நீர்வழிப்படூஉம் புணைபோல.. - அகிலாண்ட பாரதி : Neervazhippadooum punaipola - Akhilanda Bharati
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 10

Story Name - VNeervazhippadooum punaipola..

Author Name - Akhilanda Bharati

Debut writer - No


நீர்வழிப்படூஉம் புணைபோல.. - அகிலாண்ட பாரதி

கதைச் சுருக்கம்:

ஏதுமறியா பள்ளிப்பருவ மனதுடன் மருத்துவக் கல்லூரிக்குள் நுழையும் கீர்த்தி கல்லூரி பருவம் தந்த அனுபவங்களுடன் வாழ்வில் அடுத்த படிநிலைக்குச் சென்ற கதை.

கீர்த்தியின் நண்பர்கள், ஆசிரியர்கள், நோயாளிகள் சேர்ந்து அவளது அனுபவங்களைக் கட்டமைக்கின்றனர்.

நம்முடைய எந்தத் திட்டமிடலுக்கும் ஒத்துழைக்காமல் தன் போக்கில் காலம் நம்மை இழுத்துச் செல்கிறது.

பிற கல்லூரிகளிலிருந்து மருத்துவக் கல்லூரி எப்படி வேறுபடுகிறது என்பதையும் கூறியுள்ளேன்.

சில்சீ யின் நாவல் போட்டியில் கலந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.

 

'நீர்வழிப் படூஉம் புணைபோல' என்ற என்னுடைய நாவல் என் கல்லூரி வாழ்வில் சில பக்கங்களைக் கொண்டது. சுருக்கமாகச் சொல்லப்போனால் சில நினைவலைகளைத் தாங்கிய குறிப்பேடு போன்றது. இதில் நண்பர்கள் சிலரின் பக்கங்களும் இணைந்துள்ளன.

 

 வாழ்வை செதுக்கிய நிகழ்வுகளில் கல்லூரிக் காலங்களுக்கு மிக முக்கியப் பங்குண்டு என்பதை இந்த நாவல் வழியே பகிர்கிறேன்‌.

 

 கதையைப் படிக்கும் உங்களுக்கு நிச்சயம் உங்களது கல்லூரி வாழ்வு நினைவுக்கு வரும்..

 

சில இடங்கள் புன்னகையை வரவைக்கும்.

 மற்ற கல்வித் திட்டங்களில் இருந்து மருத்துவக்கல்வி  வேறுபட்டது என்பதையும் உணர்ந்து கொள்வீர்கள்.

 

திரைப்படங்கள் காட்டும் மருத்துவக்கல்லூரிகள் நிழல் மட்டுமே.. நிஜம் வேறு மாதிரியானது.

 

 வாருங்கள் உங்கள் நேரத்தை இந்தக் கல்லூரிக் காலங்களில் செலவிடுங்கள். உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் என் எழுத்துக்களைத் திருத்திக் கொள்வேன்.

 

 

என் வாழ்வில் உடன் பயணிக்கும் என் கல்லூரி நண்பர்களுக்கும் எழுத்துக்கு ஊக்கமாக அமையும் என் குடும்பத்தினருக்கும் சக மருத்துவர்களுக்கும் நன்றி கலந்த அன்பு.

 

"நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர் முறைவழிப் படூஉம்"

 

(ஆற்றின் போக்கில் செல்லும் ஓடம் போல உயிர்களின் வாழ்வு கால ஓட்டத்தில் செல்லும்)

 

 

- கணியன் பூங்குன்றனார்

 

நீர்வழிப் படூஉம் புணைபோல..

                                                    -அகிலாண்ட பாரதி

1.

 

"ஏய் வாண்டு, இங்கே வா..  என்ன பண்ற?" மதுரை மருத்துவக் கல்லூரியின் மகளிர் விடுதியில் நான்காம் எண் அறையில் உள்ளே போவதும் வருவதுமாக இருந்த சிறுமியை இரண்டாம் ஆண்டு மாணவி அனிதா அழைத்தாள்.

 

"எங்க அக்கா பேக் எல்லாம் வக்கிறேன்.. இங்கே பார்த்தீங்களா? எங்க அக்காவுக்கு புது வாளி, புதுக் கப்பு, புது சோப் டப்பா எல்லாம் வாங்கி இருக்கோமே.."

 

"யாரு உங்க அக்கா?"

 

"எங்க அக்கா டாக்டருக்கு படிக்கப் போறா தெரியுமா.. அவளை விடறதுக்குத் தான் வந்திருக்கோம்"

 

"என்ன! டாக்டருக்கு படிக்க வந்திருக்காளா.. அப்ப நாங்கல்லாம் என்ன, கம்பவுண்டருக்கா படிக்க வந்திருக்கோம்?"

 

"நீங்களும் டாக்டருக்குப் படிக்க வந்துருக்கீங்களா? அப்புறம் ஏன் ஸ்கூலுக்குப் போகாம இங்கேயே இருக்கீங்க? எங்க அக்கால்லாம் கிளாஸுக்கு போயிட்டா"

 

"அடப்பாவி உன்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் போல.. விவரம் தான். ஆமா உன் பேர் என்ன? என்ன படிக்கிற?"

 

"ஆர்த்தி. ஃபோர்த் படிக்கிறேன்"

 

"உங்க அக்கா பேரு?"

 

 "கீர்த்தி"

 

"உங்க அக்கா உன்னை மாதிரியே விவரமா இருப்பாளா?"

 

விவரம் என்றால் என்னவென்று அவ்வளவாக புரிந்துகொள்ளாத ஆர்த்தி, "அவ என்ன விட வீரம் தெரியுமா? சூப்பரா படிப்பா! எங்க டிஸ்ட்ரிக்ட்லயே ஃபர்ஸ்ட்டு"

 

"என்னடி படிக்காம யார்கிட்ட வம்பளந்துக்கிட்டு இருக்க?" பக்கத்து அறையிலிருந்து இவர்கள் பேசும் சத்தம் கேட்டு அனிதாவின் தோழி கீதா வந்தாள்.

 

 "நீயும் என்னை மாதிரி புக்ல இருந்து தலையைத் திருப்ப டைம் பார்த்துகிட்டு இருந்த மாதிரித் தெரியுது? சின்ன சத்தத்துக்கே வந்துட்ட?"

 

"ஆமா டீ! படிக்கவே ஓடமாட்டேங்குது.. பேசாம வார்டுக்குப் போயிருக்கலாம். நம்ம பி.ஜி.யவாவது சைட் அடிச்சிட்டு இருந்திருக்கலாம்.

 

'உஷ் பாத்து' என்று அனிதா ஆர்த்தியைக் குறித்து ஜாடை காட்டுவதற்குள்,

 

"நீங்களும் ஸ்கூலுக்குப் போகலையா ஏன்? எங்க அக்கா.." என்று மீண்டும் ஆர்த்தி துவங்க,

 

"அம்மா தாயே! உங்க அக்கா அளவுக்கு நாங்க அறிவாளி இல்லம்மா. மத்தியானம் எங்களுக்கு இன்டர்னல் எக்ஸாம். அதான் லீவு போட்டுப் படிக்கிறோம்.

 

"இன்டர்னல் எக்ஸாமா? அப்படின்னா என்ன?"

 

"க்ளாஸ் டெஸ்ட் தெரியுமா, அதுமாதிரி.." கீதா பதில் அளித்தாள்.

 

"க்ளாஸ் டெஸ்ட்டுக்கே இன்னும் படிக்கலையா?"

 

"ஏ சின்ன புள்ள ரொம்ப மானத்தை வாங்குது.. நீ வேற உண்மையை போட்டு விடாதே.. எங்க அக்கா.." அப்படின்னு திரும்பி ஆரம்பிச்சுடும் என்று அனிதா கூறுகையில் நடுத்தர வயதுப் பெண் ஒருவர் கையில் சூட்கேஸ், பேக் சகிதம் பாதி திறந்திருந்த கதவை இலேசாகத் தட்டினார்.

 

 "நீ இங்கதான் இருக்கியா, ஏன் சொல்லாம ஓடிப்போன?" ஆர்த்தியைப் பார்த்து அந்தப் பெண் கேட்க,

 

"அம்மா இவங்களுக்கு கிளாஸ் டெஸ்ட்டாம்.." ஆர்த்தி தன் அம்மாவைப் பார்த்துக் கூற,

 

"ஹாஸ்டல் ஆபீஸ்ல பீஸ் கட்டிட்டு இருக்கும்போது அவங்க நாலாம் நம்பர்