நெருப்பில் கரையும் பனித்துளிகள்... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Neruppil karaiyum panithuligal... - Srija Venkatesh
 

நெருப்பில் கரையும் பனித்துளிகள்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

நெருப்பில் கரையும் பனித்துளிகள் திருமணமாகாத ஒரு இளம்பெண் தவறு இழைத்ததால் அவள் குடும்பமே நசிந்து போனதைப் பற்றிப் பேசுகிறது.

தன் தங்கையை ஏமாற்றியக் கயவன் பணக்காரன் என்பதால் அவனைப் பழி வாங்க அண்ணன் குமாரும் அவனது நண்பன் ஆனந்தும் தொழில் ஆரம்பிக்கிறார்கள். எப்படியாவது தங்கையை ஏமாற்றியவனின் கம்பெனியை விலைக்கு வாங்கி அவனை நடு ரோட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே குமாரின் லட்சியம் கனவு எல்லாமே!

அதில் அவன் வெற்றி கண்டானா? அவனது பழிக்கு ஆளான தினேஷ் என்னவானான்? குமாருக்குக் காதல் வருமா?

இப்படிப் பல கேள்விகளுக்குப் பதிலாக அமைகிறது இந்த நாவல்.

விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படைக்கப்பட்டிருக்கிறது "நெருப்பில் கரையும் பனித்துளிகள்" என்ற இந்த நாவல்.

 

அத்தியாயம் 1.

 

"அம்மா , அம்மா அண்ணன் காயத்தோட வருதும்மா" என்று கத்தியபடி வீட்டினுள் ஓடினாள் ராதிகா. அவள் அம்மா பதறிப் போனாள்.

 

"ஐயையோ! என்னடி இது? இவன் எங்கே போயி விழுந்து வாருனான்னு தெரியல்லியே? கடவுளே எம்பிள்ளைக்கு ஒண்ணுமில்லாம இருக்கணும்ப்பா" என்று பிரார்த்தித்தாள். "என்னடி எங்கே அவன்?" என்று கேட்டு முடிக்குமுன் வீட்டில் நுழைந்தான் குமார். கூடவே அவன் நண்பன் ஆனந்த். இருவருக்கும் மேலெல்லாம் காயம். நெற்றியில் ரத்தம் வேறு சொட்டியது.

 

"குமார்! என்னடா இது?" என்று அம்மா பதற

 

"வாண்ணே ! டாக்டர் கிட்டப் போவோம்." என்று ராதிகா பதற அந்த இடத்தில் குழப்பம்.

 

"கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா?" என்று கத்தினான் குமார். அவன் கத்தியதால் காயத்திலிருந்து அதிகமாக ரத்தம் வழிந்தது.

 

"அம்மா! எங்களுக்கு ஒண்ணுமில்ல. லேசான காயம் தான். வீட்டுலயே டெட்டால் போட்டுக் கழுவி ஆயிண்ட்மெண்ட் போட்டா சரியாயிடும். இதுக்கெல்லாம் எதுக்கு டாக்டர்? ராதி ! நீ போயி டெட்டால் , பிளாஸ்திரி , பஞ்சு எல்லாம் கொண்டு வாம்மா! " என்றான்.

 

"டேய் ஆனந்த் நீயாவது சொல்லேண்டா? ஏங்க போயி விழுந்தீங்க ரெண்டு பேரும்? பாத்தா யாரோ அடிச்ச காயம் மாதிரித் தெரியுது? என்னடா நடக்குது இங்க?"

 

"அம்மா , நானும் குமாரும் வேலை முடிஞ்சு வந்துக்கிட்டிருந்தோம். அப்ப நம்ம தெரு முக்குல சில காலேஜ் பசங்க நம்ம வீட்டைக் காட்டிப் பேசிக்கிட்டு இருந்தானுங்க"

 

"நம்ம வீட்டையா? யாருடா காட்டினது?"

 

"ஆளு பேரெல்லாம் தெரியாது. நம்ம தங்கச்சி பேரைச் சொல்லி அந்த ஃபிகர் இந்த வீட்டுல தான் இருக்கு மச்சி!  எப்படியாவது உஷார்ப் பண்ணிடணும்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. அதை குமார் கேட்டுட்டான்."

 

"போச்சுடா! "

 

"அதே தான்! ஒடனே அவங்க கிட்ட சண்டைக்குப் போயிட்டான். எப்படி நீ என் தங்கச்சிய சொல்லலாம்னு மொதல்ல பேச்சுல தான் ஆரம்பிச்சான் ஆன அவங்க நீ யாருடா அதை கேக்கன்னு அசிங்கமாப் பேச ஆரம்பிச்சாங்க. ஒடனே இவன் கையை ஓங்கிட்டான்"

 

"ஏண்டா! குமார்! பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க! அதையெல்லாம் நாம கண்டுக்கக் கூடாதுப்பா! இப்பப் பாரு எப்படி அடி பட்டிருக்கு? அவனுங்க போயிட்டானுங்க. இப்ப அவஸ்தைப் படறது யாரு?"

 

"நான் இன்னும் முடிக்கலம்மா! அவங்க நாலஞ்சு பேரு இருந்தாங்க! ஆனா குமார் எல்லாரையும் அடி பின்னிட்டான். ஆனா ஒரு கட்டத்துல சோர்ந்து போக ஆரம்பிச்சுட்டான்."

 

"ஆமா! அப்பத்தான் இவன் வந்தான். இவன் தன் பங்குக்கு நாலு பேரை அடிச்சான். அவங்க கம்பை வெச்சு எங்களை அடிக்க , அங்கருந்த சில பெரியவங்க வந்து அந்தப் பசங்களை வெரட்டி விட்டுட்டாங்க! அதனால அவனுங்க தப்பிச்சானுங்க! இல்ல சட்னியாக்கியிருப்பேன்"

 

"ஏன் தம்பி ஆனந்து? நீயாவது புத்தி சொல்லக் கூடாது?"

 

"எப்டீம்மா? குமாரோட தங்கச்சி எனக்கும் தங்கச்சி தானே? என் தங்கச்சியப் பத்தி பேசும் போது நான் எப்படிக் கேட்டுக்கிட்டு இருப்பேன்?"