Chillzee KiMo Books - காற்றில் வரைந்த ஓவியம் - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Katril varaintha oviyam - Srija Venkatesh

காற்றில் வரைந்த ஓவியம் - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Katril varaintha oviyam - Srija Venkatesh
 

காற்றில் வரைந்த ஓவியம் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

நூலைப் பற்றி ...

காற்றில் வரைந்த ஓவியம் என்ற இந்த நாவல் திருமணம் என்ற பெயரில் ஏமாற்றும் ஆண்களையும் பெண்களையும் பற்றியது.

கிராமத்தில் வெளி உலகம் அறியாமல் வாழும் இரு ஜீவன்கள் எப்படி ஒரு கயவனால் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை விரிவாகப் பேசுகிறது.

நம்பிக்கை தான் வாழ்க்கை. ஆனால் அந்த நம்பிக்கை தன் மீது, தன் திறமைகள் மீதான தன்னம்பிக்கையாக இருக்க வேண்டுமே அன்றி வேறோருவனை முற்றிலுமாக நம்பி விடக் கூடாது எனச் சொல்கிறது காற்றில் வரைந்த ஓவியம் நாவல்.

கோமதி ஏமாற்றப்பட்டாள். அவளது கணவன் கூற்றுப்படி அவளை கெடுத்து பிள்ளையும் கொடுத்து நட்டாற்றில் விடவில்லை அவன். தாலி கட்டிக் குடும்பம் நடத்தினான் தான். ஆனால்? அவன் எப்படிப்பட்டவன்? எப்படிப் பட்ட துரோகங்களைச் செய்தான்? அவனால் கோமதியின் எதிர்காலமே கேள்விக்குறியாக ஆனதே? ஆனாலும் கோமதியும் அவள் தாய் கல்யாணியும் மனம் தளரவில்லை. கடவுள் மீதும், தங்கள் மீதும் நம்பிக்கை வைத்தார்கள்.

கோமதியின் வாழ்வு என்ன ஆனது? அவளது எதிர்காலம் வளமாக ஆனதா? கோமதியின் கணவன் ராகவன் என்ன ஆனான்?

இந்தக் கேள்விகளுக்கு விடை தான் இந்த நாவல்.

படியுங்கள் வாசகர்களே!

படித்து விட்டுக் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

அத்தியாயம் 1:

 

தனது ஹோண்டா பைக்கில் விரைந்து கொண்டிருந்தான் ராகவன். அலைபாயும் அழகான கேசம், நல்ல உயரம். மாநிறம் மிகவும் களையான முகம் கட்டுடல் இவற்றுக்கு சொந்தக்காரன் ராகவன். 27 வயதில் சொந்தமாக பிசின்ஸ் செய்கிறான். அவனுக்கு நகரின் முக்கியப்பகுதியில் ஒரு சின்ன ஆபீஸ் இருக்கிறது. அங்கு தான் விரைந்து கொண்டிருந்தான். வாசலிலேயே வண்டியை நிறுத்திப் பூட்டி விட்டு ஸ்டைலாகப் படியேறி ஆபீசை அடைந்தான். பெருக்கித் துடைக்கும் கண்ணம்மா தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.

 

"என்ன கண்ணம்மா? என்னைத் தேடி யாராவது வந்தாங்களா?" என்றான். கழுத்தை நொடித்துக் கொண்டாள் அவள். அதற்கெல்லாம் அசரும் ஆள் இல்லை ராகவன். சுறுசுறுப்பாக சாமி படத்தை வணங்கி விட்டு செல்ஃபோனை நோண்ட ஆரம்பித்தான்.

 

"ஏன் சார்! நீங்க ரியல் எஸ்டேட்னு போர்டு போட்டுருக்கீங்க? ஆனா எந்தக் கட்டடத்தையும் வாடகைக்கு விட்டதாகவோ, வித்ததாவோ தெரியலையே? ஊர்ப்பஞ்சாயத்து தான் ஓடுது இங்க! என்ன தொழிலோ என்ன எழவோ?"

 

"இதப்பாரு கண்னம்மா! உனக்கு வேண்டியது சம்பளம். அதை வாங்கிக்கிட்டுப் போயிட்டே இரு! அனாவசியமா என் தொழில்ல மூக்கை நுழைக்காத! பல வேலையும் செய்தாத்தான் பணம் வரும்! அது தெரியாம பேசாதே."

 

"சம்பளமா? அப்டீன்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா சார்? மூணு மாசமாச்சு எனக்கு நீங்க சம்பளம்னு காசு எண்ணிக் குடுத்து. இந்த மாசமும் நீங்க சம்பளம் குடுக்கலைன்னா நான் நின்னுக்குவேன். அப்புறம் என்னைக் குறை சொல்லாதீங்க!"

 

"உனக்கு நான் பணமாக் குடுக்கல்ல தான். ஆனா எத்தனை செஞ்சிருக்கேன்? அதை மறந்துட்ட பாத்தியா?"

 

"என்ன செஞ்சீங்க?"

 

"உன் புருஷனுக்கு ஒரு ஆபீஸ்ல பியூன் வேலை வாங்கிக் குடுத்தேன். உன் மகளுக்கு நல்ல ஸ்கூல்ல அட்மிஷன் வாங்கிக் குடுத்தேன். அப்புறம் நீ ரேஷன் கார்டுல உன் மாமியார் பேரைச் சேர்க்கணும்னு எவ்வளவு அலைஞ்சு திரிஞ்சு கஷ்டப்பட்ட? அதையும் நான் தான் முடிச்சுக் கொடுத்தேன். நன்றி மறந்து பேசாத"

 

"ஆத்தாடி! என்னமா கணக்குச் சொல்றீங்க சார்? என் புருஷனுக்கு வேலை வாங்கிக் குடுத்ததுக்குத்தான் அரை மாச சம்பளத்தை கமிஷனா வாங்கிக்கிட்டீங்க இல்ல? அப்புறம் வான்மதி ஸ்கூலுக்கு சிபாரிசே தேவையில்ல! அந்த ஸ்கூல் பெரிய டீச்சரம்மா இனிமே இந்த மாதிரி ஆளுங்களைக் கூட்டிக்கிட்டு வராதே! நல்ல புத்திசாலியா இருக்கா குழந்தை நானே சேர்த்துருப்பேனேன்னு சொன்னாங்க! ரேஷன் கார்டுக்கு உதவி செஞ்சது என்னவோ வாஸ்தவம் தான். அதுக்கும் கமிஷன்னு 1000 ரூவா வாங்கினீங்களே?"

 

"நீ பெரிய ஆள் தான். கமிஷன் காசு எனக்கா? இல்லையே? ரேஷன் ஆபீஸ்ல எத்தனை பேருக்கு லஞ்சம் குடுக்கணும்? அதுக்குத்தான் நான் காசு வாங்கினேன். உன் ரேஷன் கார்டுக்கு என் கைக்காசைப் போட்டா லஞ்சம் குடுக்க முடியும்? அப்புறம் எத்தனை தடவை பைக்கில ரேஷன் ஆபீசுக்குப் போயிட்டு போயிட்டு வந்தேன். அந்த பெட்றோல் செலவெல்லாம் கணக்கு பாத்தா நீ தான் எனக்குப் பணம் தரணும்"

 

முகவாயில் கை வைத்துச் சிலையானாள் கண்ணம்மா.

 

"ஐயோ! சார்! என்னை விட்டுடுங்க! உங்க கூடப் பேசி ஜெயிக்க முடியுமா? கொஞ்சம் ஏமாந்தா நீங்க நம்ம தெருப் பிள்ளையார் கோயிலையே வித்துடுவீங்களே!" என்றாள்.

 

அவளுக்குப் பதில் சொல்ல வாயத்திறக்கும் போது யாரோ ஒருவர் ராகவனைப் பார்க்க படியேறி வந்தார். சட்டென வாயை மூடிக் கொண்ட அவன் போலியாக