மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி : Midimaiyum achamum meviya nencham - Sagampari
 

மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி

சதாக்ஷி கல்லூரி மாணவி. அழகான அமைதியான அவளுடைய வாழ்க்கை ஒருநாள் மாறிப்போனது. அவளிடம் காதலை தெரிவித்த வைசாக், அது நிராகரிக்கப்பட்ட மன அழுத்தத்தில் அவள் கண் முன்னேயே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறான். குற்ற உணர்வில் சதாக்ஷி அச்சம் அடைகிறாள். அதிலிருந்து அவளை தொடரும் விரும்பத்தகாத சம்பங்கள்....

அவற்றிலிருந்து அவளை நாயகன் புவன்நிருபேஷ் காத்திடுவானா...? அவள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினாளா..

கதையை தொடர்வோமா?

 

அத்தியாயம் 1

கிழக்கு சூரியன் தன் மென்மையான கதிர்களை அனுப்பி பூமிக்கு விழிப்பை ஏற்படுத்தியிருந்த காலைநேரம்…

அந்த இடம்…. சென்னையின் புறநகர் ரயில் நிலையம்… பரபரப்பு இல்லாமல் இருந்தது. சாதாரணமாக கூட்டம் நிரம்பி வழியும் ஸ்டேசன்தான். அன்றைக்கு விடுமுறை நாளாகியதால் பயணிகள் அதிகம் இல்லை.

அங்கே நின்ற சிலரில் ஒரு குரூப்பாக நின்ற கல்லூரி மாணவியர் கவனத்தை கவர்ந்தனர். அவர்கள் யாருக்கோ காத்திருப்பது தெரிந்தது.  சுற்றுலா செல்லத் தயாராக இருப்பதுபோல தெரிந்தது. கடிகாரத்தை பார்ப்பதும் வாசலை பார்ப்பதுமாக இருந்தனர். மல்லிகை மொட்டுக்கள் நிரம்பி இருக்கும் பூக்காரியின் கூடையில் தாமரை மலர் தனித்து தெரிவதுபோல, அவர்களிலும் ஒரு பெண் தனித்து தெரிந்தாள்.

சரி… சரி.. அழகானவள்தான்… அவள் உடையும் அழகாக எடுப்பாக இருந்தது… ஜீன்ஸும் பிங்க் சர்ட்டும்.. அவளை தன்னம்பிக்கை மிக்கவளாக காட்டியது. அதிலும் அந்த ஒளி மிகுந்த கண்களும் மென்மையான சிரிப்பும் அவளை இன்னும் அழகாக்கின… கொஞ்சம் ஹை க்ளாஸா… இந்த இடத்திற்கு பொருத்தமில்லாமல் இருக்கிறாளே… யாராக இருக்கும்? என்று காண்போர் கவனிக்கும் வேளையில்,

அவள் அருகில் வந்த ஒருவன் அவளிடம் ஏதோ பேசத் தொடங்கினான். அவனுடைய உடல்மொழி கெஞ்சும் பாவனையை காட்ட, அவள் தலையை ஆட்டி மறுத்து பேசுவது தெரிந்தது. அவளுடன் இருந்த தோழிகளும் அவனுடன் ஏதோ பேச, அவள் அவர்களை தடுத்து அவனிடம் அமைதியாக விளக்க முற்படுவதும் தெரிந்தது.  கண்கள் குறிப்பின்றி அலைய… கைகள் நடுங்க… படபடப்பாக எதையோ அவன் பேசுவது தெளிவாக தெரிந்தது. என்ன பிரச்சினையாக இருக்கும்…?

அங்கிருந்த பார்வையாளர்கள் யோசித்துக் கொண்டிருக்க, ‘அரக்கோணம் வரை செல்லும் தொடர் வண்டி 12ம் எண் நடைமேடைக்குள் வந்து கொண்டிருக்கிறது’ என்ற அறிவிப்பும் வெளியாகியது. அங்கிருந்தோர் பரபரப்புற்று நடைமேடையில் கூட ஆரம்பித்தனர்.

 அந்த பெண்ணிடம் இருந்து அனைவர் கவனமும் சிதறிய அந்த நொடியில் என்ன சொன்னாள் என்று தெரியவில்லை… அவன் அதை எப்படி எடுத்துக் கொண்டான் என்றும் தெரியவில்லை…

‘நீ என்னை மறக்க முடியாது சதா!” என்று கத்தியபடி…

கண் இமைக்கும்  நேரத்தில்… நடைமேடைக்குள் வந்து கொண்டிருந்த ரயிலின் முன் குதித்தான். ரயிலின் முன்பகுதி சிவப்பு ரத்தம் பூசிக் கொள்ள… திடுக்கிட்ட சிலரின் அலறல் சத்தமும்… கடவுளே… என்று கதறிய குரல்களும் கிளம்பின….

திடீரென்று   நடந்த அந்த அதிர்ச்சி சம்பவத்தால் அந்த இடம் அலங்கோலமாகியது.  நிமிடத்தில் சுதாரித்து  திரும்பி அந்த பெண்ணை தேடினால்… அவள் அங்கில்லை… அவளுடன் வந்த பெண்களும் இல்லை…

யார் பெத்த பிள்ளையோ…?

அந்த பொண்ணுகூட என்ன பிரச்சின…?

காதலிச்சிட்டு இல்லேன்னு சொல்லிட்டாளா?

அவன ஏமாத்திட்டாளா?

இந்த காலத்து பொண்ணுங்களே இப்படித்தான்… ஈஸியா கழட்டி விட்டிருவாள்கள்? 

ஒரு உசுரு போயிடுச்சே?

என்னன்னு எட்டிகூட பார்க்காம ஓடிட்டாள்! என்று பல  புலம்பல்கள் கேட்க ஆரம்பித்தன.

 

அவன் யார்? அவள் யார் ? இருவருக்கும் இடையே என்ன தொடர்பு? உயிரை விடும் அளவிற்கு அவனை பாதித்தது என்ன? அது சட்டென்று அந்த நொடியில் ஏற்பட்ட உணர்வா அல்லது திட்டமிட்டு செய்ததா?

அங்கிருந்த அலைபேசிகள் காட்சிகளை பதிவு செய்து ஃபேஸ்புக்கில் அப்-லோட் செய்ய, மீடியாவினர் செய்தி சேகரிக்க ஆரம்பித்தனர். மதிய பதிப்பில் வந்த நாளிதழ்கள்  “வாலிபர் தற்கொலை… காதலி தப்பித்து ஓட்டம்” என்று செய்தி வெளியிட்டன.

இந்த விசயத்தில் என்ன நடந்தது என்றே தெரியாமல், அந்த பெண் குற்றவாளியாக்கபட்டாளா?  நடந்தது குற்றமா இல்லை தண்டனையா… இல்லை காரணமே இல்லாமல் வாழ்க்கைக்குள் நுழைந்து அத்தனையையும் புரட்டி போடும் தலைவிதியா? 

அந்த பையனின் முடிவும் சரியல்லதானே! சில சூழல்களில் நாம் எதிர்பார்த்தது நடைபெறாமல் போகும்போது தாங்க முடியாத ஏமாற்றத்தினால் மனம் நிலை தடுமாறி இது போன்று முடிவுகளை எடுப்பது உண்டு. சில சமயம் நம் உணர்வினை புரிந்து கொள்ளாமல் காயப்படுத்தியவர்களை தண்டிக்கும் பொருட்டு இது போன்ற முடிவினை எடுப்பதும் உண்டு. இது தெளிவாக திட்டமிட்டு செய்வது. எதுவானால்