Chillzee KiMo Books - கடல் நிலவு - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Kadal nilavu - Srija Venkatesh

கடல் நிலவு - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Kadal nilavu - Srija Venkatesh
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 02

Story Name - Kadal Nilavu

Author Name - Srija Venkatesh

Debut writer - No


கடல் நிலவு - ஸ்ரீஜா வெங்கடேஷ்

கடல் நிலவு என்ற இந்த நாவல் பல தளங்களிலும் பயணிக்கும் ஒரு சுவாரசியமான கதை. இன்றைய மாடர்ன் இளைஞர்களான அஸ்வின், மதன், ராகவ் என்பவர்கள் மனம் வெறுத்து தற்கொலைக்கு முயலும் போது முன் பின் தெரியாத ஒரு பெரியவர் அவர்களைக் கடல் பயணம் மேற்கொள்ள சொல்கிறார். அவர்களும் சொகுசுக் கப்பலில் அந்தமான் தீவுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்தமான் சென்றார்களா? நடுக்கடலில் அவர்களுக்கு என்ன ஆனது? கற்பகத்தீவு என்பது என்ன? அங்கே அவர்களுக்கு ஏற்படும் பல விசித்திர சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. மீனாம்பிகை, முத்தழகி மற்றும் சங்கு புஷ்பம் என்ற மூன்று இளம் பெண்கள் இவர்களோடு நெருக்கமாகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையிலேயே நல்லவர்கள் தானா? மாய மந்திரங்கள் தெரிந்த மாயாவிகளா? இறுதியில் மூன்று நண்பர்களுக்கு என்ன ஆனது? அதைப் பற்றித்தான் விரிவாகப் பேசுகிறது கதை. ஒவ்வொரு அத்தியாயமும் உங்களை பதட்டம் கொள்ள வைக்கும். மிகவும் விறுவிறுப்பான நாவல் இது.

 

அத்தியாயம் 01.

மாலை மயங்கும் நேரம். சென்னை மெரீனா கடற்கரையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. காரணம் சற்று முன்பு வரை மழை பெய்திருந்ததுதான். மழையையும் பொருட்படுத்தாமல் சில காதலர்களும், மீனவர்களும் தங்கள் வேலையிலேயே குறியாக இருந்தனர். இவர்கள் பார்வைக்கு அகப்படாமல் சற்று தொலைவில் மணற் பரப்பில் மூன்று இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். நீண்ட நேரமாக அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும் என்பதை அவர்களது ஈர உடைகள் பறை சாற்றின. ஒரு முக்கோண வடிவில் அமர்ந்திருந்தனர் அந்த மூவரும். முகத்திலோ துளியும் மகிழ்ச்சி என்பதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கண்கள் சோகத்தைக் கொட்டின. அவர்களுக்கு வயது மிஞ்சிப்போனால் இருபத்துஆறுக்குள் தான் இருக்கும். மூவருமே உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக உடலை வைத்திருந்தனர். கரங்களும் உதடுகளும் எங்களுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என பறை சாற்றின. கடலுக்கு முதுகைக் காட்டியபடி அமர்ந்திருப்பவன் தான் மதன். அளவான உயரம், மாநிறம், பெண்களுக்கு இருப்பதைப் போல கரிய நீளமான கண்கள். அவனுக்கு வலப்பக்கம் செக்கச் சிவந்த நிறத்தில் வட இந்திய ஹீரோக்கள் சாயலில் மீசையே இல்லாமல் அமர்ந்திருப்பவன் ராகவ். இடப்பக்கம் அமர்ந்திருப்பவன் தான் அஸ்வின். ஆறடிக்குக் குறையாத உயரம். கொஞ்சம் கறுப்போடு சேர்த்தி தான் என்றலும் களையான முகம். ஆனால் இப்போது மூவரின் முகங்களும் வாடிக் கறுத்துக் காணப்பட்டன. மௌனத்தைக் கலைத்தான் ராகவ்.

"இன்னும் நல்லா இருட்டட்டுமா? அப்பத்தான் நாம கடல்ல மூழ்கி தற்கொலை செஞ்சுக்கப்போறது யாருக்கும் தெரியாது" என்றான். வெறுப்பும் கசப்பும் வழிந்தன அவன் குரலில். வெறுமே தலை ஆட்டினர் நண்பர்கள்.

இந்த இள வயதில் வாழ வேண்டிய பருவத்தில் தற்கொலை செய்து கொள்ளும் அளவு என்ன பிரச்சனை அவர்களுக்கு?

முதலில் மதனை எடுத்துக்கொள்வோம். பெற்றோருக்கு இரண்டாவது மகன். அண்ணன் ஒருவன் இருக்கின்றான். அவன் படிப்பு விளையாட்டு, நடனம் என எல்லாவற்றிலும் திறமை மிக்கவனாக பெற்றோரும் ஆசிரியரும் போற்றும் மாணவனாக திகழ்ந்தான். மதனும் படிப்பிலோ விளையாட்டிலோ குறைந்தவன் அல்ல என்றாலும் அவனது பெற்றோர்கள் எப்போதும் அண்ணனையே தூக்கி வைத்துப் பேசியதால் தன்னை தன் பெற்றோர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்னும் ஐயம் அவனுக்குள் எப்போதும் உண்டு. அதனை நீக்க அவன் பெற்றோர்களும் முயற்சி செய்யவில்லை என்பது தான் கொடுமை. இன்னும் சொல்லப் போனால் தங்களது இரண்டாவது மகனுக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கக் கூடும் என்பதையே யோசித்தவர்கள் இல்லை அவர்கள்.

அவர்களைப் பொறுத்தவரை மதன் ஒரு நல்ல பையன் ஆனால் குழந்தை. அவனுக்கு எதுவும் தெரியாது. அண்ணனின் நிழலாகவே அவனைப் பார்த்தனர். அதனால் அவனுக்குள் தான் எப்போதுமே இரண்டாவது தான் என்ற தாழ்வு மனப்பான்மை வேர் விட்டு கிளை விரித்து வளர்ந்தது. தனக்கு உரிய அங்கீகாரமும், அன்பும், பாராட்டும் எப்போதும் கிடைப்பதில்லை என்பதால் அதனை வெளியிடங்களில் தேடினான். பள்ளி நாட்களில் அறிமுகம் ஆனவர்கள் தான் ராகவும், அஸ்வினும். ஏனோ ராகவுக்கும் , அஸ்வினுக்கும் மதனை பார்த்த பாத்திரத்தில் பிடித்து விட்டது. மூவரும் யாராலும் பிரிக்க முடியாத நண்பர்கள் ஆனது மூன்றாம் வகுப்பு முதல் தான். அப்போதிலிருந்து கல்லூரியில் பொறியியல் வரை ஒன்றாகவே படித்தனர். வேலைக்காக மட்டுமே வெவ்வேறு கிளைகள் தேடி அமர்ந்தனர்.

மதனின் பெற்றோர்களும் பெரிதாக தங்களது இரண்டாவது மகனைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை என்பதால் எந்நேரமும் நண்பர்களுடனேயே சுற்றுவதும் அவனுக்கு எளிதாயிற்று. அவனது விருப்பு வெறுப்பு ஆசை லட்சியம் இவை நண்பர்களுக்குத் தெரிந்த அளவு கூட பெற்றோருக்குத் தெரியாது. இந்த நிலையில் தான் இரு ஆண்டுகள் முன்பு மதனின் அண்ணனுக்கு மிக அழகான பணக்காரப் பெண்ணோடு கல்யாணம் நடந்தது. அவனுக்கு அதில் பொறாமை எல்லாம் இல்லை. அண்ணனின் வெற்றிப்படிகளில் இதுவும் ஒன்று என நினைத்தான். தனியாகத் தொழில் தொடங்க பெண் வீட்டார் பணம் கொடுக்க அவன் மேலும் முன்னேறினான். தொழிற்சாலைக்குப் போய் வர வசதியாக இருக்குமென்று வேறு வீடெடுத்துப் போய் விட்டான்.

அந்த நேரத்தில் தான் மதனுக்கு ஒரு வெளி நாட்டு ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. மூளையைக் குழப்பும் பணி. ஆனாலும் இவன் செவ்வனே செய்தான். அதற்கேற்ற ஊதியமும் கிடைக்க ஒரு வழியாக தானும் வாழ்க்கையின் வெற்றிப்படிகளில் ஏறத் தொடங்கி விட்டதாகவே நினைத்தான். அம்மாவும் அண்ணன் இல்லாததால் இவன் மீதி கவனம் செலுத்தவே மகிழ்ச்சி இரு மடங்கானது. அதைக் காண அவன் விதிக்கே பொறுக்க முடியவில்லையோ என்னவோ அவனுக்கு அலுவலகத்தில் பிரச்சனைகள் ஆரம்பமாயின. அவனுக்கு மேல் இருந்த அதிகாரி வட இந்தியர் என்றாலும் மதனின் திறமை மேல் நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருந்தார்.