உன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா : Unnaiye thodarven naane - Sasirekha
 

உன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா

முன்னுரை

இக்கதையின் நாயகன் தவறுதலாக மணமேடை மாறி அமர்ந்ததால் யாரென்றே தெரியாத நாயகியுடன் திருமணம் முடிந்த நிலையில் அப்போது அந்த இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் நாயகி காணாமல் போய்விட எப்படி நாயகன் நாயகியை தேடிப்பிடிக்கிறான்?

நாயகியிடம் உண்மையைச் சொல்லும் நாயகனை எவ்வாறு நம்புகிறாள் நாயகி??

நாயகியின் குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து அவளது காதலையும் நம்பிக்கையையும் சம்பாதிக்கப் போராடும் கதாநாயகன் இறுதியில் வாழ்க்கையில் ஜெயித்தானா இல்லையா என்பதே இக்கதையாகும்.

 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருக்கோயில் திருமண மண்டபத்தில் ஒரே சமயத்தில் ஏகப்பட்ட திருமணங்கள் நடந்துக் கொண்டிருந்தன.  அதில் ஒரு மணமேடையை நோக்கி

”அண்ணா வாண்ணா நேரமாகுது வாண்ணா வா வா” என மாசி சரவண பெருமாளின் கையை பிடித்து இழுத்துச் சென்று ஒரு மணப்பலகையில் அமரவைத்தான்.  அந்த மணமேடையில் மாசியைத் தவிர சரவணனின் சொந்தக்காரர்கள் யாரும் இல்லை. மணபெண்ணின் சொந்தக்காரர்களும் இல்லை.

”என்னடா மாசி, இந்த கல்யாண முறையே வித்தியாசமா இருக்கு”

“இது திருப்பதி அண்ணா, அதான் வித்தியாசமா செய்றாங்க போல பரவாயில்லை விடுங்கண்ணா, சடங்குகளை பாருங்க” என சொல்லிவிட்டு ஒதுங்கி நின்றான் மாசி.

சரவண பெருமாளின் முன்பு அக்னிகுண்டம் எரிந்துக் கொண்டிருந்தது. அவனும் மாப்பிள்ளை தோரணையில் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்திருந்தான். அவன் முன் இருந்த ஐயரும் அவனுக்கு மாலை தர அதை வாங்கித் தன் கழுத்தில் போட்டுக் கொண்டவன் அவர் சொன்ன மந்திரத்தை புரிந்தோ புரியாமலோ உளறினான்

இக்கதையில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் கூறும் வார்த்தைகளை தமிழில் தரப்பட்டுள்ளது.

”மாப்பிள்ளை ஒழுங்கா மந்திரங்களை சொல்லுங்க” என தெலுங்கு ஜயர் சொல்ல

”நீங்க சொல்றது புரியலைங்களே” என சரவணன் சொல்ல

” புரியலைன்னாலும் பரவாயில்லை நீங்க சொல்லனும்” என அவர் அதிகாரமாகச் சொல்ல இம்முறை அவர் சொல்வதை புரியாமல் வேறு வழியில்லாமல் அவர் சொல்ல சொல்ல கவனமாக கேட்டு திருப்பிச் சொன்னான் சரவணன். ஏதோ 90 சதவீதம் அவன் சொன்னது சரியாக இருக்கவே அவரும் மன நிம்மதியுடன் தொடர்ந்து மற்ற சடங்குகளை கவனிக்கலானார்.

”மணப்பொண்ணை மணமேடைக்கு வரசொல்லுங்க” என ஐயர் சொல்லவும் உடனே சரவணன் இருந்த இடத்திற்கு முன் அவனை மறைத்தபடி ஒரு மஞ்சள் நிற திரையை இருபக்கமும் இருவர் பிடித்துக் கொண்டனர்.

சரவணனோ மாசியை அழைத்தான்

”என்னடா இது புதுசா இருக்கு”

“திருப்பதியில்ல இப்படித்தான் கல்யாணம் பண்ணுவாங்க போல, இது என்ன சேலமா பேசாம பொண்ணு வந்ததும் நீ தாலி கட்டுண்ணா” என சொல்லவும் சரவணனும் அதற்கு மேல் பேசாமல் அமைதிக் காத்தான்.

சில நொடிகளில் மணப்பெண் தலைகுனிந்த படி தன் சொந்தங்கள் புடைசூழ மெல்ல நடந்து வந்தாள். பட்டுச்சேலை சரசரக்க அவள் அணிந்திருந்த நகைகள் உரசும் சத்தம் அதிகமாவே கேட்டது. அதுபடி பார்த்தால் அவள் அதிகளவு நகைகளை அணிந்திருக்கிறாள் என சரவணனுக்கு சொல்லாமலே விளங்கியது

”அந்தாளுக்கு ஏது இவ்ளோ பணம், தன் பொண்ணுக்கு நிறைய நகைகள் போட மாட்டானே” என சந்தேகத்துடனே அடுத்தடுத்த சடங்குகளைச் செய்யலானான்.

ஐயரும் அவன் கையில் ஒரு இலையைத் தர அதை வாங்கியவன்

”இது என்ன?“ என்று சரவணன் கேட்க அதற்கு ஐயர்

”வெற்றிலையின் மேல் சீரகம் வெல்லம் கலந்த கலவை” என கூறிவிட்டு சரவணனிடம் தர அதை வாங்கிப்பார்த்த சரவணனுக்கு ஒன்றுமே புரியவில்லை இருந்தாலும் வேறு வழியில்லாமலும் ஐயர் பேசும் தெலுங்கு மொழி புரியாமல் அவர் செய்யும் சைகையைப் பார்த்து அப்படியே செய்தான்.

அதே போல மணப்பெண்ணுக்கும் தந்துவிட மந்திரங்கள் ஓதிக்கொண்டே சரவணனிடம்

”உங்க கையிலிருக்கற வெற்றிலைய அப்படியே கல்யாண பொண்ணோட தலையில வைச்சிடுங்க” என ஐயர் சொல்லிக் கொண்டே அவனுக்குப் புரியும்படி தன் கையால் சைகை செய்ய

”முன்னாடி திரை இருக்கே நான் எப்படி வைக்கறது, திரையை விலக்குங்க” என சரவணனும் அதேபோல் சைகை செய்ய பாதி தமிழ் புரிந்த அந்த ஐயா்

“இது சம்பிரதாயம் இதை இப்படித்தான் செய்யனும், கல்யாண பொண்ணு தலை மேல வெற்றிலை வைச்ச பின்னாடித்தான் திரையை விலக்குவாங்க என பாதி தமிழில் பாதி தெலுங்கில் சொல்ல

அவனும் தன் கையை திரைக்கு மேல் வழியாக அடுத்த பக்கம் கஷ்டப்பட்டு கொண்டுச் சென்று மணப்பெண்ணின் தலையை தேட அதற்கு மணபெண்ணின் உறவினரான ஷோபா உதவி செய்தாள். அவன் கையை எடுத்து மணப்பெண்ணின் தலையில் வைத்தாள். உடனே போட்டோ எடுக்கப்பட்ட சத்தம் கேட்டது. பின்பு மணப்பெண்ணும் தன் கையை நீட்ட சரவணன் நகர்ந்து சரியாக அமர அவளும் சரியாக வைத்தாள். உடனே அட்சதைகள் தூவப்பட்டு திரையும் சட்டென விலகியது.