ரோஜா மலரே ராஜக்குமாரி...! - பிந்து வினோத்
ஹாய் ஃபிரென்ட்ஸ், இப்போதும் இருக்கும் அரசக் குடும்பங்கள் பற்றி படிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பொழுதுபோக்கு. அப்படி இன்றைய மாடர்ன் அரசக் குடும்பத்தினரை பற்றிய செய்திகள் படிக்கும் போது, இது போல மாடர்ன் ஆனால் ட்ரேடிஷ்னல் அரச குடும்ப பின்னணியில் ஒரு காதல் கதை எழுதினால் என்ன என தோன்றிய எண்ணத்தின் விளைவு தான் இந்த காதல் கதை :-)
கதையை முடித்து விட்டு, மீண்டும் படித்து எடிட் செய்தப் போது, என்னுடைய கதை தானா என எனக்கே சந்தேகத்தை கொடுத்த கதையும் கூட :-) எனக்கு வித்தியாசமான அனுபவம்! உங்களுக்கும் இந்த கதை அதே இனிய + வித்தியாசமான உணர்வை கொடுக்கும் என்று நம்புகிறேன் :-)
அத்தியாயம் – 01
ஆண்டு - 2019
இடம் - சேனைத் தீவு *
“நமச்சிவாய! நமச்சிவாய! அந்த ஈஸ்வரன் உங்களுக்கு சக்தியையும், ஞானத்தையும் கொடுக்கட்டும்!’ என தன் காலில் விழுந்து வணங்கிய ரோஹினியை, மனமார வாழ்த்தினார் ரோஷன்.
நிமிர்த்து நேரே நின்ற ரோஹினி, கண்களை எட்டாத புன்னகையுடன்,
“வணக்கம் தாத்தா!” என்றாள்.
தன்னுடைய சொந்த பேத்தியைப் போல அவர் தூக்கி வளர்த்த ரோஹினியின் முகத்தில் இருந்த வருத்தம் ரோஷனின் மனதையும் வருத்தியது.
அவர்கள் இருக்கும் சேனைத் தீவு* பசிபிக் பெருங்கடலின் நடுவே இருக்கும் ஒரு சிறிய தீவு.
சர்வதேச அளவில் புகழ்ப்பெற்ற சுற்றுலா தளமாகவும், கடல் தொடர்பான உணவுகளுக்கு பிரபலமானதாகவும் இருக்கும் தீவு அது.
அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்தாலும் இருபத்தி ஓராம் நூற்றாண்டான இந்த காலத்திலும் அமைதியான மன்னராட்சியே அங்கே நடந்து வந்தது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் சோழர்களுடன் வர்த்தக ரீதியாக நெருக்கமான உறவு கொண்டிருந்ததால் இப்போதும் தமிழை முக்கிய மொழியாக பேசும் தீவாக இருந்தது.
சேனைத்தீவின் மன்னராக இருந்த ரோஹினியின் தந்தை ரஞ்சன் பத்து வருடங்களுக்கு முன் இறந்த பிறகு அவரின் மனைவி ராணி ரேவதியே ராஜாங்க விஷயங்களை கவனித்து வந்தார்.
திடீரென மாரடைப்பில் ரேவதி இறந்து விட ரோஹினி தாயையும், சேனைத்தீவு ராணியையும் இழந்து நின்றது!
இருபத்தி ஐந்து வயதில் பெற்றோரை இழந்து நிற்கும் ரோஹினியின் நிலையை எண்ணி ஆதங்கப் பட்டார் ரோஷன்.
ஆனால் இப்போது அவளுக்காக வருத்தப் பட்டுக் கொண்டு நிற்கும் நேரமில்லை என்பதை உணர்ந்தவராக,
“இளவரசி, உங்களுக்கு தெரியாதது இல்லை. உங்க அம்மா ராணி ரேவதி இறந்ததினால் நம்ம தீவு ராஜா, ராணி இல்லாமல் அனாதையாக இருக்கு. இந்த நேரத்தில் இளவரசியான நீங்க தான் ராணியாக மூடி சூடனும். ஆனால் உங்களுக்கு ராஜாங்க விஷயங்களில் அனுபவம் இல்லை. அதனால நீங்க நம்ம தளபதி விக்கிரமாதித்தனை கல்யாணம் செய்துக்கிட்டா உங்களுக்கும் நல்லது, நம்ம தீவுக்கும் நல்லது” என்றார் திடமான குரலில்.
ரோஹினியின் முகத்தில் கோபம் எட்டிப் பார்த்தது.
“என்ன தாத்தா பேசுறீங்க? நாம என்ன பதினெட்டாவது நூற்றாண்டிலா இருக்கோம். 2019ஆம் வருஷத்தில வந்து இப்படி சொல்றீங்க? என் கல்யாணம் என் விருப்பம் போல தான் நடக்கும்”
“இளவரசி நீங்க சொல்வது சாதாரண விஷயங்களுக்கு சரி தான். உலகத்துல பெண்கள் தனியாகவே எவ்வளவோ செய்றாங்க. ஆனால் ஆயிரகணக்கான மக்களுக்கு ராணியா இருந்து தலைமை தாங்குறது என்பது வேற. உங்களுக்கு அதில் அனுபவம் இல்லை. விக்ரம் ரொம்ப நல்லவர். இந்த தீவுக்காகவே எதையும் செய்பவர்”
“என்னை கல்யாண செய்துக்குற தியாகத்தையும் செய்வார்!!!”
“இப்படி பிடிவாதம் பிடித்தால் எப்படி இளவரசி?”
இந்த கேள்வியை அவர் கேட்டப் போது,
“ஹ்க்கும்...” என யாரோ தொண்டையை சரி செய்யும் ஓசைக் கேட்டது.
ரோஹினி, ரோஷன் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.
அங்கே விக்ரம் நின்றிருந்தான்.
முப்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் விக்ரமின் தோற்றத்தில் எந்த குறையையும் காண ரோஹினியால் முடியவில்லை.
ஆறடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் தான் இருந்தான்.
நிமிர்ந்து நேராக அவளின் கண்களை பார்க்கும் அந்த கண்களில் நேர்மையும், கூர்மையும் பளிச்சிட்டது!
அவன் குணத்தை பற்றியும் அவள் இதுவரை தவறாக கேள்வி பட்டதில்லை.
ஆனால் திருமணம் என்பது வேறு விஷயம்!
ஏனோ விக்ரமை அவளுடைய கணவனாக நினைத்துப் பார்க்க கூட அவளால் முடியவில்லை.
* - கற்பனைத் தீவு