Chillzee KiMo Books - காதலென்னும் பொன்னூஞ்சல்... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Kadhalennum ponnoonjal - Srija Venkatesh

காதலென்னும் பொன்னூஞ்சல்... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Kadhalennum ponnoonjal - Srija Venkatesh
 

காதலென்னும் பொன்னூஞ்சல்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

தீபா என்ற இளம் பெண்ணைச் சுற்றி நெய்யப்பட்டுள்ளது இந்த நாவல். அவளது மன உணர்வுகளைப் பற்றிப் பேசும் அதே நேரத்தில் அவளது காதலைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது காதலென்னும் பொன்னூஞ்சல் நாவல். இன்னமும் நம் நாட்டில் பல பெண்களுக்கு இரக்கம், அனுதாபம் போன்ற உணர்வுகளே காதலின் அடிப்படையாக அமைகின்றன. ஆனால் அவை உண்மையான காதலாகுமா?

காதலிலும் விட்டுக்கொடுத்தல் வேண்டும் தான். ஆனால் சுயகௌரவமே இல்லாத அளவுக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்தால் என்ன செய்ய? கதிரின் நடவடிக்கைகள் பிடிக்கவேயில்லை என்றாலும் பொறுத்துப் போகும் படி சொல்கிறது அவளது மனசாட்சி. ஆனால் அதே நேரத்தில் இன்னொருவனோடு இருக்கும் போது சுதந்திரமாகவும் சௌகரியமாகவும் உணர்கிறாள் தீபா. இது என்ன மாதிரியான உணர்வு? கதிர் சரியில்லை என வேறொருவனிடம் காதல் கொள்கிறோமோ? இது சரியா? தான் தவறிழைக்கிறோமோ? என பலப்பல குழப்பங்களின் சிக்கித் தவிக்கிறாள் நம் கதாநாயகி தீபா. அவளது தோழி அனிதா பக்க பலமாக இருக்கிறாள். இறுதியில் தீபா என்ன முடிவு எடுக்கிறாள்?

படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன் வாசகர்களே! இதோ உங்களுக்காக "காதலென்னும் பொன்னூஞ்சல்".

 

அத்தியாயம் 1:

 

புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை ...என்று ராகம் இழுத்துப் பாடத் தோன்றியது தீபாவுக்கு. அவளுக்கு எப்போதுமே அதிகாலை நேரங்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் நெரிசல் மிகுந்த சென்னையில் ஆளரவமே இல்லாத அதிகாலை நேரத்தை அவள் மிகவும் ரசிப்பாள். பொன்னிற சூரியன் தனது கிரணங்களால் மெகங்களின் நுனியை சரிகையாக்கிக் கொண்டிருந்தான். அடர்த்தியான கிரே நிறத்தில் பளீரென்ற அந்த தங்க நிறம் மிகவும் அழகாகத் தோன்றியது. ஆகா இதே நிறத்தில் சேலை எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதையும் அம்மா தலை குளித்து பூஜை செய்வாளே வெள்ளிக்கிழமை அன்று உடுத்துக்கொண்டால் அப்படியே மகா லட்சுமி தான் என்று நினைத்துக்கொண்டாள்.

 

தாயின் நினைவு வரவே சற்றே ஏக்கமாக இருந்தது. பிறந்தது முதல் 23 வயது வரை அவள் குடும்பத்தைப் பிரிந்ததே இல்லை. திருநெல்வேலியில் அவர்களது வீடும் நல்ல வசதியானது தான். ஆனால் காலம் அவளது அன்னையையும் தந்தையையும் அவளிடமிருந்து பிரித்தது விபத்து ரூபத்தில். அப்போது அவள் கல்ல்லூர்ரியில் அடியெடுத்து வைத்திருந்த நேரம். எப்படியோ படிப்பை முடித்ததும் சென்னையில் வேலை கிடைக்கவே எதையும் யோசிக்காமல் வந்து விட்டாள். வந்த புதிதில் லேடீஸ் ஹாஸ்டல் ஒன்றில் தங்கி இருந்தவள் அதில் இருந்த பலரின் நடவடிக்கைகளும் பேச்சும் பிடிக்காமல் போகவே அவளும் அனிதாவும் தனியாக வீடு எடுத்துத் தங்கியிருந்தனர். அனிதாவுக்கும் இவள் வயது தான். ஆனால் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை.

 

பஸ் நிலையத்தில் பழக்கமாகி புன்சிரிப்பிலிருந்து ஓரிரு பேச்சுக்கள் என வளர்ந்து இதோ ஒரு சிறிய வீட்டை இருவரும் பகிர்ந்து கொள்வதில் வது நிற்கிறது. அனிதாவுக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர்ப்பக்கம். இருவருமே பண்பான குடும்பத்திலிருந்து வருவதால் அந்தப் பிரச்சனையும் இல்லாமல் சமாளித்தார்கள். எப்போதாவது ஒரு முறை அனிதவின் தாய் தந்தை வந்து பத்து நாட்கள் தங்குவார்கள். அப்போது இருவருக்கும் சமையலில் இருந்து விடுதலை கிடைக்கும்.

 

"என்ன தீபா! இன்னைக்கு ஆபீஸ் போகலையா?" என்றாள் அனிதா.

 

ஏதேதோ சிந்தனையில் நேரம் போனதே தெரியாமல் நின்றிருந்தா தீபா மணியைப் பர்க்க அது ஏழு என்றது.

 

"அச்சச்சோ! 8 மணி பஸ்ஸைப் பிடிச்சாத்தானே என்னால டயத்துக்கு ஆபீஸ் போக முடியும்? முதல்ல நான் குளிக்கறேண்டி பிளீஸ்" என்று பரபரப்புடன் கூறியபடியே தனது உடமைகளை எடுத்துக் கொண்டாள்.

 

"இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு? நான் குளிச்சு தலை துவட்டிக்கிட்டு இருக்கேன்? என்னைப் பார்க்கவே இல்லையா நீ? நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் கொஞ்ச நாளா நீ வானத்துல பறக்குறா மாதிரி தோணுது! என்னடி விஷயம்?" என்றாள் தோழி சிரித்தபடி.

 

"போடி உனக்கு வேலையில்ல! நேரம் காலம் தெரியாம ஏதாவது சொல்லுவ! இன்னைக்கு நீ தான் டிஃபன் செய்யணும். நினைவு இருக்கு இல்ல?" என்றாள்.

 

போயி கிச்சன்ல பாரு. தோசை ஊத்தி ரெடியா வெச்சிருக்கேன். உனக்கும் எனக்கும் டிஃபன் பாக்சுல எடுத்து வெச்சுட்டேன். நீ சாப்பிட்டுக் கதவைப் பூட்டிக்கிட்டுக் கிளம்பு எனக்கு இன்னைக்கு சீக்கிரம் போகணும்" என்று சொல்லி விட்டு  தலையை ரப்பர் பேண்டால் முடிந்து கொண்டு பறந்து விட்டாள் அனிதா. குளித்து முடித்து சாமி கும்பிட்டு டிஃபன் சாப்பிட்டு விட்டு பாத்திரங்களைத் துலக்கினாள். யார் டிஃபன் செய்கிறார்களோ அடுத்தவர் பாத்திரம் துலக்க வேண்டும் என்பது அவர்களுக்குள் எழுதாத ஒப்பந்தம். நினைவாகக் கதவைப் பூட்டி விட்டு படியிறங்கினாள் தீபா.