யார் அறிவார்! - ரவை : Yaar arivaar - RaVai
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 07

Story Name - Yaar Arivaar

Author Name - RaVai

Debut writer - No


யார் அறிவார்! - ரவை

முன்னுரை

முதற்கண், தமிழ் இலக்கியத்துக்கு பெரும் தொண்டாற்றிவரும், சில்சீ-கிமோக்கு இந்த எண்பத்துநான்கு வயதான முதியவனின் பணிவான வணக்கங்கள்.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக, இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுவதையே மூச்சாக கொண்டு, ஏராளமான தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதைகள், ஜோக்குகள், கட்டுரைகள், பல்சுவை குறிப்புகள் வெளியிட்டு உலகமெலாம் வாழும் தமிழ் இனத்துக்கு சங்கப்பலகையாக விளங்குகின்றார்கள், சில்சீ-கிமோ!

அத்தகையவர்கள், எழுத்தாளர்களை ஊக்குவிக்க, நாவல் போட்டி அறிவித்ததும், அவர்களின் நல்லெண்ண முயற்சி அமோக வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, இந்த நாவலை சம்ர்ப்பிக்கிறேன்!

இது என் கன்னி முயற்சி! நான் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் படைத்திருந்தாலும், நாவல் படைக்க நினைத்ததேயில்லை!

குறைந்தது முப்பதாயிரம் சொற்கள் இருக்கவேண்டும், என்ற நிபந்தனை சற்று கடினமானதுதான்!

இந்த நாவலுக்கு முன்பு, இரண்டு முயற்சிகளில் இந்த நிபந்தனையை நிறைவேற்ற முடியாமல், கைவிட்டேன்.

இது மூன்றாவது முயற்சி! இறைவன் அருளால், சுமார் முப்பத்திரண்டாயிரம் சொற்களில் படைத்துள்ளேன்.

இது ஒரு சமூக நாவல்! பல்வேறு தரப்பட்ட மக்களின் குணாதிசயங்களை

படம் பிடித்துக் காட்டவும், கோபதாபங்கள் எப்படி மனிதனை சீர்குலைய வைக்கின்றன என்பதை சொல்லவும், அடுத்த வினாடி என்ன நடக்கப்போகிறதென தெரியாத நிலையற்ற வாழ்வை சுட்டிக் காட்டவும் இந்த நாவலை படைத்துள்ளேன்.

நிகழ்காலத்தில் வாழவேண்டும், சாதி, மத பேதங்களை தவிர்க்கவேண்டும், செல்வம் சேர்ப்பதே வாழ்க்கையல்ல என்பதை உணரவேண்டும், நல்லது, கெட்டது மாறிமாறி வரும், கெட்டவனாக எந்த மனிதனும் பிறப்பதில்லை, போன்ற கருத்துக்களை ஆங்காங்கே தூவியிருக்கிறேன்.

பல்சுவை தர முயற்சித்திருக்கிறேன்.

வாசகர்களுக்கு மிகவும் நிறைவான உணர்வைத் தரும் என நம்புகிறேன்.

என்னை இந்த, முதுமைப் பருவத்தில், சில்சீ-கிமோ வாசகர்கள் மதுமதி, ஜெபமலர், வினோதயன், அதர்வா ஜோ போன்றவர்கள் ஊக்குவித்து எழுதவைத்தவர்கள்! அவர்கள் அனைவருக்கும் என் நன்றி!

ரவை

( ஆர்.வைத்தியநாதன்)

 

அத்தியாயம்-1

 

" இத பாருங்க! உங்க அக்கா மகன், எங்க அண்ணன் மகளை சைட் அடிக்கிறான் போலிருக்கு, சொல்லிவைங்க! அதெல்லாம் எட்டாக்கைனு! எங்கண்ணன் பெரிய பணக்காரன்! உங்க அக்காவோ அன்னாடங்காய்ச்சி!"

 "மீரா! உங்கண்ணன் பணக்காரன்னு பெருமை அடிச்சுக்காதே! எங்க அக்காவை ஏழைன்னு மட்டம் தட்டாதே!

 கொரோனாவிலே, பணக்காரனெல்லாம் ஒரேநாளிலே ஓட்டாண்டி ஆயிடுவான், அம்பானி சொத்து மதிப்பு ஒரேநாளிலே பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிழந்துவிட்டது!

 ஆனானப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பே தலைலே கைவைச்சிக்கிட்டு உட்கார்ந்துட்டான்.

 உங்கண்ணன் ஏழையாகணும்னு சொல்லலே!

 அவர் பணக்காரனாகவே இருக்கட்டும், அப்பத்தானே, உனக்கு நல்லது!"

 " இத பாருங்க! உங்க சாமர்த்தியத்தை எங்கிட்ட காட்டாதீங்க! உங்க அக்கா மகனை கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்க!"

 " மீரா! அப்படி அவன் என்ன பண்ணிட்டான்னு சொல்லாமலே, மிரட்டறியே, நியாயமா?"

 " அந்தக் கண்றாவியை என் கண்ணாலே பார்த்து தொலைச்சிட்டேன்,...."

 " அப்படியா! சொல்லு, சொல்லு!"

 " ஆசையைப் பாரு! ஜொள்ளு விடறதை! இந்த வயசிலே, மாமனே இப்படி வழிஞ்சா, மருமகனை என்ன சொல்லமுடியும்?"

 " நீ என்ன பார்த்தேங்கறதை விவரமா சொல்லலேன்னா, நீ என் அக்கா மகன்மீது அபாண்டமா பழி சுமத்தறேன்னு நினைப்பேன், அப்புறம் உன் இஷ்டம்!"

 " கொஞ்சம் கிட்ட வாங்க.......அதுக்காக, மடியிலே உக்காராதீங்க!"

 " சரி, சொல்லு, விலாவாரியா!"

 " எங்கண்ணன் பிறந்த நாள் விழாவுக்கு உங்க அக்காவும் குடும்பத்தோட வந்திருந்தாங்க இல்லே, அப்ப....."

 " சொல்லு, சொல்லு, அப்ப........?"

 " எங்கண்ணன் மகள் சுந்தரி அழகா டிரஸ் பண்ணிண்டு மண்டபத்திலே வந்தவங்களை உபசரித்துக்கொண்டு குறுக்க நடுக்க போயிண்டிருந்தபோது, உங்க அக்கா மகன்,

அவளை சுற்றி சுற்றி வந்துண்டிருந்தான், முதல்லே.....போகப்போக, கிட்ட நெருங்கிப் பேசினான், கடைசிலே பார்த்தா, அவள் தோளிலே கைபோடறான்!"

 "ப்பூ! இவ்வளவுதானா? இதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்? மீரா! எங்க அக்கா மகன், உங்க அண்ணன் மகள் தோளிலே கைபோட்டதா சொல்றியே, அதுக்கு உங்கண்ணன் மகள் எப்படி ரியாக்ட் பண்ணினான்னு சொல்லலியே, அவன் கையை தட்டிவிட்டு நகர்ந்து போனாளா, இல்லே கிட்ட நெருங்கி வந்தாளான்னு சொல்லமாட்டேங்கறியே!"

 " அந்தப் பொண்ணு, சின்னப் பொண்ணுங்க! விவரமறியாதவ! அதுக்கு ஒண்ணும் தெரியாதுங்க!"

 " எங்க அக்கா மகன்

மட்டும் பெரிய மனுஷனா? அவனும் காலேஜ் ஸ்டூடண்ட்தானே! இவனுக்கும் அவளுக்கும் ஒண்ணு, ரெண்டு வயசுதான் குறைவாயிருக்கும்.......மீரா! இந்தக் காலத்திலே, பெண்களுக்கும் சின்ன வயசிலேயே எல்லாம் தெரியும்!

 சின்னஞ் சிறுசுங்க! இந்த விஷயத்தை பெரிசுபடுத்தாதே! நானும் எங்க அக்கா மகனிடம் பேசறேன், ஏணி வச்சாலும் எட்டாத உசரத்திலே இருக்காரு உங்கண்ணன்னு எச்சரித்து வைக்கிறேன்....."

 " எனக்கொண்ணும், சின்னஞ் சிறுசுங்க சந்தோஷமா இருக்கக்கூடாதுங்கற நினைப்பில்லீங்க, உங்களுக்கு தெரியும், எங்கண்ணன் கொஞ்சம் முரடன்! ஏதாவது எக்குத்தப்பா நடந்துடக்கூடாதேங்கற பயம்!"

 " இப்படித்தான் நான் உன்னை டாவடிச்சபோதும், பயப்பட்டே, கடைசியிலே என்னாச்சு? நம்ம கல்யாணத்தை நடத்திவைச்சாரா இல்லையா?"

 "பத்து வருஷம் முன்பு நடந்த கதையை சொல்லாதீங்க, இப்ப எங்கண்ணன்தான் நம்ம மாநிலத்திலேயே நம்பர் ஒன் பணக்காரன்!

 அவரு, தன் மகளை, அவரைப்போல பெரும்பணக்காரன் பிள்ளைக்குத்தான் கட்டிக் கொடுப்பாரு........"

 " சரி, மீரா! பயப்படாதே! நான் என் அக்கா மகனை எச்சரிக்கிறேன், நீயும் உங்கண்ணன் மகளை வார்ன் பண்ணிவை!"

 " சரிங்க!"

 அன்று மாலையே, மீரா தன் அண்ணன் வீட்டுக்கு கிளம்பினாள்.