வானவில்லே! வண்ண மலரே!! - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Vanaville! Vanna Malare - Srija Venkatesh
 

வானவில்லே! வண்ண மலரே!! - ஸ்ரீஜா வெங்கடேஷ்

பதின் பருவத்தில் செய்த ஒரு தவறு எப்படி வாழ்க்கை முழுமைக்கும் பாதிக்கும் என்பதைக் கூறுகிறது "வானவில்லே! வண்ண மலரே" என்னும் இந்த நாவல்.

நிச்சயம் இதைப் படிக்கும் பதின் பருவ குழந்தைகள் கட்டாயம் இரு முறை எந்த முடிவும் எடுப்பதற்கு முன் யோசிப்பர்கள். தாய் மகள் உறவு, அண்ணன் தங்கை உறவு என பல உறவுகளைப் பற்றிப் பேசும் இந்த நாவல் கீதா என்ற பெண்ணின் துயரக் கதையை ஆண் மகன் ஒருவன் மனது வைத்தால் எப்படி மாற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது.

வாழ்க்கையில் காதலும் திருமணமும் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் நட்பு. கீதாவின் இனிய தோழி மாலதி போல நமக்கும் கிடைக்கமாட்டார்களா? என ஏங்க வைக்கும் நட்பைப் பற்றிச் சொல்கிறது "வானவில்லே! வண்ண மலரே!" . தியாகமே வாழ்க்கையாக வாழும் சில தாய்மார்களின் கதையைக் கூறுகிறது. மொத்தத்தில் நமது சமூகத்தில் ஆங்காங்கே ஊடாடும் சில பெண்களையும் ஒரு சில ஆண்களையும் அவர்களது உணர்வுகளையும் வைத்து பின்னப்பட்ட கதை. படித்து விட்டுக் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே!

 

அத்தியாயம் 1:

 

காலை ஒன்பது மணிக்கே அந்த அலுவலகம் மிகவும் பிசியாக இருந்தது. அனைவரும் வந்து அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். டெஸ்பாட்ச் செக்ஷனில் இருக்கும் கீதாவை மட்டும் காணவில்லை. அவளது தோழி மாலினி நேரத்தைப் பார்ப்பதும் வாசலைப் பார்ப்பதுமாக இருந்தாள். ஏனென்றால் அந்த ஏற்றுமதி இறுக்குமதி அலுவலகத்தில் ஐந்து நிமிடம் லேட்டாக வந்தாலும் சம்பளத்தில் ஒரு நாள் பிடித்து விடுவார்கள். ஒன்பது பத்துக்கு முகத்தில் வியர்வை பளபளக்க துப்பாட்டாவால் அதனைத் துடைத்தபடி வந்தாள் கீதா. வயது இருபத்தைந்துக்குள் தான் இருக்கும். முகத்தில் ஏனோ ஒரு சோகம் அப்பிக்கிடந்தது.

 

"சார் ரூமுக்கு அட்டெண்டென்ஸ் போயிரிச்சா?" என்றாள் வந்ததும் வராததுமாக.

 

"இன்னும் இல்லைன்னு தான் நெனக்கிறேன். ரவி சாரைத்தான் கேக்கணும். முதல்ல போயி சைன் பண்ணிட்டு அப்புறமா லன்ச் டயம்ல பேசிக்கலாம்" என்று கம்ப்யூட்டரில் ஆழ்ந்தாள்.

 

ரவி என்றதும் சற்றே சங்கடப்பட்டாள் கீதா. இருந்தும் சமாளித்துக்கொண்டு அவனது இருக்கையை நோக்கிச் சென்றாள். அவன் தான் அங்கே உதவி மேனேஜர். மிகவும் இனிய சுபாவமும் தன்மையாகப் பழகும்குணமும் கொண்டவன். வயது 32 இருக்கலாம். அவனுக்கு எப்போதுமே கீதா மேல் நல்ல அபிப்பிராயம் உண்டு. அதுவே அவளைக் கூசச் செய்தது.

 

"வாங்க கீதா! இன்னைக்கும் நீங்க லேட்டு! இந்த மாசத்துல இது ரெண்டாவது லேட்டு! உங்களுக்காகத்தான் நான் ரிஜிஸ்டரை மேனேஜர் ரூமுக்குக் கொண்டு போகல்ல! சீக்கிரம் சைன் பண்ணுங்க! இல்லைன்னா நானும் சேர்ந்து மாட்டிப்பேன்" என்றான். அவனை நோக்கி ஒரு புன்னகையை வீசி விட்டு கையெழுத்துப் போட்டு விட்டு தன் இருக்கைக்கு விரைந்தாள். வியர்த்துக்கொட்டியது. ஏசியில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

 

லன்ச் டயத்தில் தோழி மாலினியோடு அமர்ந்து உண்டாள்.

 

"என்னடி இது? தினமும் லேட்டாவே வர? இத்தனைக்கும் நீ ஹாஸ்டல்ல தானே இருக்கே? சாப்பாடு செய்ய வேண்டாம் புருஷனைக் கவனிக்க வேண்டாம் அப்புறம் என்ன? எழுந்தோமா? வந்தோமான்னு இல்லாம ஏண்டி இப்படி செய்யற?" என்றாள் மாலினி.

 

"ரத்திரியெல்லாம் தூக்கமே வர மாட்டேங்குது மாலு! காலையில அஞ்சு அஞ்சரைக்குத்தான் தூங்கறேன். எழுந்திருச்சுப் பார்த்தா எட்டாயிடுது. அப்புறம் குளிச்சு சாப்பிட்டு லன்சும் கட்டிக்கிட்டு வர லேட்டாயிருது" என்றாள்.

 

"வயசுப்பொண்ணு இல்லையா நீ? அதான் தூக்கம் வரல! ஏண்டி உங்க வீட்டுல உங்க அப்பா அம்மா கல்யாணத்துக்குப் பார்க்குறாங்களா?"

 

"ஊருல அம்மா மட்டும் தான் இருக்காங்க மாலு! வேற யாரும் இல்ல! அவங்க மாப்பிள்ளை பார்க்குற நிலையில இல்ல"

 

"அப்ப நீயே உனக்கு பார்த்துக்க வேண்டியது தான். நான் சொல்லட்டுமா ஏதாவது நல்ல வரன்?"

 

"ம்ச்! விடுடி! கல்யாணம்குறது இனிமே என் வாழ்க்கையில இல்ல! அதைத் தவிர வேற ஏதாவது பேசு" என்றாள். புரிந்து கொண்ட மாலினி நாட்டு நடப்பு, சினிமா என்று பேசி விட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்தனர். அன்று அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த கீதாவுக்கு மனம் சரியாகவே இல்லை! நல்லவேளையாக அந்த அறையில் உடன் தங்கியிருந்த மற்ற இருவரும்