Chillzee KiMo Books - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - சசிரேகா : Unnale ennaalum en jeevan vazhuthe - Sasirekha

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - சசிரேகா : Unnale ennaalum en jeevan vazhuthe - Sasirekha
 

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - சசிரேகா

முன்னுரை
தான் தேடும் காதலனே தோழன் என்பதை அறியாத கதாநாயகியும் தன் மேல் பொய்யான பழியை சுமத்தி தண்டனை வாங்கிக் கொடுத்த எதிரிகளை பழிவாங்கத் துடிக்கும் கதாநாயகனும் வாழ்வில் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும்.
 

மானாமதுரையில்

புதன்கிழமை காலை 9.30 மணியளவில்

ஊருக்கு பெரிய மனிதர், கோயில் தர்மகர்த்தா, இல்லாதவர்க்கு வாரி வழங்கும் வள்ளலுக்கு நிகரான மனது படைத்த அகமுடைநம்பி தனது பேரனுக்கு திருமணம் செய்ய எண்ணி அவருக்கு சமமான வசதி படைத்த இன்னொரு பெரிய மனிதர் ஐயாகண்ணு என்பவரின் மகளை பெண் பார்க்க தனது குடும்பம், சொந்த பந்தம் புடை சூழ ஐயாகண்ணுவின் வீட்டிலிருந்த ஹாலில் அமர்ந்திருந்தார்.

பெண்கள் அனைவரும் அந்த வீட்டு பெண்களுடன் கலகலப்பாக பேச ஆண்கள் மேம்போக்காக வியாபாரம், விவசாயம் பொதுவான பேச்சுக்கள் என கலந்துவிட்டனர். அகமுடைநம்பியிடம் பேச அஞ்சி மற்றவர்கள் அவரை தனிமைப்படுத்திவிட்டனர். அவரும் தன்னை அனைவரும் பெரியாளாக மதித்து ஒதுக்கி வைப்பது கூட சிறிது கஷ்டத்தை அளித்தாலும் அதற்காக யாரையும் அவர் கோபித்துக் கொள்ளாமல் அனைவரும் சிரித்து பேசி ஒண்ணு மண்ணாக பழகுவதைக்கண்டு ரசித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். என்னதான் ஐயாகண்ணு பெரியாளாகவே இருந்தாலும் அகமுடைநம்பி முன் அவர் நின்று பேச கூட பயந்து அவர் பக்கத்தில் கைகட்டி மரியாதையுடன் நின்றிருந்தார்.

ஐயாகண்ணுவின் ஒரே மகள் மகாலட்சுமிக்கு அகமுடைநம்பி அவர்களின் மூத்த பேரனும் அவரது அடுத்த வாரிசான முத்துநிலவனுக்கு பெண் பார்க்க வந்திருந்தார்கள்.

இதுவரை 20 இடங்களில் பெண் பார்த்தாயிற்று முத்துநிலவனுக்கு ஏற்ப பெண் அமைய வேண்டும் என்பது அகமுடைநம்பியின் கூற்று. பெரியவர் என்பதால் அவரது பேச்சை மற்றவர்களால் தட்டமுடியவில்லை. முத்து நிலவனும் தன்னை பெற்றவர்களை விட தனது தாத்தாவின் மீதே அதிகளவு அன்பு வைத்திருந்தான், அதனால் அவரது விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்து பழகாதவன். முத்துநிலவனுக்கு என்று ஒரே ஒரு தம்பி மிகவும் செல்லமாக பெற்றவர்கள் வளர்த்திருந்தார்கள் அவன் பெயர் கார்த்திகேயன்.

தன் அண்ணனுக்கு திருமணம் முடிந்த பிறகுதான் தனக்கு என 2 வருடங்களாக காத்திருந்தான். ஒவ்வொரு முறையும் பெண் பார்க்கும் படலம் ஆரம்பமாகும் போதும் கார்த்திகேயன்தான் அனைத்து ஏற்பாடுகளையும் செவ்வனே செய்வான், ஆரம்பத்தில் இந்த பெண் பார்க்கும் படலம் அவனுக்கு புதிதாக இருந்தது, ஒருவித உற்சாகத்துடன் அதில் ஈடுபட்டான், அடுத்தடுத்து முறைகள் வரும் போது தொய்வு வர சற்று களைத்துவிட்டான். ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் இப்போது சுத்தமாக அவனிடம் இல்லை ஏதோ தினமும் செய்யும் வேலைகள் போல பெண் பார்க்கும் படல ஏற்பாடுகளையும் இயந்திரத்தனமாகவும் அதே சமயம் சரியாகவும் செய்துவந்தான்.

இன்றும் அவனது ஏற்பாடுகள் அற்புதம் என பலரும் பாராட்ட அவனோ மாட்டிக்கொள்ளும் திருடனைப் போல வேர்த்து விறுவிறுத்து படபடப்பாக அமர்ந்திருந்தான் கையில் செல்போன் அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை அந்த செல்போனுக்கு மெசேஜ் வரும் போதும் அவனது முகம் பேயறந்ததைப் போல மாறிவிடும், தப்பு செய்தவன் கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் தருணம் வரும் போது எப்படி இருப்பானோ அதே போல கார்த்திகேயனும் இருந்தான். யாரும் தன்னை கண்டு சந்தேகப்படக் கூடாதென அவசரமாக அனைவரின் பார்வையில் இருந்தும் தப்பிக்க ஒதுங்கி நின்று ஒதுங்கி நின்று ஒருவழியாக வீட்டின் வாசலுக்கே வந்துவிட்டான்.

கைகள் நடுங்கிக் கொண்டே என்ன செய்வது ஏது செய்வதென மனம் கலங்கியபடி நின்றிருந்தவனுக்கு அந்தச் சத்தம் கேட்டது, க்ளிக் ஒரு நொடி நெஞ்சை பிடித்துக் கொண்டே தனது செல்போனை பார்த்தான். ஒரு மெசேஜ் வந்திருக்க பயந்துக் கொண்டே அது என்ன என பார்க்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கையில் அடுத்த மெசேஜ் வரவே சற்று பயந்துக் கொண்டே தலையை திருப்பி உள்ளே நடப்பதைப் பார்த்தான். அகமுடைநம்பி சந்தோஷமாக வீற்றிருக்க அவருக்கு இவ்விசயம் தெரிந்தால் தன்நிலை அதோ கதி என நினைத்துக் கொண்டே மெசேஜ் பாக்சை ஓபன் செய்து பார்த்தான்

”மவனே கொன்னுடுவேன் ரிப்ளை பண்ணமாட்டியா” என எழுதியிருக்க அவனுக்கு பக்கென்றது

”மாட்டிக்கிட்டேனே இப்ப என்ன செய்றது, என்னத்த ரிப்ளை பண்றது, தேவையில்லாத வேலை எனக்கு, போச்சி போச்சி இப்ப நான் என்ன செய்வேன்” என கலங்கியபடியே இருக்க மற்றொரு மெசேஜ் வரவும்

”இப்ப நீ போன் பண்ணல, உன் தாத்தாகிட்ட உன்னைப்பத்தி பிராது கொடுப்பேன்” என இருக்கவே அதற்கு மேல் யோசிப்பது வீண் என அறிந்தவன் சட்டென வாசலை விட்டு இறங்கி அவசரமாக வீட்டின் முன் இருந்த பெரிய கேட் முன்பு சென்று அமைதியாக நின்றே விட்டான்.

”எனக்கு வந்த சோதனையை பாரு, வீட்டுக்குள்ளேயிருந்து கேட் வரைக்கும் வெளிய வரவழைச்சிட்டாளே இப்ப நான் என்ன பண்றது பேசிட வேண்டியதுதான் வேற வழியில்லை” என நினைத்துக் கொண்டு மெசேஜ் அனுப்பிய பெண்ணிற்கு போன் செய்தான்.