Chillzee KiMo Books - நின் திருவடி சரணம் - விஜயகுமாரன் : Nin thiruvadi saranam - Vijayakumaran

நின் திருவடி சரணம் - விஜயகுமாரன் : Nin thiruvadi saranam - Vijayakumaran
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 18

Story Name - Nin thiruvadi saranam

Author Name - Vijayakumaran

Debut writer - No


நின் திருவடி சரணம் - விஜயகுமாரன்

சமர்ப்பணம்:

என்னுடைய இந்த முதல் நாவலை மறைந்த எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

குருவே நின் திருவடி சரணம்!!!

- விஜயகுமாரன்

 

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக விஜயகுமாரன் பகிர்ந்திருக்கும் நாவல்.

 

  1

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தினிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

அதிகாலை நேரத்தில் கோவிலின்வாசலில் இருந்த கணபதிசன்னதி முன் நின்று பாடிய முதியவரின் குரல் கணீரென்று ஒலித்தது.சாமிக்கு சூட்டப்பட்ட மலர்களிலிருந்து கிளம்பிய நறுமணமும், சாம்பிராணி, ஊதுபத்தி நறுமணமும் இந்த முதியவரின் குரலோடு சேர்ந்து அந்த இடத்தை பரவசப்படுத்தி கொண்டிருந்தது.

காரை கோவிலின் அருகில் பூட்டியிருந்த கடையின் பக்கத்தில் நிறுத்திவிட்டு கிருஷ்ணா இறங்கினான்.கோயிலினுள் நுழையும்போதே ஒரு முதியவரின் குரல் வரவேற்றது.

பூஜைக்கு இன்னும் நேரம் இருந்தது.கோவிலை சுற்றியிருந்த பிரகாத்தில் நடக்க தொடங்கினான்.இராமேசுவரத்தில் இருக்கும் இராமநாதசுவாமிகோவில் பிரகாரத்தை போல பெரிய,நீளமானபிரகாரம் அது.விநாயகரை வழிபட்டு நவகிரகங்களை சுற்றிவிட்டு பிரகாரத்தை சுற்றி வரும்போது கோயிலின் தல வரலாறு இது பாண்டியர் காலக் கோவில் என்பதை பறைசாற்றியது. உறுதியான கோட்டையை போன்ற கருங்கல் சுற்றுச்சுவரும் ஒரு நீண்ட பிரகாரமும் மிகச் சரியான இடங்களில் உப தெய்வங்களும் மிக கச்சிதமாக அமையப்பெற்ற கோவில். தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது. தற்போது தமிழக அரசின் கீழ் இந்து அறநிலையத்துறை சார்பில் பராமரிக்கப்படுகிறது என்பதை அங்கிருந்த பலகை அறிவித்தது.

அதிகாலை பூஜை தொடங்கும் நேரம் பெரியவர் தற்போது சுந்தரர் அருளிய தேவாரத்தில் வரும் அக்கோயிலை பற்றிய பதிகத்தை பாடிக்கொண்டிருந்தார். மிக சன்னமான அவருடைய குரலோடு தேவாரப் பதிகங்களும் சேர்ந்து போட்டி போட்டு மனதை மயக்கி வசீகரித்தது.

அதைக் கேட்டுக்கொண்டே நின்ற கிருஷ்ணா அலங்காரம் முடிந்து திரை விலகி பூஜைக்கான மணி ஒலிக்க ஆரம்பித்தவுடன் மூலவர் சந்நிதியை நோக்கி நடந்தான்.பிரளயவிடங்கர் என்கிற திருகல்யாண நாதர் முழு அலங்காரத்தில் ஜொலித்தார். ஒரு மணமகனை போன்ற பளபளப்புடன் மிக சாந்தமாக கனிவான பார்வையுடன் மூலவர் வீற்றிருந்தார்.

கோவிலில் கூட்டம் குறைவாய் இருந்தது. “அப்பா இந்த கோவிலில் சாமிக்கு ஏன் கல்யாண நாதர் என்று பெயர் வந்தது” சிறுவன் கிருஷ்ணா கேட்க“திருமண பாக்கியம் வேண்டி நிற்பவர்கள் இவரை வந்து வணங்கினால் உடனே திருமணத் தடை நீங்கி காரியம் கைகூடும் என்பது ஐதீகம்” என்றார் அப்பா. மகனுக்கு புரியவில்லை.“எல்லாருக்கும் தானே திருமணம் நடக்கும். இதுக்கு ஸ்பெஷலாக ஏன் வேண்டனும். நம்மால முடியாத காரியத்துக்கு வேண்டினால் பரவாயில்லை. இதுக்கெல்லாமா வேண்டுவது”இது மகன்.

“தம்பி திருமணம் என்பது ஒரு தவம். எல்லோருக்கும் அதுசிறப்பாகக் கைகூடும் என்று சொல்ல முடியாது. கண்டிப்பாக ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திசைமாறும் சம்பவம்தான் திருமணம். ஒன்றும் இல்லாதவன் திருமணத்துக்குப்பின் ராஜாஆவதும்,எல்லாம் கொண்ட செல்வன் பிச்சைக்காரன் ஆவதும் திருமணத்திற்கு அப்பால்தான். அதுவும் எந்த சமயத்தில் நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. மழைப்பேறும் மகப்பேறும் அந்த மகாதேவனுக்கும் தெரியாது என்று சொல்வார்கள் ,அதில் திருமணப்பேறுவையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.இங்கு வேண்டிக் கொள்வது திருமணத்துக்கு வரன் கிடைக்க மட்டுமல்ல நல்ல தகுதியான, சரியான வரன் அமைவதற்கும்தான் இந்த வேண்டுதல்.கல்யாணம் நடக்க ஒரு பெண்ணுக்கு ஆணும், ஆணுக்கு பெண்ணும் மட்டும் தேவை என்றுநினைக்காதே. மனப்பொருத்தம், தகுதி, பூர்வஜென்ம பலன்கள் இவை அனைத்தும் கூடி வரவேண்டும். அப்போதுதான் அந்த இல்வாழ்க்கை சிறந்திருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நீடிக்கும்.மனப்பொருத்தம் இல்லாதவர்களை ஜோடி சேர்த்தால் குடும்பம் சீரழியும். குடும்ப மானம் சந்தி சிரிக்கும்.

தகுதியற்ற இருவர் திருமணம் செய்து கொண்டால் அவர்களுடைய வம்சமே முட்டாள்களாகவும், பிறரிடம் கையேந்தும் நிலையும் ஏற்படும். இருவரில் ஒருவராவது தகுதியானவராக இருக்க வேண்டும்.குடும்பத்தில் சரியான முடிவுகளை எடுக்க புத்திசாலிதனம் தேவை. நீயா நானா என்றும் போட்டியிடாது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும்.இந்தத் தகுதி இல்லாதவர் ஜோடி சேராமல் இருப்பது நலம்.