தேடும் கண் பார்வை தவிக்க... - பத்மினி செல்வராஜ் : Thedum Kan Paarvai Thavikka... - Padmini Selvaraj
 

தேடும் கண் பார்வை தவிக்க... - பத்மினி செல்வராஜ்

ஹாய் பிரண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம்.. Chillzee ன் வாசகியாக இருந்த நான் ஆர்வக் கோளாறில் பொழுது போக்கிற்காக விளையாட்டாக எழுத ஆரம்பித்து இன்றோடு மூன்று வருடம் முடிந்து விட்டது..

எழுத ஆரம்பித்த இந்த மூன்று வருடங்களில் எனக்குள்ளே நிறைய மாற்றங்கள்.. வாழ்க்கையை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள என் எழுத்தும் உதவியிருக்கிறது என்று எண்ணும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது..

அறிமுக எழுத்தாளராக Chillzee உள்ளே நுழைந்த எனக்கு என் எழுத்தில் இருந்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழி நடத்திய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..

நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் Chillzee ல் வெளியான எனது ஆறு கதைகளும் KiMo ல் நேரடியாக வெளிவந்த எனது மூன்று நாவல்களும் சேர்த்து பார்த்தால் நான் இப்பொழுது எழுதுவது எனது பத்தாவது கதை..

When I realize that, I said myself WOW.. ?..

என்னாலும் பத்து கதைகளை எழுத முடிந்தது என்று எண்ணும்பொழுது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.. இதற்கெல்லாம் காரணமான உங்களுக்கு மீண்டும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்..

கதையைப் பற்றி??

கதையின் தலைப்பிலிருந்து ஓரளவுக்கு யூகித்திருப்பீர்கள்..ஆம்... நம் பயணத்தின் நாயகன் எதையோ தொலைத்து விட்டு தேட போகிறான்..அவன் தேடுவது அவனுக்கு கிடைக்குமா? என்று அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..

எனது பத்தாவது கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!!

********

 

அத்தியாயம்-1

சென்னை மெரினா கடற்கரை..

பௌர்ணமி நிலவின் ஒளியில் தகதகத்து கொண்டிருந்தது அந்த வங்க கடல்..  

சென்னை மாநகரத்து சாலையில் எப்பொழுதும் கேட்கும் வாகனங்களின் இரைச்சலை போல, பௌர்ணமி நாள் என்பதால் அந்த வங்க கடலின் அலைகளின் இரைச்சலும் அதிகமாகவே இருந்தது..  

ஆர்ப்பரிக்கும் கடலை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் மக்கள்..

மணி 9 ஆன பொழுதும் ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டும்  ஜோடி ஜோடியாக ஒருவர் கையில் மற்றவர் கைகளை  பொருத்திக் கொண்டும்  அமர்ந்திருந்த காதல் ஜோடிகளும் அந்த வாரம் முழுவதும் வேலை செய்த அலுப்பு தீர சரக்கு பாட்டிலை வாங்கிக் கொண்டு நண்பர்களுடன் சரக்கு அடித்துக் கொண்டே கிண்டல் அடித்து கலாய்த்து பேசிக் கொண்டிருந்த இளைஞர் கூட்டம் ஒருபக்கம் என பல விதமான மக்களை பார்த்து ஆர்ப்பரித்து  கொண்டிருந்தது அந்த அலைகடல்..

அப்படிப்பட்ட மக்களில் ஒருவனாக அந்த நெடியவனும் தன் நீண்ட காலை நீட்டி கடலை நோக்கி அமர்ந்துகொண்டு இரு பக்கமும் தன் வலிய கரங்களை மணலில் ஊன்றி லேசாக பின்னால் சாய்ந்து அமர்ந்து கொண்டு அந்த  கடலையே  பார்த்துக் கொண்டிருந்தான்..

அந்த கடல் அலைகள்  ஒவ்வொரு முறையும் கரையை எட்டி விட துடித்து ஒன்றை ஒன்று முட்டி மோதிக்கொண்டு கரையை நோக்கி ஆவலாக வருவதை போலவே அவனுடைய மனமும் அவன் உள்ளே ஏதேதோ நினைவுகள்  முட்டி மோதிக் கொண்டிருக்க அந்த  கடலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன்  பார்வையில் என்ன இருந்தது?  புரியவில்லை..  அவன் அந்த கடல் மங்கையை ரசிக்கிறானா?   இல்லை வெறித்து பார்க்கிறானா?  என்று தெரியவில்லை. ஆனாலும் அந்த கடலைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

கட்டான உடற்கட்டு.. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உருண்டு திரண்டிருந்த தேகம்.. அப்பொழுது வீசிய தென்றலில் அழகாக அசைந்தாடிய அடர்ந்த கேசம்.. கண்களில் ஒரு வித ஊடுருவும் பார்வை.. அழுத்தமாக மூடியிருந்த உதடுகள்..யாரும் தன்னை எளிதாக நெருங்கிவிட முடியாதவாறு  தன்னைச் சுற்றிலும் ஒரு கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு வளையத்தை படர விட்டிருந்தான்..  

அவனைக் கண்டதுமே அருகிலிருந்த ஒரு பெண்கள் கூட்டம்

“ஏய்...  அங்க பாருங்கடி.. அந்த ஆள் செம சூப்பரா இருக்கான்.. ஹேன்ட்ஸமா  அம்சமா இருக்கான் டீ.. ஆனால் அவன்  பக்கத்துல யாருமே இல்லையே..!! இப்படி கட்டாக சிக்குனு இருக்கிறவனை எப்படி டீ இந்த பொண்ணுங்க  இன்னும் விட்டு வச்சுருக்காங்க..

பேசாம நாம  முயற்சி செய்து பார்க்கலாமா? யாருக்கு ஜேக்பாட் அடிக்குது னு பார்க்கலாம்.. “ என்று கண்சிமிட்டி தங்களுக்குள்  அவனை அந்த நெடியவனை  சுட்டிக்காட்டி கேலி செய்து பேசி சிரித்து கொண்டிருந்தனர்..  

அவர்கள் கிண்டல் கேலி  எல்லாம் அவன் காதில் விழுந்தாலும் அவன்  கருத்தில் பதியவில்லை.. இது மாதிரி எத்தனையோ பாராட்டுகளை, கன்னி பெண்களின் உளறல்களை, வம்பு பேச்சுக்களை அவன் கேட்டு கேட்டு அவன் காது புளித்துப் போய்விட்டது..

அதனால் இந்த மாதிரி கன்னிப் பெண்களின்  ரசனையான பேச்சு ஏனோ அவனுள் கர்வத்தையோ புன்முறுவலையோ தராமல் எரிச்சலைத் தான் சேர்த்தது...

அப்பொழுது அவனருகில் சற்று தொலைவில் ஒரு காதல் ஜோடி அமர்ந்திருக்க அந்த காதலனின் சில்மிஷங்களும் காதலியின் கைவளையல் சிணுங்களும் அவன்  காதில் விழ உடனே அது இன்னும் அவனை இறுக செய்தது..

தன் கையை எடுத்து காதை பொத்திக் கொள்ள வேண்டும் போல இருந்தது..  ஆனாலும் பொது இடத்தில் அது நன்றாக இருக்காது என்று பல்லை கடித்து அருகில் இருந்தவர்களின் கொஞ்சலையும் சிணுங்களையும் பொறுத்துக் கொண்டிருந்தான்..

ஆனால் உள்ளுக்குள்

“சே.. பொது இடத்தில் ஏன் தான் இப்படி நடந்து கொள்கிறார்களோ? இவங்க கொஞ்சலையெல்லாம் தனியா ரூம் போட்டு வச்சுக்க வேண்டியதுதான..“  என்று திட்டி கொண்டிருந்தவனுக்கு அங்கு நடப்பது ஒவ்வென்றையும் பார்க்க எரிச்சலாக இருந்தது..