வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - பிந்து வினோத் : Veesum kaatrukku poovai theriyaathaa - Bindu Vinod
 

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - பிந்து வினோத்

பெண்களிடம் இருந்து விலகியே இருக்கும் ஷிவா, பெற்றோர் பார்த்து அவனுக்காக நிச்சயித்த அருந்ததியை விரும்பி மணக்கிறான்.

ஷிவாவின் அம்மா, அப்பா, அக்கா என அனைவருடனும் இயல்பாய் அன்பாய் பழகும் அருந்ததி, ஷிவாவிடம் மட்டும் விலகியே இருக்கிறாள். ஏன், என்ன என்று புரியாமல் குழம்புகிறான் ஷிவா.

அவனுடைய கேள்விக்கு பதில் கிடைத்ததா? அருந்ததியின் மனதில் இருக்கும் குழப்பம் என்ன?

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

 

 

௦1. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா?

பெங்களூரு நகரம் எப்போதும் போல் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. சாலைகளில் ஈயாக மொய்த்த வாகனங்களும், தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த ஹாரன் ஒலிகளும், அது ஒரு வார நாள் என்பதை பறைசாற்றியது.

பெங்களூருவின் தென் கிழக்கு பகுதியில் இருக்கும் கோரமங்களாவில் இருந்த அந்த ஆறு மாடி அலுவலக கட்டடத்திலும் அலுவலர்கள் தங்களின் அன்றைய வேலையில் ஆழ்ந்திருந்தனர். அந்த கட்டடத்தின் நான்காவது மாடியில் இருந்த குளிர் சாதனம் பொருத்தப் பட்ட அறையில் அமர்ந்திருந்த அஷோக், தன் எதிரே பிடிவாதம் முகத்திலும் தெரிய அமர்ந்திருந்த ஷிவா என அழைக்கப் படும் சிவக்குமாரை உற்று நோக்கி கொண்டிருந்தார்.

அந்த பார்வை எல்லாம் தன்னை அசைக்க முடியாது என்பது போல் அமைதியாக அந்த பார்வையை எதிர்கொண்டான் ஷிவா.

அந்த அறையில் இருந்த மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஷிவா, நீ இப்படி என்கிட்டே பேசுறதுக்கு நிறைய பின் விளைவுகள் ஏற்படலாம்.”

“வேலையை விட்டு எடுக்க போறீங்களா, ஷுயர் சார் உடனே செய்ங்க! நான் கஷ்டப் பட்டு கொண்டு வந்த ப்ராஜக்ட்டை நீங்க உங்களுக்கு பிடிக்கும்னு ராம்க்கு கொடுத்தீங்க. இப்போ அது சரியா போகலைன்னா, நான் உடனே ஹெல்ப் செய்யனுமா? நான் செய்ற வேலைக்கு தான் நான் கிரெடிட் எதிர்பார்க்கிறேன். நான் சரியா செய்யாத போது நீங்க கொடுக்குற பீட்பாக் எல்லாம் நான் அமைதியா கேட்டுக்குறது இல்லையா?”

“ஓகே ஓகே”

தன் கண்ணாடியை கழற்றி ஓரு சில வினாடிகள் சிந்தித்த அஷோக்,

“நீ சொல்றது ஒரு விதத்தில் சரி தான். உன் கிட்ட தான் நான் இந்த ப்ராஜக்ட்டை கொடுத்திருக்கனும். ஆனால் நம்ம பர்சனல் விஷயங்கள் இப்படி நமக்கு சம்பளம் தர கம்பனியை பாதிக்குற மாதிரி விடக் கூடாது.”

“அது போல் எல்லாம் ஆக விட மாட்டேன் சார். உங்களுக்கே என்னோட கமிட்மென்ட் பத்தி தெரியும். இப்போ நீங்க சொன்ன உடனே நான் எதுவும் கேட்காமல் எடுத்து இந்த வேலையை செய்திருந்தா என்னோட பக்கம் இருக்கும் ஆதங்கம் உங்களுக்கு புரியாமல் போய் இருக்கும்.”

“புரியுது, உன்னுடைய வெளிப்படையான பேச்சை நான் பாராட்டுறேன். இனிமேல் நம்ம டீம் உள்ள எந்த பாலிடிக்ஸும் வராமல் பார்த்துப்போம்.

“ஷுயர் சார்!”

அறையினுள் இருந்த மற்றவர்களை பார்த்த அஷோக்,

“என்ன நீங்க எல்லாம் அமைதியா இருக்கீங்க?” என்றார்.

அதுவரை அஷோக்கும் ஷிவாவும் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்,

“நாங்களும் ஹெல்ப் செய்வோம் சார்” என்றனர் கோரஸாக!

ன்னுடைய கேபினுக்கு திரும்பி வேலையில் தன்னை ஆழ்த்திக் கொள்ள தொடங்கிய ஷிவாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிடுக்கும், சாமர்த்தியமும் நிறைந்த ஆணழகன். கிட்டத்தட்ட ஆறடி உயரத்தில் இருந்தவனின் வசீகர கண்கள் யாரையும் ஒரு வினாடி தடுமாற செய்யும். உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஏ & ஏ நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணிபுரிபவனுக்கு மாதம் தேவைக்கு மிகவும் அதிகமாகவே சம்பளம் வந்தது. பெற்றோர் மற்றும் ஒரே சகோதரி சென்னையில் இருக்க, வேலை காரணமாக பெங்களூருவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கி இருக்கிறான்.

வேலை சுறுசுறுப்பாக நடக்க, மணி ஐந்தை தாண்டி இருப்பதை உணர்ந்து வீட்டுக்கு கிளம்புவதை பற்றி அவன் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், அவனுடன் பணி புரியும் அஸ்வினி தயக்கத்துடன் வந்து நின்றாள்.

“ஹலோ அஸ்வினி, இன்னும் கிளம்பலையா நீங்க?”

“கிளம்பனும் ஷிவா! நீங்க கிளம்பியாச்சா?”

“எஸ்! இன்னும் அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்து பார்த்திருந்தீங்கன்னா நான் எஸ்கேப் ஆகி இருப்பேன். சொல்லுங்க என்ன விஷயம்?”

“நத்திங் ஸ்பெஷல் ஷிவா! நீங்க இன்னைக்கு ஈவ்னிங் பிஸியா?”

அதுவரை இயல்பாக பேசிக் கொண்டிருந்த ஷிவாவின் உதடுகளில் இருந்த புன்னகை மறைந்தது. எதிரில் நின்றவளை உற்று பார்த்தவன்,

“எதுக்கு கேக்குறீங்க?” என்றான்.

“ஈவ்னிங் க்ளோஸ் பிரெண்ட்ஸ்க்கு பர்த்டேக்கு ட்ரீட் தரேன்! நீங்களும் ப்ரீயா இருந்தால் இன்வைட் செய்யலாம்னு நினைச்சேன்.”

“பிரெண்ட்ஸ் பார்ட்டியில் நான் எதுக்கு? நீங்க என்ஜாய் செய்ங்க”