கொள்வாளா?

தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!

 

Prologue

காஷ்... சார்...”

அழைத்தபடி தூக்க கலக்கத்துடன் நடந்து வந்தாள் சினேகா.

அவனுடைய இடத்தில அவன் இல்லாமல் போகவும், சந்தேகத்துடன் தான் அவளுடைய டெஸ்க் இருக்கும் பக்கமாக எட்டிப் பார்த்தாள்.

அங்கே அவளுக்கு முதுகு காட்டியபடி நின்றிருந்தான் ஆகாஷ்.

அந்த அரைகுறை தூக்க நிலையிலும் அவளின் மனம் அவனை ரசிக்க தான் செய்தது.

ஆனால் உடனேயே, ‘இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறான்?’ என்ற கேள்வியும் எழுந்தது.

“ஆகாஷ்...”

மீண்டும் அழைத்தாள்.

அவளின் குரல் கேட்டு ஸ்லோ-மோஷனில் திரும்புவது போல பொறுமையாக திரும்பினான் அவன்.

அவனின் முகத்தில் இருந்த ஏதுவோ ஒன்று அவளை குழப்பியது.

அவள் கேட்காத கேள்விக்கும் பதில் சொல்பவனை போல கையில் இருந்ததை நீட்டினான் ஆகாஷ்.

திகைத்து போனாள் சினேகா!

அவளின் ரகசியத்தை கண்டு பிடித்து விட்டானா???

என்ன சொல்ல போகிறான்???

அவளை பற்றி தவறாக நினைத்துக் கொள்வானா???

கோபப் பட்டு, கழுத்தை பிடித்து வெளியே தள்ள போகிறானா???

கடவுளே, இவன் என்ன என்று கேட்டால், இவனுக்கு என்ன என்று சொல்லி விளக்குவது???

அவள் பதற்றத்துடன் யோசிக்க, அவன் தன் இரண்டு கைகளை விரித்து, வா என்பது போல அவளை கண்களால் அழைத்தான்.

சினேகாவால் நம்ப முடியவில்லை!!!

ஆனால் அவளின் இதயம் அதை பற்றி சிறிதும் கவலை படவில்லை. மூளையின் செயல்பாட்டை தன் கையில் எடுத்துக் கொண்டு அது பாட்டிற்கு கட்டளைகள் பிறப்பிக்க, கண் இமைக்கும் நேரத்தில் அவனின் விரிந்திருந்த கைகளின் நடுவே தஞ்சம் புகுந்தாள் அவள்.

அவளை தன்னுள்ளே புதைத்துக் கொள்ள விரும்புபவனை போல இறுக அணைத்துக் கொண்டான் ஆகாஷ்.

இது போதும் அவளுக்கு! வேறு ஒன்றுமே வேண்டாம்!

அவளின் எண்ணம் தெரிந்தோ என்னவோ, அவளின் தாடையை பற்றி முகத்தை நிமிர்த்திய ஆகாஷ், குனிந்து மென்மையாக அவளின் இதழ்களில் முத்தமிட்டான்.

Feather touch என்பது போன்ற மிகவும் மென்மையான முத்தம்!

சினேகாவின் இதயம் ஒன்றிரண்டு வினாடிகள் தன் துடிப்பை நிறுத்தி பின் துடித்தது!!!!

ஆனால், உடனேயே அவளின் மூளையும் விழித்துக் கொண்டது.

அவனின் முத்தத்தில் இருந்தும்... அவனின் அணைப்பில் இருந்தும் தன்னை வலுக்கட்டாயமாக பிரித்துக் கொண்டவள், ஒரே ஒரு வினாடி அவனின் விழிகளை நேராக பார்த்தாள்.

“தப்பு ஆகாஷ்...” என்று மெல்ல முனுமுனுத்தவள் வேகமாக திரும்பி நடந்தாள்.

“சினேகா...”

உரக்க ஒலித்த அவனின் அழைப்பை மதிக்காமல் நடந்தவள், சோஃபாவின் அருகில் இருந்த தன் கைப்பையை எடுத்து மாட்டிக் கொண்டு நடந்தாள்...

“சினேகா... சினேகா.... நில்லு...”

ஆகாஷின் குரல் அவளை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.

திரும்பி பார்த்தால் எங்கே கட்டுப்பாடை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் திரும்பி பார்க்காமல் ஓட்டமும், நடையுமாக பார்க்கிங் வந்து தன் வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக கிளம்பினாள்.

அவள் சென்ற பின்பும், ஆகாஷ் அதே இடத்தில் அசையாமல் நின்றிருந்தான்.

ஒரு சில நிமிடங்களில் நடந்து விட்ட நிகழ்வுகள் அவனை அலைகழித்துக் கொண்டிருந்தது.

உள்ளங்கைகளால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன், அவனுடைய ஆபிஸில் இருந்த சுழலும் நாற்காலியின் மீதிருந்த கோட்டை எடுத்து அணிந்துக் கொண்டு நடந்தான்.

காரை கிளப்பிக் கொண்டு முதலில் சினேகா தங்கி இருக்கும் ஹாஸ்டலின் அருகே சென்றான்.

ஹாஸ்டல் கட்டிடத்திற்கு முன் பார்க்கிங்கிற்கு என ஒதுக்கப் பட்டிருந்த இடத்தில், சினேகாவின் வண்டி கண்ணில் படவும் அவனின் மனதிற்கு சற்று நிம்மதி ஏற்பட்டது. 

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த பெண்கள் விடுதியின் வாசல் அருகே பிரகாசமான விளக்கு மின்னியது. வாட்ச்மேன் எதையோ சொல்லியபடி சினேகாவிற்கு கதவை திறந்து விடுவது கண்ணில் பட்டது.

அதன் பின்பும் அசையாமல் அங்கேயே இருந்தான்...

சிறிது நேரத்தில் மூன்றாம் மாடியின் வலது ஓரத்தில் இருந்த அறையின் விளக்கு உயிர் பெற்றது!

சினேகா தன் அறைக்கு சென்று விட்டாள் என்பது புரிய, காரை அங்கிருந்து கிளப்பிக் கொண்டு சென்றான்.

ஆனால் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல், எந்த இலக்குமில்லாமல் ஒரு சில மணி நேரங்கள் காரை எங்கெங்கோ ஓட்டிக் கொண்டு சுற்றியவன், விடிந்து வெளிச்சம் வர தொடங்கவும் வேறு வழி இன்றி வீட்டை நோக்கி சென்றான். 

அவன் வீட்டினுள் நுழைந்த போது அவனின் எதிரே தன் ட்ரேட்மார்க் புன்னகையுடன் வந்த சுபாஷினி,

“என்ன ஆகாஷ் இது... கல்யாண மாப்பிள்ளை எங்கே போயிட்ட? இப்படியா இந்த டைம்ல நைட் எல்லாம் வேலை செய்றது??” என்றார்.

அம்மாவின் முகத்தில் மின்னிய மகிழ்ச்சி அவனை என்னவோ செய்தது...

“சரி, சரி.. நீயே டையர்டா வந்திருப்ப, உன்னை போய் நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன் பார்... போ, போய் ரெஸ்ட் எடு... நானும் அப்பாவும் எல்லா வேலையும் பார்த்துக்குறோம்... பூக்கு சொல்லிட்டாரான்னு தெரியலையே... ஜோதி கிட்ட நகை பத்தியும் பேசனும்...”

“அம்மா...”

“என்ன கண்ணா?”

“இந்த கல்யாணம் நடக்காதும்மா... வேண்டாம்... வேலையை எல்லாம் நிறுத்திடுங்க...”

“என்னது...?” என்று அதிர்ந்த சுபாஷினி, உடனேயே பழைய புன்னகை தோன்ற,

“ஹேய், ஹேய் அம்மாட்ட விளையாடுறீயா???? நல்ல பையன்...!!! இதுல எல்லாம் விளையாடக் கூடாது... போ, போய் ரெஸ்ட் எடு...” என்றார்.

“இல்லம்மா... நான் சீரியஸா சொல்றேன்... இந்த கல்யாணம் வேண்டாம்...”

“என்னப்பா... எந்த நேரத்துல, என்ன பேசுற?”

“எனக்கு... என்... மனசில... வேற ஒருத்தி... இருக்காம்மா... இந்த கல்யாணம் வேண்டாம்...”

அடுத்த வினாடி அவனின் கன்னம் தீ பட்டது போல எரிந்தது.

அம்மா அவனை அறைந்திருப்பது புரியவே அவனுக்கு சில, பல வினாடிகள் தேவைப்பட்டது!