Chillzee KiMo Books - தோழியா! என் காதலியா! - பிந்து வினோத் : Thozhiya! En kadhaliya! - Bindu Vinod

தோழியா! என் காதலியா!  - பிந்து வினோத் : Thozhiya! En kadhaliya! - Bindu Vinod
 

தோழியா! என் காதலியா! - பிந்து வினோத்

பிந்து வினோத் எழுதிய 5 சிறுகதைகளின் தொகுப்பு.

 

01. என் சுவாசக் காற்றே!

ங்க...”

அவசரமாக கிளம்பி நடந்துக் கொண்டிருந்த அனிருத், மனைவியின் தயக்கமான அழைப்பைக் கேட்டு எரிச்சலோடு பார்த்தான்.

“என்ன சௌமி?”

அவனின் குரலில் ஒலித்த அவசரமும், எரிச்சலும் எதிர்பார்த்தது தான் என்பதால் அதனால் பெரிதாக பாதிப்படையாமல்,

“சாயந்திரம் கோவிலுக்கு போகனும்...” என்றாள் சௌம்யா மென்மையாக.

“நான் ஆறு மணிக்குள்ள வரலைன்னா நீ எனக்காக காத்திருக்காமல் போயிட்டு வந்திரு... அப்பாவிடம் டிரைவர் அரேன்ஜ் செய்து தர சொல்லு...”

அரை மனதுடன் தலை அசைத்தவள்,

“அப்புறம்...”

என்று ஏதோ சொல்ல தொடங்கவும், அதை கேட்க பொறுமை இல்லாதவனாக,

“எதுவா இருந்தாலும் அப்புறம் கேட்கிறேன், எனக்கு இன்னும் அஞ்சு நிமிஷத்தில் ஒரு கால் இருக்கு... டிரைவ் செய்துட்டே நான் அட்டென்ட் செய்யனும்...”

சொல்லிவிட்டு அவளின் பதிலுக்கும் காத்திருக்காமல் அவசரமாக நடந்தான் அனிருத்.

காரில் ஏறி மொபைல் ஹெட்செட் மாட்டிக் கொண்டு அவன் கிளம்புவதை இமைக்காமல் பார்த்திருந்தாள் சௌம்யா.

இந்த அப்புறம் ‘எப்புறம்’ என்பது இன்று வரை அவளுக்கு புரியாத புதிர்! இது கிட்டத்தட்ட தினமும் நடக்கும் நிகழ்வு தான்... ஒன்றிரண்டு நாட்கள் என்றில்லாமல் அவள் திருமணமாகி இந்த வீட்டிற்கு வந்த நான்கு வருடங்களாகவே நடப்பது தான்...

ற்ற பெண்களை போலவே திருமண வாழ்வு பற்றி சௌம்யாவிற்கும் பல கனவுகள் இருந்தது... இயல்பாகவே இனிய குணம் உள்ளவள் என்பதால் மட்டுமல்லாமல் ஒரு நடுத்தர குடும்பத்தில் மூத்த மகளாக பிறந்திருந்ததாலும், பொறுப்பும், விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவமும் அவளுக்கு இருந்தது...

சௌம்யாவின் அம்மா நித்யாவும், அனிருத்தின் அம்மா பத்மினியும் கல்லூரி தோழிகள். பல வருடங்கள் கழித்து எதிர்பாராமல் தோழிகளுக்கிடையில் நேர்ந்த சந்திப்பு அவர்களின் நட்பை புதிப்பித்ததோடு மட்டுமல்லாமல் அனிருத் சௌம்யாவின் திருமணத்தையும் நடத்த காரணமாக இருந்தது.

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக இருந்த அனிருத்திற்கு முதல், இரண்டாம், மூன்றாம் மனைவி எல்லாம் அவனின் வேலை தான்... அவனுடைய அயராத உழைப்பினால். திறமையினால் இளம் வயதிலேயே மேலாளர் பதவியை பெற்றிருந்தான் அவன்...

திருமணமான சில நாட்களிலேயே சௌம்யாவிற்கு அனிருத்தின் குணநலன்கள் புரிந்து போனது... இன்றைய கால இளம்பெண்களை போலவே சௌம்யாவிற்கும் மனதில் பலவிதமான ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் இருக்க தான் செய்தன... ஆனால் பத்மினியின் வாயிலாக அனிருத்தின் மனதை அறிந்துக் கொண்டாள்...

அனிருத்தின் பெற்றோர் அரசு பணியாளர்களாக இருந்தவர்கள் ஆனால் அவர்களின் சகோதர சகோதரிகள் சற்றே பணம் படைத்தவர்களாக இருந்தனர். பணவசதியின் அடிப்படையில் பலமுறை அவனுடைய வயதை ஒத்த பெரியப்பா சித்தப்பா பிள்ளைகளினால் கிண்டலுக்கு ஆளாகி இருந்த அனிருத்திற்கு வாழ்க்கையில் பெரிய நிலையை அடைய வேண்டும் என்ற வெறி ஏற்பட்டிருந்தது... வேலையில் சாதித்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று அவன் விரும்பினான்... அதற்காகவே அயராது உழைத்தான்...

இந்த விபரங்கள் தெரிந்த பின், மனதை தேற்றிக் கொண்டு, கணவனுக்கு உறுதுணையாக இருக்கும் ஒரு நல்ல மனைவியாக, வீட்டிற்கு ஒரு நல்ல மருமகளாக நடந்துக் கொண்டாள் சௌம்யா...

கணவன் தன்னைக் கண்டுக்கொள்ளாமல் இருப்பது மனதை வருத்திய போதும், சௌம்யா நச்சரிக்கும் மனைவியாக மாறவில்லை... திருமணமான முதலாம் ஆண்டிலேயே பிறந்த அவர்களின் குழந்தை ஸ்ரேயாவிடம் தன் மொத்த அன்பையும் பாசத்தையும் கொட்டி வளர்த்தாள்...