Chillzee KiMo Books - இளகி இணையும் இரு இதயங்கள் - சசிரேகா : Ilagi inaiyum iru idhayangal - Sasirekha

இளகி இணையும் இரு இதயங்கள் - சசிரேகா : Ilagi inaiyum iru idhayangal - Sasirekha
 

இளகி இணையும் இரு இதயங்கள் - சசிரேகா - சசிரேகா

முன்னரை

இருமாறுப்பட்ட எண்ணங்கள் கொண்ட நாயகனும் நாயகியும் தங்களது விருப்பங்களை விட்டுக் கொடுக்காமல் காதலித்து அந்தக் காதலை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இழக்கவும் முடியாமல் போராடி பல பிரச்சனைக்களுக்குப் பிறகு அவர்கள் காதல் சேர்ந்ததா இல்லையா என்பதே இக்கதையாகும்.

 

பாகம் 1

சென்னை

ஏர்போர்ட்

பாரீஸ் நகரத்தில் கல்லூரி படிப்பை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக தாயகத்திற்கு திரும்பி வரும் அருளாளனை வரவேற்பதற்காக அவனது குடும்பம், நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் என ஒரு பெரிய பட்டாளமே ஏர்போர்ட்டில் காத்துக் கொண்டிருந்தது.

அதிலும் அருளாளனின் தங்கை அஞ்சலிக்குதான் கொண்டாட்டமாக இருந்தது. பள்ளிப் படிப்பு முடித்த கையோடு வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்ற அண்ணனை பல வருடங்கள் கழித்து இப்போதுதான் பார்க்கப் போகிறோம் என்ற உற்சாகத்தில் இருந்தாள்.

கையில் அருளாளன் பெயர் எழுதிய அட்டையை ஏந்திக் கொண்டு ஆர்வமாக வருவோர் போவோரில் தனது தமயனை தேடிக் கொண்டிருந்தாள்.

அழகான அவளது கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்த போது பார்க்கவே அற்புதமாக இருந்தது. அவளை கடந்து சென்றவர்கள் மறக்காமல் அவளை இன்னொரு முறை பார்க்க தவறவில்லை, வயதில் இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை அவளை ஒரு முறை பார்த்துச் சென்றார்

தங்கச் சிலை போல இருப்பவளை பார்க்காமல் யாராலும் இருக்க முடியாதல்லவா அதிலும் அவள் கண்கள் அலைபாய்வதைக் காணும் போதெல்லாம் அந்த கண்கள் தனக்காக ஏங்க கூடாதா என சில ஆண்கள் தங்கள் மனதில் நினைத்து பெருமூச்சு விட்டுவிட்டு கடந்து சென்றார்கள்.

பி.காம் 3ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள் அஞ்சலி

20 வயது பருவ மங்கை, அதற்கேற்ற அழகு, வனப்பான முகம், செதுக்கிய சிலை போல  உடலமைப்பு, தமிழ் வாத்தியார் மகள் என்பதால் இன்றும் பாரம்பர்ய முறைப்படி பாவாடை தாவணியில் தலையில் மல்லிச்சரம் சரசரக்க கையில் கண்ணாடி வளையல்கள் குலுங்க இதழில் புன்னகையோடு கண்களில் ஆர்வத்தோடு இருந்தாள்.

அவளது தந்தை தமிழ் வாத்தியார் சுந்தரன், தாய் பார்வதி கூட அருளாளன் வரவை எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார்கள், கிட்டதட்ட 2 மணி நேரமாக கால் கடுக்க நின்றாலும் அலுப்புத் தோன்றவில்லை அவர்களுக்கு, இந்த நொடி தன் மகன் வந்துவிடுவான் என எதிர்பார்த்தபடியே நேரத்தைக் கடத்திக் கொண்டு ஆர்வமாக நின்றிருந்தார்கள் அவர்களுடன் அருளாளனி்ன் பள்ளி தோழர்களும் வந்திருந்தார்கள். கூடவே சொந்த பந்தங்கள் என மொத்தமாக 20 பேர் அங்கு கூடியிருந்தார்கள்.

அருளாளனுக்கு தாங்கள் வந்திருப்பது தெரியாமல் போய் விடலாம் அங்கு இங்கு என அவன் தேடி அலையக் கூடாதென தான் ஏந்தும் பெயர் பலகை போலவே மற்ற 19 பேரிடமும் அதே போல அருளாளன் என பெயர் எழுதிய பலகையை தந்திருந்தாள் அஞ்சலி.

அவர்களும் அந்த பலகையை பிடித்துக் கொண்டு எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள். அருளாளன் வரவிருக்கும் விமானத்தைப் பற்றிய செய்தி இன்னும் ஒலிப்பரப்பாகவில்லை ஆனாலும் அவர்களின் எதிர்பார்ப்பில் எந்தவொரு தொய்வும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

ஒரு சாதாரண பள்ளி வாத்தியார் மகன் படிப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பது அவர்களை பொருத்தவரை பெரிய விசயமாயிற்றே

எந்த பிளைட்டில் அருளாளன் வருகிறானோ அதே ப்ளைட்டில் யுவராஜன் என்கிற யுவனும் வருகிறான். அவன் சிறந்த இளம் தொழிலதிபர் என பேரெடுத்தவன் தமிழ்நாட்டின் தி கிரேட் பிசினஸ்மேன்கள் பட்டியலில் கடந்த 5 வருடத்தில் தன் பெயரையும் சேர்த்துக் கொண்டவன்.

இந்தியா மட்டுமல்லாது பிற நாடுகளிலும் அவனுக்கு பிசினஸ் உண்டு. கோடீஸ்வர வீட்டில் பிறந்தவன். எதற்கும் கலங்காதவன், பணக்காரக் களையும், பணம் இருக்கும் திமிரும் கூடவே தான் அழகானவன் என்கிற கர்வம் கொண்டவன். அவன் அழகில் பல அழகான பெண்கள் தங்கள் காதலை அவனிடம் சொல்லியிருக்கிறார்கள் ஆனால், அவர்களை ஒரு நொடி கூட பாராமல் ஒதுக்கிவிட்டான். அவனி்டம் இருந்த பணத்தை வைத்தும் சில பெண்கள் அவனை மணக்க ஆசைக் கொண்டார்கள் அவனோ அவர்களை ஒரு பொருட்டாக கூட பார்க்கவில்லை

அவனைப் பொறுத்தவரை பெண்களை விட ஆண்கள் அனைத்திலும் சிறந்தவர்கள், ஆண்களிடம் பணமும் அழகும் இருந்தால் போதும் பெண்கள் மயங்கிவிடுவார்கள். பெண்கள் மனதை பார்ப்பதில்லை, குணத்தை பற்றி கவலைப்படுவதில்லை, அவர்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது வெறும் பணம் மட்டும்தான் என்ற மிகப் பெரிய தவறான எண்ணம் அவன் மனதில் ஊறியிருந்தது. அதற்கேற்ப உள்நாடு வெளிநாடு என அவன் எங்கு சென்றாலும் எதிர்ப்படும் பெண்கள் அவனை சைட் அடிப்பதும், பேச முற்படுவதும், முடிந்தால் காதல் என்பதும் கல்யாணம் என்பதும் அதை கேட்டுக் கேட்டு அவனுக்கு பெண்கள் மீது ஒரு கசப்பான அனுபவமே யுவனுக்கு வந்தது, பெண்கள் இவ்வளவுதான் என தவறாக புரிந்துக் கொண்டு தான் நினைத்ததுதான் சரி என்று வாழ்பவன்.

இதுவரை எந்த பெண்ணையும் நினைத்துப் பார்த்ததில்லை, பார்க்கவும் நேரமில்லை அப்படியே நேரம் கிடைத்தாலும் ஏனோ பெண்கள் தன்னிடம் இருக்கும் பணத்திற்காகவே தன்னை நெருங்குவதாக தவறாகவே நினைத்துக் கொள்வதால் இன்று வரை பேச்சிலராகவே காலம் கடத்துகிறான் யுவன்.