Chillzee KiMo Books - ஊரெங்கும் பூ வாசம்.... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Oorengum poo vaasam.... - Srija Venkatesh

ஊரெங்கும் பூ வாசம்.... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Oorengum poo vaasam.... - Srija Venkatesh
 

ஊரெங்கும் பூ வாசம்.... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

நூலைப் பற்றி ...

ஊரெங்கும் பூ வாசம் என்ற இந்த நாவல் நான் என் வாழ்க்கையில் சந்தித்த ஒரு பெண்மணியின் சொந்த அனுபவங்கள்.

இக்கதையின் நாயகியான வடிவு ஆச்சி சாதாரண காய்கறி விற்கும் பெண்மணி. வாழ்க்கையில் பல துன்பங்களையும் சோதனைகளையும் சந்தித்தவள். அவளுக்குத் துன்பங்களைக் கொடுத்தவர்கள் சொந்தக் கணவன், மகன் என்றான போதிலும் அவள் மனம் தளரவில்லை. மகள் அர்ச்சனாவை எப்படியாவது மருத்துவராக்கிப் பார்த்து விட வேண்டும் என்ற அவளது கனவிலிருந்தும் பின் வாங்கவில்லை. "என்னை விட்டுப் பிரியும் போது ஒரே ஒரு ஆண் குழந்தையுடன் தானே இருந்தது. அவன் என் மகன் தினேஷ். ஆனால் இப்போது இப்போது மகள் ஒருத்தி இருக்கிறாளே? அவளை யாருக்குப் பெற்றாய்? என்ற கணவனின் கேள்வியால் உள்ளம் புண் பட்டாலும் உண்மையான பதிலைச் சொல்லவில்லை ஆச்சி.

அர்ச்சனா உண்மையிலேயே யார்? அவளுக்கும் ஆச்சிக்கும் என்ன சம்பந்தம்? என பல கேள்விகள் வருகின்றன இந்தக் கதையில்.

மனிதாபிமானம், இரக்கம், கருணை அதே நேரத்தில் தைரியம், துணிச்சல் இவைகளின் மொத்த உருவம் தான் ஆச்சியும், அர்ச்சனாவும். குடும்பக் கதைகளைக் கூட இத்தனை விறுவிறுப்பாக சொல்ல முடியுமா? என பலரையும் வியக்க வைத்தது இந்த நாவல்.

படித்து விட்டுக் கருத்தைப் பகிருங்களேன் வாசகர்களே!

 

அத்தியாயம் 1

 

வடிவு ஆச்சி காய்கறிகளை வியாபாரத்திற்காகத் தரம் பிரித்துக் கொண்டிருந்தாள். ஆச்சி என்றதும் செட்டி நாட்டு ஆச்சி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அவள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவள். அங்கும் வயதான பெண்களை ஆச்சி என்று தான் மரியாதையாக விளிப்பார்கள். வடிவுக்கு அப்படி ஒன்றும் வயதாகவில்லை எனினும் அந்தப் பட்டத்தை விரும்பி ஏற்றுக் கொண்டாள். இந்தச் சென்னைக்கு வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஓடி விட்டன. அனைவருக்கும் அவள் ஆச்சி தான்.

 

கிராமத்துப் பாணியில் கட்டப்பட்ட புடவை, வெள்ளை ரவிக்கை, கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, காதில் ஒரு கால் பவுனில் சிவப்புக் கல் வைத்த தோடு. சற்று குள்ளமான , கறுத்த உருவம் இது தான் வடிவு ஆச்சி. ஆச்சிக்கு இரண்டே குழந்தைகள். மூத்தவன் தினேஷ் இஞ்சினியரிங் முடிக்கப் போகிறான், அடுத்தது மகள் அர்ச்சனா +2 படிக்கிறாள். ஆச்சியின் குழந்தைகள் இருவருமே மிகவும் நன்றாகப் படித்தார்கள். அதனால் கவலை இல்லை.

 

"அம்மா! அடுத்த வாரம் எங்க ஸ்கூல்ல எல்லாரும் மைசூர், பெங்களூர்னு டூர் போறாங்கம்மா நானும் போகட்டுமா? நான் அந்த ஊரெல்லாம் பாத்ததே இல்ல! ரெண்டாயிர ரூவா ஆகும்மா! போயிட்டு நாலு நாள்ல வந்திடுவோம்! எங்க டீச்சர்ஸ் எல்லாரும் கூட வராங்க! அம்மா பிளீஸ்மா!  உங்க கிட்ட அவ்ளோ பணம் இல்லேன்னா வேணாம்! பரவாயில்ல?"

 

மகளைக் கனிவுடன் பார்த்தாள். எப்படி வாழ வேண்டியவள்? பாவம் எப்படிக் கஷ்டப் படுகிறாள்?

 

"பரவாயில்ல கண்ணு! அம்மா பணம் சேத்து வெச்சுருக்கேன் அதத் தரேன். நீ சந்தோசமா போயிட்டு வா !தாயீ!"

 

"அம்மான்னா அம்மா தான்! என் செல்ல அம்மா! என் பட்டு அம்மா!" என்று அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சினாள் அர்ச்சனா.

 

"என்ன கொஞ்சல் இப்போ அம்மா கிட்ட? என்றபடி வந்தான் தினேஷ்.

 

"ஒண்ணுமில்லண்ணா! நான் டூர் போக அம்மா பெர்மிஷன் குடுத்துட்டாங்க! நான் அடுத்த வாரம் பெங்களூர்,மைசூர் எல்லாம் போகப் போறேனே!"

 

"அம்மா! நீங்க போன மாசம் நான் கேட்டப்போ போகக் கூடாதுன்னு சொன்னீங்க! இப்போ அர்ச்சனாவை மட்டும் அனுப்பறீங்க?"

 

"அப்டி இல்லடா கண்ணா! நீ இந்தியா முழுக்க சுத்திப்பாக்குற டூர்னு சொல்லி பத்தாயிர ரூவாய்க்கு மேல கேட்ட? என்னால அப்ப அவ்ளோ பணம் பொரட்ட முடியல்ல! அதான் வேண்டாம்னேன். இவ ரெண்டாயிர ரூவா தானே கேட்டா? அதான் சரின்னு சொன்னேன்"

 

"அதான் என் ஃப்ரெண்டு எனக்கும் சேத்துப் பாதிப் பணம் கட்டறேன்னு சொன்னானேம்மா! "

 

"மத்தவங்க தயவுல நாம எப்பவுமே வாழக் கூடாதுடா தினேசு! இன்னிக்கு நீ அவங்கிட்ட கை நீட்டிப் பணம் வாங்கிட்டா நளைக்கும் அதுவே பழக்கமாயிடும் ராஜா! எதாவது கிடைக்கல்லேன்னா கடன் வாங்கினா என்னன்னு தோணும்! அது தான் அழிவுக்கு முதல் படி! புரிஞ்சிதா தினேசு? நாம ஏழைக தான் ஆனா தன் மானத்தை மாத்திரம் விட்டுடக் கூடாதுடா கண்ணா!"

 

"ஆமா! நீங்க இப்பிடியே சொல்லிக்கிட்டு இருங்க! எனக்குப் பதிலா சுரேஷை அவங்கக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க தெரியுமா உங்களுக்கு? உங்க வறட்டுப் பிடிவாதத்தால எனக்கு நல்ல சான்ஸ் போச்சு!"