Chillzee KiMo Books - மழைமேகம் கலைந்த வானம் - சாகம்பரி : Mazhaimegam kalaintha vaanam - Sagampari

மழைமேகம் கலைந்த வானம் - சாகம்பரி : Mazhaimegam kalaintha vaanam - Sagampari
 

மழைமேகம் கலைந்த வானம் - சாகம்பரி

முன்னுரை

பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் கதாநாயகன் ப்ரெட்ரிக் ஜோஸ்வா. அவனுடைய தொழில்முறை எதிரி ஜெகன்சந்திரசேகர். அவருடைய மகள் நிதர்சனா.

ஒரு சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாத ஜோஸ்வாவிற்காக நிதர்சனா வேலை செய்ய வேண்டியதாகிறது. அவளுடைய பொறுமையும் அறிவும் ஜோஸ்வாவின் இக்கட்டான சூழலிலும் தொழிலை வளர்க்க உதவுகிறது. ஒரு நல்ல உதவியாளராக நிதர்சனாவை நம்பும் நிலையில் அவள் கர்ப்பமாக இருப்பதும் கணவனை பிரிந்திருப்பதும் அவனுக்கு தெரிய வருகிறது.

தான் சுமந்திருக்கும் குழந்தையின் மீது நிதர்சனா காட்டும் அன்பு… பெற்றோர் யார் என்றே தெரியாமல் வளர்ந்த ஜோஸ்வாவை கவர்கிறது.

அவளிடம் அக்கரை கொள்ளும் அவனிடம் நிதர்சனா விலகி நிற்க..இடையில் ஜோஸ்வா நிதர்சனாவின் கணவன் சத்யாவை தேட.. அவனுக்கு ஜெனி என்ற பெண்ணிடம் இருந்த காதல் தெரிய வர…

இத்தனை குழப்பத்திற்கும் அடிப்படை என்னவெனில் ஜோஸ்வாவிற்கு நடந்த ஒரு விபத்தினால் அவனுக்கு வந்த செலக்டிவ் அம்னீசியாதான் காரணமாகிறது.

ஜோஸ்வா… நிதர்சனா… சத்யா… ஜெனி… என்ற சதுரத்துக்குள் சிக்கி கொள்ளும் இனிமையான காதல் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 

மழைமேகம் கலைந்த வானம்-1

       நிதர்சனா சாலையை கடக்க சிக்னலுக்காக காத்திருந்தாள். விரைந்து சென்ற வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது மனதிற்குள் கேள்வி எழுந்தது. அவளை எதற்காக க்ருபா அண்ணா அழைத்திருக்கிறான்?.. அவளுக்கு ஒரு முக்கியமான பொறுப்பை தரப்போவதாகவும் கூறியிருந்தான்!

      எதுவானால் என்ன? அண்ணாவிற்காக அவள் அதனை செய்து முடிப்பாள். அது எவ்வளவு பெரிய பொறுப்பாக இருந்தாலும் சரி!.. சிரித்து மகிழ மட்டும் உறவுகளல்ல, சோதனையான நேரத்தில் கை கொடுப்பதும்தான் உறவுகளை சிறப்பிக்கும் என்பதை   அவளுக்கு உணர வைத்தது க்ருபா அண்ணாதான். சிக்னலில் சிவப்பு மாறி பச்சை விளக்கு எரிந்து அவளின் எண்ண ஓட்டத்தை நிறுத்தியது.

      சாலையை கடந்து அவள் மறுபக்கமிருந்த மருத்துவமனைக்குள் நுழைந்தாள். அது ஒரு பெரிய மருத்துவமனை… நவீன வசதிகள்  நிறைந்தது. கண்ணாடி தடுப்புகளின் பின் அமைந்திருந்த வரவேற்பு அறைக்கு சென்றாள். அங்கேதான் க்ருபா அண்ணா அவளை காத்திருக்க சொல்லியிருந்தான். அங்கே வரிசையாக அமைக்கப்பட்டிருந்த பார்வையாளருக்கான இருக்கையில் அமர்ந்தாள். எதிரே இருந்த கண்ணாடியில் நிழலுருவமாக அவள் தோன்ற, கலைந்திருந்த கேசத்தினை சரி செய்து கொண்டாள். ஆனாலும் அவளுடைய  களைத்திருந்த தோற்றத்தினை சீர் செய்ய முடியவில்லை.

      சமீபத்தில் அவள் கடந்து வந்திருந்த காலம் இடி, மின்னல், மழை, புயல் என்று  அவளை ஒரேயடியாக ஓய்த்துவிட்டிருந்தது. க்ருபா அண்ணா மட்டுமில்லையென்றால் அவள் உயிருடன் இருந்திருக்கவே மாட்டாள். இருபத்திரண்டு வயதிலேயே வாழ்க்கையை கை நழுவ விட்டுவிட்டாள். வழி தவறிய சின்னக்குழந்தையை கைப்பிடித்து அழைத்து சென்று பாதுகாப்பதுபோல அவளை அண்ணாதான் காப்பாற்றினான். .

  அவளுடைய தலையில் பெட்ரோலை கொட்டி ‘செத்துப்போ’ என்று கூறிய தந்தையைவிட, உலகில் அவளுக்கும் ஒரு எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிகையை ஊட்டிய க்ருபா அவளுக்கு தெய்வம்தான். அவளைவிட ஐந்து வயதே மூத்தவனின் பக்குவம் அவளுக்கும் பிடிபட்டது. ‘குளம் போல் தேங்கி நிற்காமல் ஆறுபோல தடைகளைத் தாண்டி ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.’ என்று வாழ்க்கையை அவள் கைவசப்படுத்த முயற்சித்தாள். இப்போதுதான் பழைய கசப்பான சம்பவங்களை மறந்து, ஃபேஷன் டிசைன் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

“ நீது…”  என்ற குரல் அவளை கவனப்படுத்தியது. காக்கி உடையணிந்திருந்த கிருபா அவளை அழைத்தான்.

“அண்ணா, என்ன விஷயம்? எதற்காக என்னை அழைத்தீர்கள்?” இருக்கையைவிட்டு எழுந்தாள்.

“பரவாயில்லை நீது, இப்படி உட்கார்.  நீ எனக்கு ஒரு பெரிய உதவி செய்ய வேண்டும். அது என் துறை சார்ந்த தேவை என்றாலும், மிக நம்பிக்கையான ஒருவரிடம்தான் அந்தப் பொறுப்பினை ஒப்படைக்க முடியும்”

“அண்ணா, தெளிவாக சொல்லுங்கள். நான் என்ன செய்ய வேண்டும்?”

“முக்கியமான விஐபி ஒருவர் விபத்தில் சிக்கி இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாளர் தேவைப்படுகிறது. சிக்கல் என்னவென்றால், அவருக்கு அந்த விபத்து எப்படி நேரிட்டது என்றே தெரியவில்லை. தலையில் அடிபட்டிருப்பதால் அவருக்கும் அதுபற்றிய நினைவில்லை. அது மட்டுமல்ல சமீபத்தில் நடந்த சில விஷயங்கள்கூட அவருக்கு நினைவில்லை. அந்த விபத்துகூட தொழில்முறை எதிரிகளின் சதித் திட்டமோ என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே அவருக்கு உதவியாளராக நம்பிக்கையான ஒருவரை நியமிக்க முடிவெடுத்துள்ளோம். அந்த பொறுப்பு என்னிடம் தரப்பட்டுள்ளது.  எனக்கு உன்னால்தான் உதவி செய்ய முடியும் என்று தோன்றியது. எனவேதான் உன்னை அழைத்தேன்”.

      நிதர்சனா படபடப்பாக பேசிய அண்ணனை ஏறிட்டு நோக்கினாள். காவல்துறை உளவுப்பிரிவில் வேலை செய்யும் அவனுக்கு இது போன்ற பொறுப்புகள் தரப்படுவது சகஜம்தான். விஐபி பாதுகாப்பு, மக்கள் பிரச்சினைகளை ரிப்போர்ட் செய்வது   போன்றவை அவற்றில் இருக்கும். எனவே அவளுக்கும் இது ஒரு முக்கியமான பொறுப்புதான். அவள் கவலையுடன் கேட்டாள்.

“ஆனால், உதவியாளர் பணி பற்றி எனக்கு எதுவும் தெரியாதே?”

“அது ஒன்றும் இல்லை. நீ அவர்கூடவே இருந்து மருத்துவ உதவிகளை செய்வது, அவர் உடல் நிலை தேறும்வரை உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். இரவில் தங்க வேண்டியதில்லை. அதற்கு நான் விக்கியை