தேடி உனைச் சரணடைந்தேன்..... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Thedi unai saranadainthen..... - Srija Venkatesh
 

தேடி உனைச் சரணடைந்தேன்..... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

தேடி உன்னைச் சரணடைந்தேன் என்னும் இந்த நாவல் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், பெண்களின் நிலை, இன்றும் பெண்களை சில குடும்பத்துப் பெரியவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? போன்றவற்றை மையமாகக் கொண்டது.

பெரிய குடும்பத்தில் பிறக்கும் கடைசி மகன்கள் ஒன்று சிறு குழந்தை என்று ஒதுக்கப்படுவார்கள் அல்லது மிக அதிக செல்லம் கொடுத்துக் கெடுக்கப்படுவார்கள். இங்கே நமது நாயகன் செந்தில் குமரன் பாவம் ஒதுக்கப்படுகிறான். அவனை தகப்பனே மதிக்கவில்லை எனில் உடன் பிறந்த அண்ணன்கள் எங்கே மதிப்பார்கள்? அவர்களது மனைவிமார்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால் பாவம் செந்திலுக்கு தான் ஒதுக்கப்படுகிறோம் என்பதோ, தனக்குப் பெரிய மரியாதை இல்லை குடும்பத்தில் என்பதோ தெரியவில்லை அவன் வாழ்க்கையில் பெண் என ஒருத்தி வரும் வரையில். அவளும் தகப்பனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண். அதுவும் எதற்கு? பழி வாங்க. இது எதுவும் செந்திலுக்குத் தெரியாது. சந்தோஷமாக ஆரம்பிக்கும் அவன் மண வாழ்க்கையில் பல சூறாவளிகள், சதிகள். தம்பதிகள் பிரிந்து வாழும் நிலை. இறுதியில் என்ன ஆனது?

சிவகுர் எனப்படும் பண முதலை தன் கடைசி மகனின் திறமைகளை, அவன் ஆசைகளைப் புரிந்து கொண்டாரா? பெண்களும் மனிதப்பிறவிகள் தான். அவர்களுக்கும் ஆசா பாசங்கள், சாதிக்கும் ஆசை எல்லாம் இருக்கும் என உணர்ந்தாரா? அப்படியே உணர்ந்தாலும் காலம் கடந்து விட்டதோ?

படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் "தேடி உன்னைச் சரணடைந்தேன்"

 

அத்தியாயம் 1 :

 

சிவகுரு இல்லம் என்று பெயர் பொறிக்கப்பட்ட அந்த மிகப்பெரிய வீடு எப்போதும் கலகலவென காணப்படும். தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பிரபல தொழிலதிபர் சிவகுரு நாதன் அவர்களின் வீடு தான் மேலே சொன்ன சிவகுரு இல்லம். அன்று கூடுதல் கலகலப்பாகவே காணப்பட்டது. காரணம் அவரது கடைசி மகனான செந்தில் குமரனுக்கு பெண் பார்க்கப் போகிறார்கள். தொழிலதிபருக்கு மூன்று மகன்கள். பெண் வாரிசு என்று யாருமில்லை. மூத்த மகன் துரை ராஜ் அப்பாவுக்குத் துணையாக எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறார். அவருக்கே வயது ஐம்பதை நெருங்குகிறது. துரை ராஜுக்கு அடுத்தவன் தங்க ராஜுக்கும் வயது 46 . கடைக்குட்டியாக செந்தில் பிறந்து சில ஆண்டுகளிலேயே அவனது தாய் சிவகாமி இறந்து விட்டாள்.

 

அது முதல் அண்ணிகளின் அரவணைப்பிலும் கண்டிப்பிலுமே தான் வளர்ந்தான் செந்தில். கடைக்குட்டி என்பதால் செல்லம் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருந்ததில் அன்பு என்றால் என்ன என்பதையே அவன் கண்டதில்லை. எந்நேரமும் அதட்டலும் மட்டம் தட்டுதலுமே அவனது வாழ்க்கையானது. ஆனாலும் அவன் மனதில் அன்புக்கும் பாசத்துக்கும் குறைச்சல் இல்லை. இப்போது கூட பெண் எப்படி இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டதைக் கூட யாரும் கேட்கத் தயாராக இல்லை. அவர்களாகவே ஒரு ஏற்பாடு செய்திருந்தனர்.

 

தலை நிறையப் பூவும் உடம்பில் சுற்றிய பட்டுச் சேலைகளுமாய்க் கிளம்பினர் அண்ணியர் இருவரும்.

 

"தம்பி செந்திலு! இன்னைக்காவது நல்லா உடை உடுத்திக்கடா! அப்புறம் பொண்ணு உன்னைப் பிடிக்கல்லன்னு சொல்லிறப்போகுது" என்றாள் தங்கராஜ் அண்ணனின் மனைவி சித்ரா அண்ணி. அதைக்கேட்டு சிரித்தாள் மேகலா அண்ணி. மேகலா மூத்தவரின் மனைவி. அவர்களுக்கு செந்தில் என்றால் எப்போதுமே இளக்காரம் தான்.

 

"நான் எப்பவுமே நல்லாத்தானே அண்ணி டிரெஸ் பண்ணிக்குவேன்? ஏன் அப்படிச் சொல்றீங்க?" என்றான் செந்தில் அப்பாவியாக. அதைக்கேட்டு இன்னும் அதிகமாகச் சிரித்தனர் அண்ணியர்கள்.

 

"என்ன சிரிப்பு இப்படி? வீடே இடிஞ்சி விழுந்துடும் போல! வர வர நம்ம வீட்டுப் பொம்பளைங்களுக்கு அடக்கமே இல்லாமப் போச்சு" என்று கத்தியபடி வந்தார் சிவகுரு நாதன். அவரைத்தொடர்ந்து வந்தனர் மற்ற இரு அண்ணங்களும்.

 

"இந்தா மேகலா! எதுக்காக இப்படிச் சத்தம் போட்டுச் சிரிக்கறீங்க? வாசல்ல இருக்குற கூர்க்கா வரைக்கும் கேக்குது!" என்றார் துரை ராஜ் தன் பங்குக்கு. அதைக்கேட்டு பெண்களின் முகங்கள் சுருங்கின.

 

"எதுக்குண்ணே நல்ல விஷயதுக்குக்காக வெளிய கிளம்பும் போது மனசை வருத்தப்பட வைக்கறீங்க? " என்றான் செந்தில். அப்போது தான் அண்ணியர் அவனைக் கிண்டல் செய்தனர் என்பதைக் கூட மறந்து விட்டது அவனது நல்ல மனது.

 

"ஆமா! நீ அவங்களுக்கு வக்காலத்தா? போடா! போயி நம்ம ராசியான வண்டியில ஏறு!" என்று கூறினார் சிவகுரு நாதன். அனைவரையும் ஏற்றிக் கொண்டு ராசியான வண்டி என்று சொல்லப்பட்ட டவேரா விரைந்தது. காரில் போகும் போதே துரைராஜும் மற்றவர்களும் அவனுக்கு மாறி மாறி அறிவுரை கூறினர்.

 

"செந்தில்! நீ பெண் பாக்கப்போற எடத்துல கொஞ்சம் முறைப்பவே இருக்கணும். சிரிக்கவே கூடாது. புரியுதா? அவங்க உன்னைப் பார்த்து பயப்படணும். ஈன்னு இளிக்காதே! அங்க இருக்கறவங்க கூட சகஜமா பேச ஆரம்பிச்சுடாதே என்ன?" என்றான் தங்கராஜ்.

 

"நல்லா சொல்லு தங்கம்! அதே மாதிரி பொண்ணைப் பிடிச்சிருக்கான்னு கேட்டா