Chillzee KiMo Books - புவனா ஒரு புயல் - முகில் தினகரன் : Buvana oru puyal - Mukil Dinakaran

(Reading time: 2.75 - 5.25 hours)
எனது நிலா கண்ணிலே! - முகில் தினகரன் : Enathu nila kannile - Mukil Dinakaran
 

புவனா ஒரு புயல் - முகில் தினகரன்

முகில் தினகரனின் புதிய நாவல்.

 

 

அத்தியாயம் 1

       “ஞான முத்ராம்...சாஸ்த்ரு முத்ராம்...குரு முத்ராம் நமாம் யஹம்! வன முத்ராம்...சுக்த முத்ராம்...ருத்ர முத்ராம் நமாம் யஹம்!”

 

      பக்கத்துத் தெரு ஐய்யப்பன் கோவில் ஒலி பெருக்கி வழியாக காற்றில் கலந்து வந்து காதில் விழுந்த அந்த மந்திர ஓசை புவனாவிற்கு அந்தக் காலை நேரத்தில் பரவசத்தை ஏற்படுத்தியது.  பாத்ரூமிலிருந்து குளித்து முடித்து வெளியே வந்தவள், எதிரில் வந்து நின்ற அம்மாவின் முகத்தைப் பார்த்ததுமே புரிந்து கொண்டாள், அவளுக்குத் தான் அந்தப் பணியில் சேர்வதில் துளியும் விருப்பமில்லையென்று.

 

       “அதுக்காக?..அதுக்காக?...நான் என் முடிவை மாத்திக்க முடியுமா?”  நிலைக் கண்ணாடி முன் நின்று தானே தன்  பிம்பத்துடன் வாதிட்டாள்.

 

      அறையின் கதவருகே வந்து நின்ற புவனாவின் தாய் கற்பகம், “ஏய் புவனா!...அப்பா கூப்பிடறார்...வந்து “என்ன?”ன்னு கேட்டுட்டு அப்புறமா வந்து மூஞ்சிக்கு மேக்கப் போடு” என்றாள்.

 

      அந்த “மூஞ்சிக்கு மேக்கப் போடு”வை அவள் அழுத்திச் சொன்ன விதத்திலிருந்தே அவளது உள் எரிச்சலை உணர்ந்து கொண்டாள் புவனா. “ம்...வர்றேன்னு சொல்லு” அலட்சியமாய் பதில் சொன்னாள் புவனா.

 

       “ஏண்டி...என்னடி பழக்கம் இது?...அப்பாவுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா?...ஹூம்...வர வர உன்கிட்ட எல்லாப் பழக்கமுமே மாறிக்கிட்டு வருது!...இதெல்லாம் நல்லதுக்கில்லைன்னு எனக்குத் தோணுது!”

 

      திரும்பி தன் தாயை ஒரு நேர்ப் பார்வை பார்த்த புவனா, “ஏம்மா...நான் என்ன “வர மாட்டேன்”ன்னா சொன்னேன்?.... “வர்றேன்!”னுதானே சொன்னேன்?” கழுத்தைச் சாய்த்தபடி புவனா கேட்க,

 

       “க்கும்” இந்த வக்கணைப் பேச்சுக்கு ஒண்ணும் கொறைச்சலில்லை!” முகவாய்க் கட்டையை தோளில் இடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.

 

      எப்படியும் அப்பா, அம்மா சொல்லிக் கொடுத்ததைக் கேட்டுக் கொண்டு, தன்னை அந்தப் பணிக்குப் போக வேண்டாமென்றுதான் சொல்லுவார், என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்த புவனா, அதை எதிர் கொள்ளத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டே சென்றாள்.

 

       “ஏம்மா...புவனா!...உங்கம்மா என்னமோ சொல்லுறாளே...அது நெஜமா?” வழக்கம் போல் நிதானமாக ஆரம்பித்தார் புவனாவின் தந்தை ராஜப்பன்.

 

       “ஆமாம்ப்பா...இன்னிக்கு நல்ல நாள்...அதான் இன்னிக்குப் போய் டியூட்டில ஜாய்ன் பண்ணிடலாம்ன்னு கிளம்பிட்டிருக்கேன்!”

 

      “ம்மா..எனக்கென்னமோ அந்த வேலையெல்லாம் பொம்பளைக செய்யறதுக்கு தோதான வேலை இல்லைன்னு தோணுதும்மா!...நம்ம குடும்பம் காலகாலமா இந்த ஊர்ல ஒரு கவுரவத்தோட...ஒரு மரியாதையோட வாழ்ந்திட்டிருக்கற குடும்பம்!...அந்தக் குடும்ப கவுரவத்துக்கு பங்கத்தைக் கொண்டு வந்து சேர்த்திடாதேம்மா!”   

 

      புவனாவிற்கு உடம்பெல்லாம் எரிந்தது.  தன் உள் மனக் கோபத்தை வார்த்தைகளாக்கிக் கொட்டினாள்.  “அப்பா...நீங்க உங்க ரிடையர்மெண்ட் வரைக்கும் ஏதோ அரையும் குறையுமாய்ச் சம்பாதிச்சு...குடும்பத்தைக் காப்பாத்திட்டீங்க....குழந்தைகளை வளர்த்துட்டீங்க!...எங்களையெல்லாம் பெரிய அளவுல படிக்க வைக்காமப் போனாலும்...ஏதோ ஓரளவுக்கு கல்வியறிவையும் குடுத்துட்டீங்க!...உங்களுக்குப் பின்னாடி குடும்பப் பொறுப்பை ஏத்துக்க வேண்டிய உங்க மகன்...அதான் என்னோட அருமை அண்ணன் அந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டானா?...ஹூம்...மொதல்ல “பொறுப்பு”ன்னா என்ன?ன்னாவது அவனுக்குத் தெரியுமா?...வேலை வெட்டிக்குப் போகாம கண்ட உதவாக்கரைப் பசங்களோட சேர்ந்துக்கிட்டு தான்தோன்றித்தனமா ஊர் சுத்திட்டிருக்கான் ஒரு முழு ஆம்பளைப்பையன்!...அது இந்தக் குடும்பத்தோட கவுரவத்துக்கு பங்கமில்லையா?”

 

      அதைக் கேட்ட்தும் வீட்டின் புழற்கடைப் பக்கமிருந்த புவனாவின் அண்ணன் செல்வா, வேக வேகமாய் வந்து எதையோ சொல்ல வாயெடுக்க,