உன் காதல் இருந்தால் போதும்...! - பிந்து வினோத் : Un Kadhal irunthal pothum...! - Bindu Vinod
 

உன் காதல் இருந்தால் போதும்...! - பிந்து வினோத்

எளிமையான ஆனால் இனிமையான காதல் கதை.

குடும்பம் - காதல் சார்ந்த பொழுதுபோக்கு + ஜனரஞ்சக கதை.

 

அத்தியாயம் 1

ல நாட்களாக பார்க்க ஆசைப் பட்ட திற்பரப்பு அருவியை கண்கொட்டாமல் பார்த்து ரசித்தாள் சௌந்தர்யா.

அருவி அழகு என்றால், கொட்டி முடித்து கோதை ஆறாக ஓடும் அந்த நீரின் அழகு கண் கொள்ளாத காட்சியாக இருந்தது!

ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே

சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?

மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்

வழியுது வழியுது வெள்ளை அருவி

அருவியை முழுவதும் பருகிவிட

ஆசையில் பறக்குது சின்னக்குருவி

பழைய ‘ஆசை’ திரைப்பட பாடலை தானாக அவளின் இதழ்கள் முனுமுனுத்தது!

தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருந்த தோழிகளில் ஒருத்தியின் பார்வை இவள் பக்கம் விழுந்தது.

“ஹேய் பார்த்துடி சௌந்தர்யா! அப்படியே அருவியை விழுங்கிடுவ போல இருக்கே. பார்த்தது போதும் வா வா நாம எல்லோரும் ஒன்னா போட்டோ எடுக்கலாம்”

“ப்ச் எனக்கு போட்டோ எல்லாம் வேண்டாம் நீங்க எடுத்துக்கோங்க”

“ஒரு ஞாபகத்துக்காக தானேடி, வா”

“எனக்கு என் கண்ணு தான் கேமரா, அதை இமை எனும் ஷட்டர் வச்சு மூடாமல் நான் இந்த சீனரியை பார்த்துட்டே இருப்பேன்”

“உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு, ஒழுங்கு மரியாதையா வா”

சௌந்தர்யாவின் மறுப்பை சட்டை செய்யாமல் அவளின் கையை பிடித்து இழுத்து சென்றாள் மீனா.

ல்லூரியில் உடன் பயின்ற தோழி கவிதாவின் திருமணத்திற்காக சௌந்தர்யா, மீனா மற்றும் எட்டு தோழிகள் ஒன்றாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் அருமனை எனும் ஊருக்கு வந்திருந்தனர்.

கவிதா பல முறை அவளின் ஊரின் அருகே இருக்கும் இந்த திற்பரப்பு நீர்விழ்ச்சியை பற்றி சொல்லி இருக்கிறாள். சௌந்தர்யாவிற்கு இயற்கை எழிலில் எப்போதுமே ஒரு மயக்கம் உண்டு...

சென்னையில் இருந்து பேருந்தில் வரும் போது, விடி காலையில் நாகர்கோவிலை நெருங்கி விட்டதை பறைசாற்றிய அந்த மலை தொடரும், தாமரை குளங்களும், வளைவான சாலைகளும், வித்தியாசமான வீடுகளும் அவளை வெகுவாக கவர்ந்தன...

கவிதாவின் வீட்டிற்கு வந்த பிறகு கேட்கவே வேண்டாம்! அவளுக்கு அந்த ஊர் மிகவும் பிடித்து போனது! பார்க்கும் திசை எங்கும் பச்சை பசலேன கண்ணை கவரும் மரங்கள், செடிகள்... மாமரம், பலா மரம், ஐனி மரம் என இதுவரை அவள் பார்த்தே இராத மரங்கள்... ரப்பர் தோட்டங்கள்... மலையாளம் கலந்த தமிழ்... அனைவரையும் நட்பாக, உறவினராக பாவிக்கும் மக்கள்...

சௌந்தர்யா இந்த ஊரில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் ஏனும் வாங்கி விடுவது என மனதினுள் முடிவு செய்துக் கொள்ளும் அளவிற்கு அவளுக்கு அந்த ஊரை மிகவும் பிடித்திருந்தது.

ஒரு மாவட்ட ஆட்சியரினால் தொடங்கப் பட்ட திட்டத்தினால், இப்போது கடைகளில் மட்டுமில்லாமல் மக்களும் பிளாஸ்டிக் பையை தவிர்க்கும் சமுக பொறுப்புணர்ச்சி அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது... பிளாஸ்டிக் பைகள் உபயோகப் படுத்தாத மாவட்டமாக நாகர்கோவிலை உருவாக்க திட்டம் தொடங்கிய கலக்டர் ராஜேந்திர ரத்னூவிற்கு சிலையே வைக்கலாம்!!!

ந்த எண்ணம் வந்த உடனேயே காலையில் நடந்த நிகழ்ச்சி அவளின் மனதில் தோன்றியது. சுற்றுலாவிற்காக என மற்றவர்கள் நொறுக்கு தீனி வாங்க, சௌந்தர்யா, திராட்சை பழங்கள் வாங்க அந்த சிறிய பழ கடைக்கு சென்றாள்.

பேப்பரில் அவளுக்காக திராட்சையை சுற்றி சிறு ரப்பர் பேன்ட் போட்டு அவளிடம் அந்த கடைக்காரர் நீட்டிய வேளையில், யாரோ கிட்டத்தட்ட மேலே விழுந்து விடுவது போல் அவள் மீது வந்து மோதினார்கள்... கோபத்துடன் திரும்பி பார்த்தால் ஒரு இளைஞன் நின்றிருந்தான்...

அவள் கோபமாக ஏதோ சொல்ல துவங்கும் முன்,

“சாரி சாரி, கிழே இருந்த பழத் தோலில் வழுக்கிடுச்சு, சாரிங்க...” என்றான் அவன் அவசரமாக.

தன் மீது வந்து மோதியதற்கு கோபம் இருந்த போதும், அவன் பேசிய போது சட்டென்று எதுவும் சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை...