Chillzee KiMo Books - மேகமே தூதாக வா! - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Megame thoothaga vaa! - Srija Venkatesh

(Reading time: 1.75 - 3.5 hours)
மேகமே தூதாக வா! - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Megame thoothaga vaa! - Srija Venkatesh
 

மேகமே தூதாக வா! - ஸ்ரீஜா வெங்கடேஷ்

மேகமே தூதாக வா என்னும் இந்த நாவல் சுரேஷ் என்னும் இளைஞனின் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது.

அவனது கனவுகள் லட்சியங்கள் எல்லாமே நடுத்தர வர்க்கத்திலிருந்து விடுபட்டு பெரும் பிசினஸ் மேனாக வேண்டும் என்பதே.

அதற்குத்தான் எத்தனை தடங்கல்கள்?

எப்போதும் தாய்ப் பாசம் பெரிதாகப் பேசப்படுகிறது. ஆனால் சில தாய்கள் தங்கள் மகள்களின் மேல் உள்ள பாசத்தில் மகன்களின் மன வருத்தத்தையும், அவர்களது உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அவர்களது தேவை எப்போதும் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அதற்கு மகன் துணை நிற்க வேண்டும் என்பதாக இருக்கிறது. இதனால் மகன் மனதில் இருக்கும் ஆசைகளைக் கூட அவர்கள் பொருட் படுத்துவதில்லை. அப்படி ஒரு தாய் தான் சுரேஷின் அம்மா.

அக்கா சிவகாமியின் பொறாமை ஒருபுறம், அவள் கணவன் வாசுவின் பொறுப்பற்ற தன்மை ஒரு புறம் என சுரஷின் வாழ்க்கை பந்தாடப்படுகிறது.

அப்போது தென்றல் போல வந்தவள் தான் விஜி. இவர்களுக்குள் காதல் மலர்கிறது. ஆனால் அது நிறைவேறுமா?

சுரேஷின் கனவான பிசினஸ் தொடங்குவது மெய்ப்படுமா?

இவற்றைத் தெரிந்து கொள்ளப் படியுங்கள் "மேகமே தூதாக வா..." நாவலை. படித்து விட்டுக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!

 

அத்தியாயம் 1.

 

மதிய நேர உச்சி வெயிலில் சைக்கிளை மிதித்தபடி போய்கொண்டிருந்தான் சுரேஷ். வியர்வை வெள்ளமாகப் பெருகியது. ஆனால் அவன் மனம் குதியாட்டம் போட்டது. அக்காவுக்குத் திருமணம். அவனுடைய அக்கா சிவகாமி டிகிரி முடித்து விட்டு இரண்டு வருஷம் கல்யாணத்துக்காக காத்திருந்தாள். இப்போது தான் விடிந்தது அவளுக்கு. மாப்பிள்ளை வாசு தேவன் என்கிற வாசு. அவர் சொந்தமாக தொழில் செய்கிறார். இன்றைக்கு நிச்சயம் செய்ய வருகிறார்கள். அதற்காகத்தான் இந்த வேகாத வெயிலில் பூ மற்றும் சில பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான்.

 

வீட்டுப் படியேறிவனை அம்மாவின் பலத்த குரல் வரவேற்றது.

 

"வாடா! சுரேசு! எல்லாம் வாங்கிட்டு வந்துட்டியா? நானும் எல்லாப் பலகாரமும் செஞ்சி வெச்சாச்சி! கொண்டா முந்திரிப்பருப்பை வறுத்துப் போட்டா கேசரி இன்னும் நல்லா இருக்கும்." என்றவள் பையைப் பிடுங்கிக் கொண்டு போனாள்.

 

அம்மாவின் என்றுமில்லாத இந்தப் பரபரப்பு ஆச்சரியமூட்டியது.

 

"அப்பா! ஏன் அம்மா இப்படி டென்ஷனா இருக்காங்க? அவங்க வரப்போறதென்னவோ சாயங்காலம் நாலு மணி! இப்ப மணி ரெண்டு தானே ஆகுது?"

 

"உங்கக்காவை நிச்சயம் பண்ண வர சந்தியோஷம்ப்பா! நீ கொஞ்சம் இந்த கூடத்தை சுத்தப்படுத்து , ஃபேனைத் தொடைச்சி வை! அந்த டிவி மேல எவ்வளவு தூசி இருக்கு பாரு" என்று உத்தரவு கொடுத்தார்.

 

"என்னப்பா நீங்க? எனக்கு நாளைக்கு பரீட்சை இருக்கு! நான் படிக்க வேண்டாமா? இந்த வருஷம் நான் +2! அதை மறந்துட்டீங்க ரெண்டு பேரும்"

 

"இல்லைப்பா மறக்கல்ல! "

 

"அதனால தான் அக்கா நிச்சயதார்த்ததை என்னோட பரீட்சையை ஒட்டி வெச்சீங்களா?"

 

"நான் என்னப்பா பண்ணட்டும்? உங்கம்மா தான் ஒரேடியா பிடிவாதம் பிடிச்சா! என்னால ஒண்ணும் சொல்ல முடியல்ல"

 

வேலையை முடித்துக் கொண்டு கைகளைத் துடைத்துக் கொண்டே வந்த அம்மாவின் காதில் தகப்பனும் மகனும் பேசிக் கொள்வது விழுந்தது.

 

"என்னடா? என்ன சொல்லிக்கிட்டு இருக்க?"

 

"ஒண்ணுமில்ல! நீ போ பாக்கியம்! சிவகாமி என்ன புடவை கட்டணும்? என்ன நகை போடணும்ங்கிறதை சொல்லு!"

 

"ஹூம்! நல்லாச் சமாளிங்க! அவன் பரீட்சையின் போது ஏன் நிச்சயதார்த்தம் வெச்சீங்கன்னு தானே கேட்டுக்கிட்டு இருந்தான்? அதை ஏன் மறைக்கறீங்க?"

 

"ஆமா! நான் அப்படித்தான் கேட்டேன்! இன்னும் ஒரு வாரத்துல எனக்கு பரீட்சை முடிஞ்சிடுது! அப்புறம் இந்த ஃபங்க்ஷனை வெச்சா நானும் நல்லா எஞ்சாய் பண்ணுவேன் இல்ல?"

 

"உன் இஷ்டத்துக்கு வெக்க முடியாது! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எப்ப சொல்றாங்களோ அப்பத்தான் வைக்க முடியும். வீட்டுல படிக்கவே இடமில்லாதவங்க எல்லாம் நல்ல மார்க்கு வாங்கலையா? உனக்கு ஏதாவது ஒரு சாக்கு! போ! போயி படி!" என்று கூறிவிட்டு அக்காவைத் தேடிப் போய் விட்டாள்.

 

தன் அறைக்கு வந்தான் சுரேஷ். மனம் யோசித்துக் கொண்டிருந்தது.

 

"ஏன் அம்மா மட்டும் இப்படி வெடுக் வெடுக்கென்று பேசுகிறாள்? என்றாவது அன்பாகப் பேசியிருப்பாளா? அப்படிப் பேசியதாக அவனுக்கு நினைவே இல்லை! தன்