Chillzee KiMo Books - ஒருவர் மனதிலே ஒருவரடி - முகில் தினகரன் : Oruvar manathile oruvaradi - Mukil Dinakaran

ஒருவர் மனதிலே ஒருவரடி - முகில் தினகரன் : Oruvar manathile oruvaradi - Mukil Dinakaran
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 12

Story Name - Oruvar manathile oruvaradi

Author Name - Mukil Dinakaran

Debut writer - Yes


ஒருவர் மனதிலே ஒருவரடி - முகில் தினகரன்

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக முகில் தினகரன் பகிர்ந்திருக்கும் நாவல்.

 

அத்தியாயம் - 1

 

      அந்த அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் ஓய்வறையில் தனித்து அமர்ந்திருந்தார் விஸ்வேஸ்வரன். வெளி மைதானத்தில் இதமான வெயிலில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். தோட்டக்காரன் கடமையே என்று செடிக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான்.

 

      “நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்....வாய்நாடி வாய்ப்பச் செயல்!” எங்கே நான் சொல்றேன் திருப்பிச் சொல்லுங்க பார்க்கலாம், “நோய்நாடி” என்று ஏதோ ஒரு வகுப்பில், யாரோ ஒரு ஆசிரியை கத்தலாய்ச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 

      மரத்தடி சருகுகளை நீண்ட விளக்குமாறால் பெருக்கிக் கொண்டிருந்தாள் ஆயா.

       

      எப்படியும் இன்னும் சிறிது நேரத்தில் மற்ற ஆசிரியர்கள் ஓய்வறைக்கு வருவார்கள், வந்ததும் தன்னைப்  “பிலு...பிலு”வென்று பிடித்து உலுக்குவார்கள், என்பதை உணர்ந்து அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?...அவர்களை எப்படிச் சமாளிப்பது? என்பது குறித்த யோசனையில் ஆழ்ந்திருந்தார் விஸ்வேஸ்வரன்.

 

      கடந்த பத்து ஆண்டுகளாக ஆவாரம்பாளையம் அரசுப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணி புரியும் விஸ்வேஸ்வரன் சக ஆசிரியர்களுடன் மிகுந்த அன்போடும், பண்போடும் பழகுவார்.  அதன் காரணமாகவே அனைத்து ஆசிரிய...ஆசிரியைகளும் அவருடன் நல்ல நட்புறவோடு இருந்தனர்.

 

      தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜனுக்கும் விஸ்வேஸ்வரன் மீது ஒரு தனிப்பட்ட பிரியமுண்டு. விஸ்வேஸ்வரன் அங்கு வந்த பின் அந்தப் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகமாயிருந்த விஷயத்தை அடிக்கடி பலரிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார் தலைமை ஆசிரியர்.  தமிழாசிரியராய் இருந்தாலும், மற்ற பாடங்களுக்குரிய ஆசிரியர்கள் வரவில்லை என்கிற போது, அந்த இடத்தைப் பூர்த்தி செய்ய தலைமை ஆசிரியர் விஸ்வேஸ்வரனை மட்டுமே அனுப்புவார்.  அவ்வாறு செல்லும் விஸ்வேஸ்வரன் தனக்குப் பரிச்சயமில்லாத அந்தப் பாடத்தை நடத்தும் விதத்தில் மாணவர்களைக் கவர்ந்து விடுவார்.

 

      “சார்...இனிமேல் நீங்களே எங்களுக்கு சயின்ஸ் பாடமும் எடுங்க சார்!...அந்த சயின்ஸ் டீச்சர் சொல்லிக் கொடுப்பது சுத்தமாவே புரிய மாட்டேங்குது சார்!...நீங்க எவ்வளவோ பரவாயில்லை சார்...ரொம்ப ஈஸியா சொல்லித் தர்றீங்க” என்று மாணவரொருவர் சொல்ல,

 

      “ச்சூ....அப்படியெல்லாம் சொல்லக் கூடாது!...” என்று செல்லமாய் அதட்டி அவனை அமர வைப்பார்.

      படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டு, கலை, இலக்கிய, கலாச்சாரப் போட்டிகளிலும் அந்தப் பள்ளி மாணவ...மாணவியரை ஊக்குவித்து உயர்வடையச் செய்ததில் விஸ்வேஸ்வரன் சாரின் பங்கு அதிகம்.

 

      இப்போதெல்லாம் பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் எங்கு நடந்தாலும் அந்தப் போட்டியில் ஆவாரம்பாளையம் அரசுப்பள்ளி மாணவ மாணவியர் நிச்சயம் கலந்து கொள்வர்.  பரிசுகளைத் தட்டி வருவர்.

 

      கவிதையில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியரை தனியே அமர வைத்து, உள்ளூரில் இருக்கும் யாராவதொரு தேர்ந்த கவிஞரை அழைத்து வந்து அந்த மாணவச் செல்வங்களின் கவிதையை முறைப்படுத்தச் செய்வார்.  அதே போல்தான் கதைகளுக்கும்.  பிரபலமான எழுத்தாளர்களை அழைத்து பயிற்சி கொடுப்பார்.  பேச்சாற்றலை சொல்லித்தர பல பேச்சாளர்களையும் கூட்டி வருவார்.  ஒவ்வொரு மாணவனையும், மாணவியையும் பல்துறை வித்தகராக்கப் பாடு படுவார்.

 

      அந்தப் பள்ளியை ஒரு ஆலயமாய், தன்னுடைய தாய் வீடாய், எண்ணி வாழ்ந்திருந்தவர், அவரது வாழ்க்கைச் சூழலில் ஏற்பட்ட சிலபல மாற்றங்களால், இன்று அப்படியொரு அதிர்ச்சி முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத்