Chillzee KiMo Books - உள்ளக் கதவை மெல்லத் திறந்தால் - முகில் தினகரன் : Ulla kathavai mella thiranthaal - Mukil Dinakaran

உள்ளக் கதவை மெல்லத் திறந்தால் - முகில் தினகரன் : Ulla kathavai mella thiranthaal - Mukil Dinakaran
 

உள்ளக் கதவை மெல்லத் திறந்தால் - முகில் தினகரன்

முகில் தினகரனின் புதிய நாவல்.

 

 

அத்தியாயம் - 1

    

காஸ் அடுப்பை அணைத்து விட்டு, கையில் இரண்டு தேநீர்க் கோப்பைகளுடன், பெட்ரூமிற்குள் வந்த கல்யாணசுந்தரம், உறங்கிக் கொண்டிருந்த தனது ஆறு வயது மகன் அபிஷேக்கை மெல்ல உசுப்பி, எழுப்பினான்.

முனகிக் கொண்டே எழுந்த சிறுவன், “டாடி...இன்னிக்கு எனக்கு ஸ்கூல் லீவு டாடி!...இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன் டாடி!” என்று கெஞ்சலாய்க் கேட்க,

மெல்ல முறுவலித்த கல்யாணசுந்தரம், “ஓ.கே!...இந்த டீயை மட்டும் வாங்கிக் குடிச்சிட்டு....அப்புறம் படுத்துத் தூங்கு!” என்றான்.

சிணுங்கியபடியே எழுந்தமர்ந்து, கண்களைக் கூடத் திறக்காமல் அப்பா தன் கையில் டீயைப் பருகி விட்டு, அப்படியே மறுபடியும் படுத்துக் கொண்டான் அபிஷேக். புன்னகையுடன் மகனின் தலையை மெல்லத் தடவிக் கொடுத்த கல்யாணசுந்தரம், மீண்டும் சமையலறைக்கு வந்து, காலைச் சிற்றுண்டி தயாரிப்பு வேலையில் ஈடுபடத் துவங்கினான்.

ஃபிரிட்ஜைத் திறந்து, அதற்குள்ளிருந்த பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்தவன் காதுகளில் ஏதோ ஒரு வாகனம் வந்து தன் வீட்டு வாசலில் நிற்கும் ஓசை கேட்க, ஃபிரிட்ஜை மூடி விட்டு, அவசரமாய் வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தான்.

டாக்ஸியிலிருந்து அவன் தாய் சுலோச்சனாவும், அண்ணன் மோகனசுந்தரமும், அண்ணி ராதிகாவும் இறங்கிக் கொண்டிருந்தனர்.

 அவசர அவசரமாய் சமையலறையை விட்டு வெளியே வந்தவன், நேரே வாசல் நோக்கிச் சென்றான்.

“அடடே...வாங்க!...வாங்க!” என்று முக மலர்ச்சியுடன் வரவேற்றவாறே வாசற்படியிறங்கி கீழே வந்து தன் தாயின் கையிலிருந்த சூட்கேஸை வாங்கிக் கொண்டான்.

“என்ன கல்யாணம்...நல்லாயிருக்கியா?” மோகனசுந்தரம் கேட்டான்.

“ம்..நல்லாயிருக்கேண்ணா!” என்றபடியே கல்யாணசுந்தரம் முன்னால் நடந்து வீட்டிற்குள் நுழைய, அவனைப் பின் தொடர்ந்தனர் அவர்கள்.

உள்ளே வந்ததும் சுலோச்சனாவும், மோகனசுந்தரமும் ஹால் சோபாவில் அமர,  கல்யாணசுந்தரமும் அண்ணன் அருகில் அமர்ந்து கொண்டான். ராதிகா மட்டும் அமராமல், “எங்கே அபிஷேக்?..இன்னும் எந்திரிக்கலையா?” கேட்டாள்.

“இப்பத்தான் எந்திரிச்சு டீ சாப்பிட்டுட்டு...மறுபடியும் படுத்துத் தூங்கிட்டான்!”

“ஏன்?...இன்னிக்கு ஸ்கூலுக்குப் போகலையா?” மோகனசுந்தரம் கேட்க,

“இன்னிக்கு அவங்க ஸ்கூல்ல ஏதோ இண்டர் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் மீட்டாம்...அதுக்காக இவனுக்கெல்லாம் லீவு விட்டுட்டாங்க!”

ராதிகா அபிஷேக்கைக் காணும் ஆவலில் பெட்ரூமை நோக்கிச் செல்ல, சோபாவில் உட்கார்ந்திருந்த சுலோச்சனாவும் எழுந்து உடன் சென்றாள்.

படுக்கையில் அரைத் தூக்கத்தில் கிடந்த அபிஷேக்கை அவர்கள் மெல்ல எழுப்ப,  நிதானமாய்க் கண் திறந்தவன் அவர்களிருவரையும் பார்த்து “மலங்க...மலங்க” விழித்தான்.

“குபுக்”கென்று அழுத சுலோச்சனா, “இந்தப் பச்சை மண்ணை விட்டுட்டுப் போக அந்த பாதகத்திக்கு எப்படித்தான் மனசு வந்ததோ?...” புலம்ப ஆரம்பித்தாள்.

“அத்தை...எதுக்கு இப்படி குழந்தைக்கு எதிர்ல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணறீங்க?...” சன்னக் குரலில் ராதிகா தன் மாமியாரை அடக்கி விட்டு, அபிஷேக்கை அலேக்காகத் தூக்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

“என்னடா...குட்டிப் பயலே!...இன்னுமா தூக்கம் தெளியலை!...எங்கே....அப்படியே இறங்கி பெரியப்பா கிட்டே வா பார்க்கலாம்!” சொல்லியபடியே மோகனசுந்தரம் கைகளை நீட்ட,

ராதிகா அபிஷேக்கை கணவரிடம் தந்தாள்.

அதற்குள் சுலோச்சனா தன் சூட்கேஸிலிருந்து கேக் வகையறாக்களை எடுத்து அபிஷேக்கிடம் தர,