கங்கை ஒரு மங்கை - ரவை : Gangai oru Mangai - RaVai
 

கங்கை ஒரு மங்கை - ரவை

 

ரவை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு - 7

01. அவ ரொம்ப பாவம்மா!

02. தாய்க்கு செய்த பிராயச்சித்தம்!

03. நாத்திகரா, ஆத்திகரா?

04. பறிபோன பரிவட்டம்!

05. அலகிலா விளையாட்டுடையான்!

06. கங்கை ஒரு மங்கை

07. பாட்டியின் மனக்குறை

08. எல்லோரும் நல்லவரே!

09. அதற்குப் பெயர் தியாகமல்ல!

10. புதிய போர்வீரன்!

 

அவ ரொம்ப பாவம்மா!

நம்மிலே ரொம்ப பேருக்கு இன்னமும் இந்த நாட்டு மக்களை ஏழ்மை எப்படி பாதிக்கிறது, என்று தெரியவேயில்லை.

பொதுவாக, நாம் நமக்கு மேலே வசதியாக வாழ்கிறவங்களை பார்க்கிறோமே தவிர, நம்மைவிட மோசமான நிலைமையில் வாடுபவர்களைப்பற்றி சிந்திப்பதேயில்லை.

" என்னம்மா! ரொம்ப யோசனையிலே இருக்கீங்க!........."

அப்போதுதான், நான் சிந்தனையிலிருந்து விடுபட்டு, நிமிர்ந்து பார்த்தேன். என் வீட்டில் வேலை செய்யும் லச்சுமி!

அவளுக்கு லக்ஷ்மி என்று அழகான பெயரைத்தான் வைத்திருப்பார்கள். ஆனால், பழக்கத்தில், அது திரிந்து, சிதைந்து, லச்சுமி ஆகிவிட்டது.

அவளுக்கு அதைப்பற்றியெல்லாம், சிறிதும் கவலையேயில்லை.

" எப்படிக் கூப்பிட்டா என்னம்மா? பெயரிலே என்னம்மா இருக்கு? 'ஏய்'னு கூப்பிட்டாக்கூட ஓடிவருவேன்........"

அவளைப் பார்த்தால், எனக்கு மலைப்பாக இருக்கும். அவளைப்பற்றி விவரங்கள் சொன்னால், உங்களுக்கும்கூட அப்படி இருக்கும்!

அவ புருஷனுக்கு ஒரு கண்ணில் பார்வையில்லை! அதனால் படிப்பில்லை, அதனால் வருமானம் அதிகம் இல்லை, அவனை கல்யாணம் செய்துகொள்ள எந்தப் பெண்ணும் தயாராயில்லை!

லச்சுமி எப்படி அவனை கணவனாக ஏற்றுக்கொண்டாள் என்று கேட்கிறீர்களா?

அதை, அவளையே சொல்லச் சொல்கிறேன், கேளுங்கள்!

" என்னைப் பெத்துப் போட்டுட்டு எங்கம்மா செத்துப்போயிடிச்சி, எங்கப்பன் எனக்கு ரெண்டு வயசிலே, ஓடிப்பூடிச்சி, என்னை வளர்த்தது, என் பாட்டியும் தாத்தாவும்!

அவங்க பிழைப்பை எப்படி நடத்தினாங்கன்னு கேட்கிறீங்களா? பிச்சையெடுத்துத்தான்! ஏன்னா தாத்தாவுக்கு ரெண்டு கண்ணும் குருடு! பாட்டிக்கு இடுப்புக்கு கீழே சொரணை கிடையாது!

வடபழனி முருகன் கோவில் வாசல்தான் அவங்க இருக்கிற, பிழைக்கிற, சாப்பிடற, தூங்கற இடம்!

அவங்க என்னை எப்படி வளர்த்தாங்கன்னு கேட்கிறீங்களா? அவங்களோட, என்னையும் குந்தவைச்சுப்பாங்க, " ஐயா சாமி! தர்மம் பண்ணுங்க!" ன்னு குரல் கொடுத்து பிச்சையெடுக்க கத்துக்கொடுத்தாங்க.

ஆறு,ஏழு வயசுவரையிலும் அவங்ககூடத்தான் இருந்தேன். அவங்கதான் சொன்னாங்க, " அக்கம்பக்கத்து வீடுகளிலே போய் வீட்டுவேலை செய்யறேன், சாப்பாடு போட்டா போதும்னு சொல்லு! நிச்சயமா வேலை கிடைக்கும், போகப்போக, துணிமணி எடுத்துக் கொடுப்பாங்க, அவங்க வீட்டில தங்க இடம் தருவாங்க, பிழைச்சுக்கப் போ!"

அப்படி வளர்ந்தவ நான். நான் வேலை செஞ்ச இடங்களிலே நல்லவங்க, கெட்டவங்க ரெண்டுபேருமே இருந்தாங்க, நான் வயசுக்கு வர்றதுக்கு முன்னியே, என்னை கெடுத்த மகராசன்கள் உண்டு, அதே சமயம் என்னை பெத்த மவ போல கவனிச்சிக்கிட்டவங்களும் உண்டு!

ஏம்மா! எங்களை மாதிரி அனாதைங்களுக்கு என்னம்மா தெரியும்? சொன்ன வேலையை செய்வோம், கொடுத்ததை திம்போம், கிடச்ச இடத்துல படுத்து உருளுவோம், அப்படி படுத்திருக்கிறபோது எது நடந்தாலும் ஏத்துக்க வேண்டியதுதான்!

கட்டிக்கிட்டேன் அவரைன்னு சொன்னா, என்னமோ, உங்க வீட்டிலே எல்லாம் நடக்குமே, மண்டபத்திலே மக்களைக் கூட்டி, ஐயரு மந்திரம் சொல்லி, தாலி கட்டறாப்போல இல்லே, தெருவோரமா இருட்டிலே சேர்ந்துக்குவோம், ரெண்டுபேரும் எப்பவும் ஒண்ணா இருப்போம், அதுதான் எங்க கல்யாணம், கூட இருந்தவன் ஓடிப்பூட்டான்னா, கிடைச்சவனை சேர்த்துப்போம், அப்படி சேர்த்துக்கிட்டவன்தாங்க இப்பவும் கூட இருக்கிற அந்த ஒத்தைக் கண்ணன்!"

" சேர்த்துக்கிறவனை ரெண்டு கண்ணும் பார்வை உள்ளவனா பார்க்கிறதுதானே?"

" ரெண்டு கண்ணும் உள்ளவன் என்மேல ஒரு கண்ணுதானே வைச்சிருப்பான், இன்னொரு கண்ணு ஊர் மேயும், என்னிக்கு வேணும்னாலும் காணாமல் பூடுவான், அதனால தான் ஒத்தக் கண்ணனை பிடிச்சேன், இப்ப அவன்தான் நான் அவனை விட்டுப் போயிடுவேனோன்னு பயப்படணும், இல்லீங்களா?"

அவளுடைய லாஜிக் புரிந்தாலும், இப்படிப்பட்ட வாழ்க்கையில் எப்படி அவளால் எப்போதும் சிரித்துக்கொண்டிருக்க முடிகிறது?

நான் அவளைப்பற்றி வியக்கையில், அவள் எனக்கு அதிர்ச்சி தந்தாள்.

" அம்மா! எத்தனையோ பேரை பார்க்கிறபோது, சாமி என்னை எத்தனை நல்லா வச்சிருக்காருன்னு பிரமிப்பா இருக்கும்மா!"

" உன்னை நல்லா வச்சிருக்காரா! என்னடீ சொல்றே?"