Chillzee KiMo Books - மலருக்குத் தென்றல் பகையானால்... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Malarukku thehndral pagaiyaanaal - Srija Venkatesh

(Reading time: 1.75 - 3.5 hours)
மலருக்குத் தென்றல் பகையானால்... - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Malarukku thehndral pagaiyaanaal - Srija Venkatesh
 

மலருக்குத் தென்றல் பகையானால்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

டீனேஜ் எனப்படும் பதின் பருவம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் சோதனையான காலம். அந்த நேரத்தில் தான் ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கும். வீட்டில் இருக்கும் பெற்றோர் அவர்களின் நம்பிக்கையையும், அன்பையும் பெற வேண்டியது அவசியம். அப்படி இல்லையென்றால் என்ன ஆகும்? எனச் சொல்கிறது எனது அடுத்த நாவலான "மலருக்குத் தென்றல் பகையானால்...".

தனுஜா பள்ளியில் படிக்கும் இளம் பெண். அவளது வீட்டின் நிலை ஏன் சரியில்லை? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்ன பிரச்சனை என்பதையெல்லாம் யோசித்துக் குழம்பி, வெளியில் ஆறுதல் தேடுகிறாள். தோழி மீரா கூடப் பகையாகத் தெரிகிறாள் ஒரு கட்டத்தில். தனுஜாவின் அந்த நிலையைப் பயன் படுத்தப் பார்க்கிறான் ஒரு கயவன்.

இறுதியில் தனுஜா என்ன ஆனாள்? அவளது எதிர்காலம் என்ன ஆகும்? அவளது தாய் தனது தவற்றை சரியான நேரத்தில் உணர்ந்து கொண்டாளா?

இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளப் படியுங்கள் புதிய நாவல் "மலருக்குத் தென்றல் பகையானால்.." உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

 

அத்தியாயம் 1

 

தனுஜா அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தாள். ஒன்பதாம் வகுப்புப் படித்தாலும் குழந்தைத்தனமான முகம். வரிசையாய்ப் பற்கள் என்று மனதை நிறைத்தாள். அம்மா பிரியா இரவு சமையலுக்கு சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டே மகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 

"தனு! இங்க பாரு! ஸ்பெல்லிங்க் தப்பாப் போட்டிருக்கே? ஏம்மா கவனமா இருக்க மாட்டேங்கிற?"

 

"விடும்மா! சின்ன மிஸ்டேக் தானே? சரி பண்ணிட்டாப் போகுது! அப்பா என்னம்மா இன்னும் காணோம்?"

 

"ஆமா ! எங்க போயிடப் போறாரு. இங்க தானே வந்தாகணும்? திடீர்னு மேனேஜர் கூப்பிட்டு ஏதாவது வேலை சொல்லியிருப்பாரு. வந்துடுவாரு. "

 

"அம்மா! ராத்திரிக்கு என்னம்மா செய்யப் போற?"

 

"படிப்புல புத்தி போகல்ல! எப்பப் பாரு சாப்பாடு தான் உனக்கு! சப்பத்தியும் , தாலும் செய்யப் போறேன்"

 

"என் ஃபிரெண்டு மீரா இருக்கா இல்ல? அவங்க அம்மா வெரைட்டியா செய்யறாங்கம்மா! ஒரு நாளைக்கு கீமா ரைஸ் , ஒரு நாளைக்கு புலாவ்னு வித விதமா அவ கொண்டு வரா தெரியுமா? எனக்கு எப்பப் பாத்தாலும் தயிர் சாதம் இல்ல லெமன் ரைஸ் இல்ல தக்காளி சாதம். இதான். உங்களுக்கு விதம் விதமா செய்யத் தெரியாதா?"

 

"படிக்கிற வயசுல உனக்கு என்ன வக்கணையா வேண்டியிருக்கு? எனக்கும் எல்லாம் செய்யத் தெரியும். எங்க? உங்கப்பா கொண்டு வர சம்பளத்துல வீட்டு வாடகைகுடுத்து, உனக்கு ஃபீஸ் கட்டி , துணி எடுத்துன்னு பணம் தண்ணியாச் செலவழியுது. இதுல தினுசு தினுசா செய்ய நம்மால முடியாது"

 

பள்ளியில் படிக்கும் தன் மகளிடம் இவற்றைச் சொல்லலாமா கூடாதா என்ற எண்ணம் எதுவும் இன்றி பேசிக் கொண்டே போனாள் பிரியா.

 

"எனக்கு இருக்கற அழகுக்கு என்னை எத்தனையோ பணக்கார வீட்டுலருந்து வந்து பொண்ணு கேட்டாங்க! ஆனா எங்கம்மா பாவி ! உங்கப்பாவைத்தான் கட்டிக்கணும்னு சொல்லிட்டாங்க!"

 

"ஏன் அப்படி சொன்னாங்க?"

 

"எல்லாம் என் தலையெழுத்துத்தான் ! இவரு நல்லாப் படிச்சு இருக்காரு , அத்தோட நல்ல வேலை! சம்பளம்னு மயங்கிட்டாங்க! என் கஷ்டம் யாருக்குப் புரியுது?"

 

"பாட்டி சொன்னா நீங்க ஏன் கேட்டீங்க? வேற ஒருத்தரைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொல்லியிருக்கலாம் இல்ல?"

 

"இப்ப உள்ள காலம் மாதிரி இல்ல! எங்கம்மா அப்பாவை எதுத்துப் பேசவே பயப்படுவோம்! அது சரி ! நீ இந்தப் பரீட்சையில என்ன ரேங்கு?"

 

"என்னம்மா நீங்க தானே கையெழுத்துப் போட்டீங்க? நான் அஞ்சாவது ரேங்க்! "

 

"உன் ஃபிரெண்டு மீரா?"

 

"அவ தான் முத ரேங்கு! அவ ரொம்ப நல்லாப் படிப்பா! அவளை எப்படியாவது முந்தணும்னு சங்கீதா எவ்வளவோ முயற்சி செஞ்சா ஆனா முடியலையே? மீரா விடுவாளா? அவளை படிப்புல அடிச்சுக்கவே முடியாது"

 

"ரொம்பப்பெருமை தான் போ! நீ எடுத்திருக்கறது அஞ்சாவது ரேங்கு! ஏன் உன்னால மீராவை முந்த முடியாதா? உன் வயசு தானே அவளும்?"