விளக்கேற்றி வைக்கிறேன்... - பிந்து வினோத் : Vilaketri vaikkiren - Bindu Vinod
 

விளக்கேற்றி வைக்கிறேன்... - பிந்து வினோத்

Other editions available!!! Click here to view other editions of this book.

ஹாய் ஃபிரென்ட்ஸ், 'உன்னைத் தானே' கதையுடைய ஒரிஜினல் எடிஷன் இது. இந்த வெர்ஷனுக்கும், "உன்னைத் தானே" வெர்ஷனுக்கும் சின்னதாக சில வித்தியாசங்கள் இருக்கிறது. என் பிரென்ட்ஸ் சிலருக்கு இந்த வெர்ஷன் பிடிக்கும். அதற்காக இதையும் பப்ளிஷ் செய்கிறேன். ஒருவேளை நீங்கள் "உன்னைத் தானே" கதையை படித்திருந்தால், என்ன வித்தியாசம் என்று தெரிந்துக் கொள்ள படியுங்கள், அல்லது ஸ்கிப் செய்து விடுங்கள் :-) நன்றி!

 

கதையைப் பற்றி:

கிராமத்து இளைஞன் சசி, சென்னையில் சிந்துவை பார்த்த உடனே காதல் கொள்கிறான்.

சிந்துவிற்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை தெரிந்து சசி வருத்தம் அடையும் போதே, எதிர்பாராத விதமாக அவளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதைத் தவறாமல் பயன்படுத்தியும் கொள்கிறான்.

ஆனால் அந்த திருமணம் சிந்துவிற்கு பிடிக்குமா? அவனின் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்களா??

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

 

01. விளக்கேற்றி வைக்கிறேன்

வீட்டு மாடியில் நின்று காஃபி அருந்திய படி சூரிய உதயத்தை ரசித்து கொண்டிருந்தாள் கங்கா. நிலவளமும் நீர்வளமும் நிறைந்த அந்த மணிமங்கல கிராமத்தின் பார்க்கும் திசை எல்லாம் பச்சை பசேலென கண்ணை கவர்ந்தது. அந்த பச்சை நிறத்துடன், இளஞ்சூரியனின் மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறம் மனதை கொள்ளை கொள்வதாக இருந்தது. காலையில் அம்மா தரும் காஃபியுடன் சூரியோதயத்தை ரசிப்பது கங்காவிடம் பல வருடங்களாகவே இருந்து வரும் பழக்கம். சூரியனின் ஒளியில் மெல்ல இருள் விலகுவதை காண்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

தென் தமிழ்நாட்டில், நாகர்கோவிலை அடுத்து இருந்த அந்த மணிமங்கலம் கிராமத்தில் செல்வமும் செல்வாக்கும் பெற்று விளங்கியது கங்காவின் குடும்பம். கங்கா நாகர்கோவிலில் இருந்த கல்லூரியில் பி.எஸ்ஸி கணிதம் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். கையிலிருந்த காஃபி காலியாகவும் துள்ளல் நடையுடன் கீழே இறங்கி வந்தாள்.

சமையலறையில் சென்று டம்ப்ளரை வைத்து விட்டு, காலை நேர உணவு தயாரிக்கும் பரபரப்பில் இருந்த அண்ணி செல்வியை பார்த்து,

“அம்மா கையில் என்ன மந்திரம் இருக்குன்னு தெரியலை அண்ணி, அவங்க காஃபி அப்படி ஒரு டேஸ்ட்...” என்று வம்புக்கு இழுத்தாள்.

செல்விக்கும் அவளுடைய மாமியார் சுலோச்சனாவிற்கும் எதற்கும் எப்போதும் சண்டை தான். இதில் யார் மீது குற்றம், யார் மீது குற்றமில்லை என்று சொல்வது மிகவும் கடினம். இருவருமே கிடைக்கும் வாய்ப்பில் மற்றவரை தாக்கி கொள்வார்கள்.

கங்காவை பார்த்து முறைத்த செல்வி, ஏதோ சொல்ல வாயை திறந்த நேரம், அவளுடைய கணவன் சக்தியின் குரல் கேட்டது

“செல்வி, டிஃபன் ரெடியா?”.

அப்போதைக்கு ஒரு சூடான முறைப்பை மட்டும் கங்காவிற்கு கொடுத்து விட்டு, அவசரமாக,

“ரெடி ஆச்சுங்க...” என்று கணவனுக்கு பதில் அளித்தாள் செல்வி.

தோசை, சட்னி என்று தயாரித்த உணவு வகைகளையும், தட்டையும் கொண்டு வந்து வைத்து விட்டு, கணவனுக்கு அவள் பரிமாற துவங்கிய நேரம் சுலோச்சனா அங்கே வந்து சேர்ந்தாள்.

“என்னப்பா சக்தி காலையிலேயே கிளம்பிட்ட?”

“ஆமாம் அம்மா இன்னைக்கு எஸ்டேட்டில் கொஞ்சம் வேலை இருக்கு...”

“வேலை வேலைன்னு ஓடி உடம்பை கெடுத்துக்காதப்பா... இந்தா இன்னும் இரண்டு தோசை சாப்பிடு... சட்னில காரம் சரியா இருக்கா?”

கணவனுக்காக என்று சீக்கிரமாக எழுந்து சமைத்து, அவனுக்கு பரிமாற என்று ஆசையுடன் வந்த செல்விக்கு கோபமாக வந்தது. ஆனால் அவள் கணவன் அவள் பக்கம் திரும்ப கூட இல்லை. அம்மாவிடம் பேச்சு கொடுத்தபடி அம்மா பரிமாறிய உணவை சாப்பிட துவங்கினான். செல்வி கோபத்தை மனதில் அடக்கியபடி அங்கே இருந்து நகர்ந்து மீண்டும் சமையலறைக்கே சென்றாள். இது இன்று நேற்று என்றில்லாமல் அவள் இந்த வீட்டில் மருமகளாக வந்த நான்கு ஆண்டுகளாகவே நடப்பது தான். கோபம் ஏமாற்றம் இரண்டையும் அடக்க முயன்று கொண்டிருந்தவளை,

“அம்மா, பசிக்குதும்மா.... “ என்றபடி வந்து கட்டிக் கொண்டான் அவளின் மூன்று வயது மகன் நந்து. மனதில் இருந்த ஏமாற்றம் மறைய அன்புடன் மகனை வாரி அணைத்து தூக்கி முத்தமிட்டாள் செல்வி.

டந்த அனைத்தையும் கல்லூரிக்கு கிளம்பும் போர்வையில் அந்த பக்கமும் இந்த பக்கமும் அலைந்துக் கொண்டிருந்த கங்காவின் கண்களை தப்பவில்லை. அண்ணி பாவம் என மனதில் நினைத்துக் கொண்டவள், கூடவே அம்மா ரொம்பவே ‘ஸ்மார்ட்’ தான் என மனதில் மெச்சிக் கொண்டாள். மனதில் ஓடிய எண்ணத்திற்கு ஏற்றது போல் அவள் முகத்திலும் புன்னகை தோன்ற,

“அம்மா எனக்கும் தோசை ரெடியா?” எனக் கேட்டாள்.

“அது தான் இப்போ எல்லாம் மொத்தமா செஞ்சு வச்சிடுறாங்களே அப்புறம் என்ன? உட்காரு... என்ன இது? கொஞ்சம் எண்ணெய் தேய்க்க கூடாதா? இப்படியா முடியை பறக்க விடுவது?”

“என்னம்மா நீங்க? இன்னைக்கு தான் தலையில் எண்ணெய் தேய்த்தேன்...” என்று அவள் செல்லம் கொஞ்சி பதில் சொன்னபோது, அவளின் சின்ன அண்ணன் சசியும், அப்பா ரத்தினசாமியும் வந்து சேர்ந்தார்கள்.

“என்னம்மா நீங்க? அண்ணி எங்கே? நீங்களே இன்னமும் பரிமாறனுமா என்ன? அண்ணியால் இதை கூட செய்ய முடியாதா?”