Chillzee KiMo Books - நினைவுகளுக்கும் நிழல் உண்டு - பிரேமாமகள் : Ninaivugalukkum nizhal undu - Premamagal

நினைவுகளுக்கும் நிழல் உண்டு - பிரேமாமகள் : Ninaivugalukkum nizhal undu - Premamagal
 

நினைவுகளுக்கும் நிழல் உண்டு - பிரேமாமகள்

 

மனமார்ந்த நன்றி

கலங்கி நிற்கும் போதெல்லாம், ஆறுதல் சொல்லி அரவணைக்கும்
என் தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும்!

 

அட்டைப்பட வடிவமைப்பு: நிவேதிதா மணிவண்ணன்

கதைச்சுருக்கம்:

தான் மணமுடிக்கப்போகும் மங்கை கமலினையைக் கண்கள் கண்ட பொழுதில் காதல் கொள்கிறான் கதையின் நாயகன் ஸ்ரீஹரிஹரன். சொந்தங்கள் ஆசிகூறி திருமணம் நடந்தேற, முதலிரவு அறைக்குள் தன் மனைவிக்காக காத்திருக்கிறான் அவன்.

அறைக்குள் பாதம் பதித்த கமலினிக்கு, பிறருக்கு தெரியாமல், தன் விழிகளோடு மட்டுமே உறவாடும் காதலனைப் பற்றிச் சொல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதைக்கேட்ட ஸ்ரீஹரிஹரனின் நிலை என்ன? அவர்கள் திருமண வாழ்க்கை மனங்களைச் சேர்க்குமா? அதில் மணம் வீசுமா? என்ற பல வினாக்களுக்கு விடையே , திகில் கலந்த தித்திக்கும் காதல் கதை, `நினைவுகளுக்கும் நிழல் உண்டு`

 

என்னுரை:

 

வழக்கறிஞர் ஆகும் கனவுகளோடு சட்டம் படித்தேன்.  ஆனால் வாழ்க்கை என்னை, வேறு திசை நோக்கி அனுப்பியது.  விகடனில் மாணவ நிருபராகச் சேர்ந்து, அவள் விகடனில் ‘தலைமை நிருபராக’ பணியாற்றினேன். நான் எழுதிய சில சிறுகதைகள் பத்திரிக்கைகளில் பிரசுரமாகியுள்ளன.  வெளிநாட்டுவாழ்க்கை என்னை மொழிபெயர்ப்பாளராக மாற்றி, புது அடையாளம் தந்தது.

 காலத்தின் போக்கில் பல வருடங்கள் ஓடினாலும், ஒரு புத்தகம் எழுத வேண்டுமென்று, உள்மனதுக்குள்  சிம்மாசமிட்டு அமர்ந்திருந்த கனவை, நிஜமாக்கும் முயற்சியே என் முதல் நாவல் ‘காதல் கண்ட கணமே. அந்த படைப்புக்கு கிடைத்த ஊக்கமும் உற்சாகமும் தொடர்ந்து எழுத தூண்டியதில், இரண்டாவது நாவல் உருவானது.

அன்புடன்

லாவண்யா என்னும் பிரேமாமகள்

 

அத்தியாயம்- ஒன்று

 

இன்று:

ஹாய், என் பேர் கமலினி, வயசு இருபத்தி நான்கு, சாலையில் நீங்கள் தினமும் பார்க்கிற எதாவது ஒர் இளம் பெண்ணின் சாயலில் இருப்பேன். 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும், மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததால், முடநீக்கியல் என்னும் பிசியோதெரபி படித்துவிட்டு,  எங்கள் ஏரியாவில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணிபுரிகிறேன்.

 

 இதோ என் படுக்கையறை ஜன்னலில் சாய்ந்து என்னை வைத்த கண்ணு வாங்காமல் பார்க்கிறானே, இவன்தான் என்னுடைய அத்தான்.

பார்க்க பாகுபலி வில்லன் மாதிரி எப்பவும் விறைத்துக்கொண்டுதான் இருப்பான். ஆனால் உள்ளுக்குள்ளே பச்சப்புள்ள மனசு. நானென்றால் அவனுக்கு உயிர். இரண்டு வருசமா காதலிக்கிறோம். அவனுடைய அப்பாஅம்மாவுக்கு எங்கள் காதல் விவகாரம் தெரியும். எங்க வீட்டில் யாருக்கும் தெரியாது.  

நான் அப்போதுதான் குளித்துவிட்டு வந்ததால், தலையிலிருந்த துண்டை உதறி  ஈரத்தை துடைக்கத் துவங்கினேன்.

‘’ஓய் லட்டு’’ என்றபடி என் தோளில் சாய்ந்து ஈரத்தலையில் ஷாம்பூ வாசம் பிடிக்கத் துவங்கினான் அத்தான். அடுத்து அவன் என்ன செய்வானென தெரியுமாதலால்,

‘’தள்ளுடா எரும மாடு,’ என்றபடி அவனிடமிருந்து விலகி, தலையைக் காய வைத்தேன். அப்போதும் விடாமல் என்னை உரசிக்கொண்டே, அருகில் நின்றான்.  தலைமுடியில் சிக்கெடுத்த பிறகு அன்று கட்ட வேண்டிய புடவையை வெளியில் எடுத்தேன்.

‘’ஓய், கத்திரிப்பூ புடவை கட்டுடி, சும்மா நச்சுன்னு இருப்ப’’ என்றான்.

‘’போடா,  நீ சொல்றதையெல்லாம் கேட்க நான் என்ன உன் பொண்டாட்டியா’’ என்று முறுக்கிக்கொண்டாலும் எடுத்து வைத்த பச்சைநிறப் புடவையை பீரோவுக்குள் வைத்துவிட்டு, அவன் சொன்ன அதே புடவையை வெளியே எடுத்து வைத்தேன்.

அத்தானின் பிறந்தநாளுக்கு, கட்டுவதற்காக ஆசையாக வாங்கியது!  முதல் முறையாக அந்த புடவையை நான் கட்டியபோது, அவன் பட்ட அவஸ்தை, என் நியாபகத்தில் வந்து போக, மெலிதாய்  சிரித்தேன். அவனும் அந்த நாளை நினைவுக்கூர்ந்து,

‘’ஏய், நீ என் பர்த்டே அன்னிக்கு சொன்னதை நினைச்சுத்தான சிரிக்கிற, சொல்றீ’’ என என்னை இழுத்து அணைக்க துடிக்கும்  சமயம்,  அறை கதவு தட்டப்பட்டது.

தலையை நீட்டி வெளியில் பார்த்ததும், என் அப்பாவின் அக்கா  லட்சுமியத்தை, ‘’பாப்பு, இன்னும் புடவை கட்டலையா?  சீக்கிரம்’’ என்று சொல்லி முடிப்பதற்குள் சமையலறையில் இருந்து என் அம்மா கூப்பிடும் குரல் கேட்கவும் அங்கே சென்றுவிட்டார்.

‘’அய்ய, கொஞ்ச நேரம் உன் கூட தனியா இருக்க முடியுதா?, யாராவது வந்திடறாங்க’ என்று சலித்துக் கொண்டவன் என் படுக்கையில் சாய்ந்து படுத்துக் கொண்டான்.

புடவைக்கு பொருத்தமான அணிகலங்களை எடுத்து வைத்தபின், ‘’சரி நான் துணி மாத்தனும், நீ வெளியே போ’’ என்றேன் அவனிடம்.

‘’போடி, இது மாதிரி ஒரு வாய்ப்பு எப்ப கிடைக்குமோ?’’ என்று முரண்டு