காதல் கதை - பிந்து வினோத்
இது ஒரு குட்டி காதல் கதை :-)
உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் :-)
“குட் மார்னிங் செல்லம்ஸ்...” என்றாள் பிரீதா சந்தோஷமாக.
அவள் சொன்னது புரிந்ததோ இல்லையோ, காற்றடிக்கவும், அந்த அழகிய ரோஜா மலர்கள் இரு பக்கமும் அசைந்தாடின. ப்ரீதாவின் கண்களுக்கு அவை அனைத்தும் அவளுக்கு மறுவணக்கம் சொல்வதாக தோன்றியது. தானாக முகத்தில் ஒரு பெரிய புன்னகை தோன்ற,
“நான் இன்னைக்கு அஞ்சு நிமிஷம் லேட், என்னை தேடுனீங்களா இல்லையா?” என்று கேட்டபடி அந்த அழகிய மலர் செடிகளுக்கு நீர் ஊற்ற தொடங்கினாள்.
செடிகளுடன் அதுவும் பூச்செடிகளுடன் பேசினால் அவற்றுக்கும் புரியும் என்று எங்கேயோ சிறு வயதில் படித்த நினைவில் இது போல் செடிகளுடன் பேசுவது பிரீதாவின் வழக்கமாக இருந்தது. மனிதர்களுக்கு எப்படி தங்களுடன் அன்புடன் பேசி பழகுபவர்களை கண்டால் பிடிக்கிறதோ, அது போல் செடிகளுக்கும் தன்னுடன் அன்புடன் பேசுபவர்களை பிடிக்கும் என்பது அவளின் நம்பிக்கை.
அவளுடைய நம்பிக்கையில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, அவள் சிறிதாக வாங்கி நட்டு வைத்த அந்த ரோஜா செடிகள், அவள் இங்கே செல்லம்மாவின் வீட்டிற்கு வேலைக்கென வந்து ஆகி இருந்த ஒன்றரை ஆண்டுகளில் செழிப்புடன் வளர்ந்து, மலர்ந்து, மணம் வீசிக் கொண்டிருந்தன.
ஒரு வழியாக எல்லா செடிகளுடனும் பேசி, செல்லம் கொஞ்சி, சீராட்டி முடித்தவளின் கண்களில், ஒரு ஓரத்தில் மொட்டாக மலர தொடங்கி இருந்த அந்த அழகிய சிகப்பு வண்ண ரோஜா பட்டது... அவளின் நினைவுகள் தானாகவே இரண்டரை வருடங்கள் பின்னே சென்றன...
அன்று,
இதே போன்ற அழகிய ரோஜா பூவை அவளிடம் நீட்டிய வினய்,
“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு ப்ரீதா... ஐ லவ் யூ...” என்றான்.
“ப்ச்... வாட் இஸ் திஸ் வினய்? நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை... நீங்க கூட இவ்வளவு சீப்பா? பட் டு ஆன்சர் யு, ஐ டோன்ட் இவன் லைக் யூ... அப்புறம் காதலாவது கத்தரிக்காயாவது...” என படபடப்புடன் பொரிந்து தள்ளினாள் ப்ரீதா.
கடந்து போன இந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ முறை இதே நிகழ்ச்சியை பல முறை நினைத்துப் பார்த்திருக்கிறாள் ப்ரீதா...
உண்மையில் சொல்ல போனால் தினம் தினம் ஏதேனும் ஒரு காரணத்திற்காக வினய்யும் கூடவே இந்த காட்சியும் அவளுடைய நினைவில் வர தான் செய்கின்றன...
ஒவ்வொரு முறையும் அவள் மனதில் கூடவே தோன்றும் கேள்வி ஒன்றே ஒன்று தான்!
ஏன் அப்படி பட்டென்று அவனை பிடிக்கவில்லையென்று முகத்தில் அடித்தது போல் சொன்னாள்??!!
அன்று அப்படி பேசியதற்கு அவளிடம் ஆயிரம் காரணங்கள் இருந்தன ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை அதை பற்றி சிந்தித்து தன்னையே கேள்வி கேட்டு கடிந்துக் கொண்டிருக்கிறாள் அவள்...
வினயிடம் மென்மையாகவாவது மறுத்திருந்திருக்கலாம்!
ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள், பழைய நிகழ்வை நினைத்துக் கொண்டிருப்பதால் பலன் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து, தன்னுடைய செல்லங்களிடம் இருந்து விடை பெற்று கிளம்பினாள்.