ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சசிரேகா : Edhetho ennam valarthen - Sasirekha
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 24

Story Name - Edhetho ennam valarthen

Author Name - Sasirekha

Debut writer - No


ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சசிரேகா

முன்னுரை

தனக்கென அன்பு செலுத்த யாரும் இல்லாத நிலையில் அன்பு காட்ட ஒருவர் இருக்கிறார் என தெரிந்தும் அவரை சென்றடையும் பாதை கரடுமுரடாக இருந்தாலும் துணிந்து சென்று பல சவால்களைக்கடந்து தனது அன்புக்குரியவரை கைபிடித்தால் உருவாகும் அன்பே காதலாகும் இதுவே இந்த கதையின் கருவாகும்.

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள காவிரி ஓடும் ஒரு அழகிய கிராமத்தில் 

ரைஸ் மில்லுக்கு முன் தன் பைக்கில் சென்று நின்றான் வீரேந்திரன். தினமும் முழுநேரமும் விவசாயம் மட்டுமே செய்வதால் அவனது ஆடையில் எப்போதும் மண் ஒட்டியிருக்கும், வேட்டியும் சட்டையும் அவனது வேலைக்காகவே போட்டு பழக்கிக் கொண்டான். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் அக்ரிகல்ச்சர் படிப்பை படித்து முடித்ததால் அவனது விவசாயத்திற்கு அவனது படிப்பு பயன்பட்டது.

விவசாயிகளுக்கே இருக்கும் கம்பீரமும், மாம்பழ நிறத்தில் ஆண்மகனுக்கு இருக்கும் வீரமும், தைரியமும் அவன் முகத்தில் அதிகமாக இருக்கும். நெஞ்சில் உரமேறிய துணிச்சல் யாரையும் அடித்து வீழ்த்தக்கூடிய வீரமான பார்வை எதிரில் இருப்பவர்களை நடுநடுங்க வைக்கும். இயல்பிலேயே பெருமாள் பக்தன் என்பதால் எந்நேரமும் எந்த காரியம் தன் வாழ்வில் நடந்தாலும் கீதாசாரத்தில் உள்ளபடி எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்ற மந்திரத்தை நினைத்து ஆறுதல் அடைவான் வீரேந்திரன். சிறுவனாக இருந்த போதே அவனது தந்தை சுப்பிரமணியம் வீரேந்திரனை அவருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயத்திற்கு இழுத்துவிட்டார்.

அவன் வயதில் அவனால் எது முடியுமோ அதை அவன் செய்தான். நிலத்திற்கு நீர் பாய்ச்சுவது, உரம் தெளிப்பது என வருடங்கள் ஏற ஏற அவனது வேலைகளும் அதிகமாகியது. கூடவே தந்தையின் திட்டுக்களும் அர்ச்சனைகளும் அதிகமாகியது. தந்தையின் நிழல் போல வீரா சுற்றி வந்தாலும் சரி அவன் தவறே செய்யவில்லை என்றாலும் அவனது துடுக்குத்தனமும் கோபமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளால் மனதளவில் வீரேந்திரனை ஒரு செல்லாக்காசாகவே மதித்து வெறுக்கலானார் சுப்பிரமணி.

வருடங்கள் போக போக வீரேந்திரனால் நிலத்தில் விளைச்சல் அதிகமானாலும் அவன் மீதான மதிப்பு மரியாதை அவன் தந்தையிடத்தில் குறைந்துக் கொண்டே வந்தது. காரணம் அவனது பேச்சு, யாருக்கும் அஞ்சாமல் பேசுவது, தப்பென்றால் உடனே அடிப்பது, காரணம் இல்லாமல் முன்னாடி வந்து நிற்பது, உதவி செய்கிறேன் என வம்பை விலைகொடுத்து வாங்குவது, இப்படிப்பட்ட பல்வேறு நல்ல சாரம்சம் அவனிடத்தில் ஒளிவீசியது.

அந்த ஒளியில் அவன் ஊரிலிருக்கும் பலரும் பாதிக்கப்பட்டார்களோ இல்லையோ அவனது தந்தை நிறையவே பாதிக்கப்பட்டார். அவன் மீதான புகார்கள் அனைத்தும் அவரிடத்தில் வந்து நிற்கும், அவரும் தீர்ப்பார் எப்படியென்றால் அவன் பக்கம் நியாயத்தை கேட்காமலே வீராவுக்கு தண்டனை வழங்கி எதிராளிகளுக்கு நல்லது செய்துவிடுவார்.

வீரேந்திரனின் தாய் பவானி அநியாயத்திற்கு நல்லவள். அன்பு அவரிடம் தாராளமாக கிடைக்கும், 4 பிள்ளைகளை பெற்றப்போதிலும் இன்னும் சிறுபிள்ளை போலவே விவரம் அறியாமல் எதையாவது பேசிவைத்து தன் கணவர் சுப்பிரமணியத்திடம் தினமும் திட்டுவாங்குவார்.

அவர்களுக்கு பிறந்த முதல் மகன் குமரன் பி.காம் பட்டதாரி, தன் தந்தையின் ரைஸ்மில்லை பார்த்துக் கொள்ளும் பொறுப்பில்லாத செலவாளி. வேலைக்கு செல்வதாகச் சொல்லி அவன் செய்யும் அளப்பரையைத் தாங்க முடியாது. ரைஸ்மில்லில் வேலை செய்பவர்களுக்கு குமரனை பிடிக்காது என்றாலும் முதலாளி பையன் என்றபடியாலும் பல வருடங்களாக வேலை செய்து வந்த விசுவாசத்திலும் அவன் செய்யும் தவறுகளை அவன் தந்தையிடம் சொல்வதில்லை. குமரனும் ரைஸ்மில்லுக்குச் சென்று வேலை செய்ய வேண்டும் என இல்லை, ரைஸ்மில்லில் இருக்கும் வேலையாட்களே அனைத்தும் செய்துவைப்பார்கள். பேருக்கென்று வேலை செய்ய வேண்டுமே என காட்டிக் கொள்வதற்காகவே ஒரு நாளில் 1 மணி நேரம் ரைஸ்மில்லில் அனைவரையும் வேலை வாங்குகிறேன் என அவர்களது வெறுப்பை சம்பாதித்துவிட்டு கல்லாவில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு அவனது நண்பர்களுடன் கொட்டமடிக்கச் சென்றுவிடுவான்.

அடுத்து 2வது மகனான முருகன் பிஏ பட்டதாரி, தந்தையின் கரும்பு ஆலையை பார்த்துக் கொள்கிறேன் என எந்நேரமும் ஆலையிலேயே கிடப்பவன் காரணம் அங்கு இருக்கும் வேலையாட்களின் சகவாசம் அப்படி, அவனுக்கு மதுபானம் கொடுத்து கெடுத்து கரும்பு ஆலையில் செய்யும் அச்சு வெல்லக்கட்டிகள், உருண்டை வெல்லங்களைத் திருடி வெளியே விற்றுக் கொண்டிருப்பார்கள் முருகனின் நண்பர்கள். அவனும் குடிகாரன் என அவர்களிடம் பெயர் எடுத்தாலும் வீட்டிலும் வெளி உலகிலும் சிறந்த தொழிலதிபர் என்ற பட்டத்தைப் பெற்றவன்

அடுத்து 3வது மகன் அழகன் பிபிஏ, பிறக்கும் போது அழகாக பிறந்துவிட்டான் என அவனுக்கு அழகன் என பெயர் வைத்தார்கள் அவனின் பெற்றவர்கள். அதற்கு ஏற்றார் போல் அவன் கண்ணில் படும் எந்த பெண்ணையும் விடுவதில்லை., அழகான பெண்களை விரட்டி பிடித்து காதல் செய்வது போல டைம்பாஸ் செய்வது என வாழ்க்கையை சுகபோகமாக வாழ்ந்துக் கொண்டிருப்பவன்.