யாழினி - பாரதி பிரியன் : Yaazhini - Bharathi Priyan
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 19

Story Name - Yaazhini

Author Name - Bharathi Priyan

Debut writer - No


யாழினி - பாரதி பிரியன்

(பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக பாரதி பிரியன் பகிர்ந்திருக்கும் நாவல்.

 

1 வஞ்சியை துறந்த வஞ்சி

 

காரிருள் மெல்ல தன் போர்வையை பூமி மீது இருந்து விலக்கும் பொன்னெழில் சூர்யோதய வேளை.... ஆதவனின் அனல் பட்டு வெட்கி வெடிக்கும் தாமரை.... மல்லை கடலின் தாலாட்டில் கரை தழுவி காதல் புரியும் பேரலை.... காஞ்சியிலிருந்து வடகிழக்கில் வங்கத்து மண் மேட்டின் மேல் பரந்து விரிந்து காட்சி தரும் மல்லபுரம்.... படைவீரர்களின் முகாம்களால் பரபரப்புடன் காட்சி தருகின்றது. படை வீரரின் கூடாரங்களை வேகமாக கடந்து நடுநாயகமாய் தெரியும் பெரிய கூடாரத்தை புரவி ஒன்று சென்றடைந்தது.

புரவியின் மீதிருந்து வேகமாக இறங்கிய வீரன் ஒருவன் தன் அடையாளத்தை காவல் வீரரிடம் காட்ட கூடாரத்துக்குள் அவன் அனுமதிக்கப் படுகின்றான்.

பல்லவ பேரரசின் படைத் தலைவருக்கு வணக்கம் என்று தலை தாழ்த்திய அந்த வீரனை ஏறெடுத்துப்  பார்த்தான் கந்தமாறன்.

"கந்தமாறன் சின்னமணி" பல்லவப் பேரரசின் மாபெரும் படைத்தலைவன். அரசர் சிம்ம விஷ்ணுவின் ஆத்மார்த்த தோழன். சாளுக்கியத்தை வீழ்த்திய பல்லவ படையை முன்னின்று நடத்தி வெற்றி கொண்டவன். வீரத்தின் விளைநிலம் என்று கூட கூறலாம். உடலில் பட்டிருக்கும் விழுப்புண்கள் கந்தமாறன் எப்படிப்பட்ட வீரன் என்பதை பறைசாற்றும்.

என்ன செய்தி?!!... சொல் வீரனே...என்ற கந்தமாறன் குரலில் சிறிது கூடப் பதட்டம் இல்லை.

தலைவரே உறையூரைத் தாண்டி விரட்டப்பட்ட செம்மாடன் தலைமையிலான களப்பிரர் படை, வஞ்சியை நேற்றுத் தாக்கத் தொடங்கியது. அரை நாள் போரில் வஞ்சி மொத்தமும் களப்பிரர்களளால் கடுமையாக சேதமடைந்து நகரே முழுமையாக சூறையாடப்பட்டுள்ளது.

வஞ்சிக்கோட்டம் முழுவதும் களப்பிரர்கள் கபளீகரம் செய்து வருகின்றனர். ஆன்பொருநை நதி குருதி நதியாக பாய்ந்து கொண்டிருக்கிறது.... என்று பதட்டத்துடன் பேசி முடித்தான் வீரன்.

அப்படியா செய்தி?!!.. சேரமன்னன் நிலை என்ன?..!! என்றான் கந்தமாறன், எவ்வித வருத்தமும் இன்றி....

சேர அரசர் மாக்கோதையார் வீரமரணம் அடைந்தார். அவர்தம் படைவீரர் பலரும் மாண்டனர். போரை எதிர்பார்த்திராத தேசத்தை, களப்பிரர்களின் கோபாக்கினி சுட்டெரித்து விட்டது என்றான், போர்வீரன்.

சற்று நேரம் அமைதி காத்த கந்தமாறன்... சரி நீ போகலாம்...வேறு ஏதேனும் தகவல் இருப்பின் எனக்கு உடனே தெரிவி...என்றான்.

தென்னகத்தை அடைய தடையாக இருந்த களப்பிரர்கள், சோழர்களை, ஓட ஓட விரட்டி வேட்டையாடி, துரத்தி விட்டோம். இன்னொரு எதிரி பாண்டியன்!!... அவனை மதுரையிலேயே மண்ணைக் கவ்வச் செய்ய வேண்டும். வேங்கை நாட்டில் இருந்து  படை வந்தவுடன் தெற்கு நோக்கி நகர்த்தலாம். ஆனால் சேரன்???... இவன் நம்முடைய போர் குறிப்பில் இல்லாதவன். களப்பிரர்களின் கோபத்திற்கு ஆளாகி தன்னை அழித்துக்கொண்டு விட்டானே.!!??.. அதிலும் சேரமான் மாக்கோதையார்.... சாதுவிலும் சாது.... இறைப்பணி மட்டுமே தெரிந்தவன். பாவம் நம்மிடம் பட்ட சூட்டை களப்பிரர் அவன் மீது காட்டிவிட்டனர். அதற்கு நாம் பொறுப்பாக முடியாது...என்று தனக்குத் தானே அறிவுரை கூறி, தன்னை சமாதானப்படுத்திக் கொண்ட கந்தமாறன்.... தன் உடைகளை களைந்துவிட்டு, குளியலறைக்கு குளிக்கச் சென்றான்.

அதேவேளையில் வெளியே காவலுக்கு நின்று கொண்டிருந்த ஒரு வீரன் ஒருவன் கூடாரத்திற்குள் மெல்ல நுழைந்தான். கந்தமாறன் மஞ்சணையின் அருகே இருந்த பெரிய மேஜையின் மீது வகுக்கப்பட்டிருக்கும் போர் வியூகங்களை சிறிது நேரம் உற்று நோக்கியவன், யாரோ வருவது போன்ற சப்தம் கேட்கவே, மளமளவென்று கூடாரத்தை விட்டு வெளியேறி, வீரர்களின் கூடாரங்கள் நிறைந்திருந்த பகுதியை கடந்து, புரவிகள் கட்டும் இடத்தை அடைந்தான். அங்கு சென்றபின் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, மெல்ல சீட்டிகை அடிக்கவே!!.. புரவிகள் கட்டப்பட்டிருந்த கொட்டிலின் கடைசிப் பகுதியில் இருந்து ஆஜானுபாகுவான உருவம் ஒன்று வெளியே வந்தது.

குமணா காலம் இல்லை...!! நீ உடனே புறப்பட வேண்டும். இன்று மாலை படை வீரர்களில் சிலர், உறையூரைத் தாண்டி ஆவூர் நோக்கிச் செல்கிறார்கள்அவர்களில் ஒருவனாக நீயும் புறப்படு... அவர்கள் அசரும்  வேளையில் நீ தப்பி, "குதிரை மலை" சென்று விடு. அங்கு தங்கியிருக்கும்  தலைவருக்கு, சேர்க்க வேண்டிய தகவலை, நான் சிறிது நேரத்தில் உன்னிடம் தருவேன் என்றான்..... போர்வீரன் உடையில் இருந்தவன்.