Chillzee KiMo Books - தேன் மொழி எந்தன் தேன்மொழி - சசிரேகா : Then mozhi enthan thenmozhi - Sasirekha

(Reading time: 4.5 - 8.75 hours)
தேன் மொழி எந்தன் தேன்மொழி - சசிரேகா : Then mozhi enthan thenmozhi - Sasirekha
 

தேன் மொழி எந்தன் தேன்மொழி - சசிரேகா

முன்னுரை
ஒவ்வொரு உறவுக்கும் மதிப்பும் மரியாதையும் கடமைகளும் உண்டு அதே போல முறைமாமன் என்ற உறவுக்கும் தனிசிறப்பு உண்டு கடமைகள் உண்டு முக்கியமாக தனது முறைமாமனை தேடிக்கொண்டு கடல் தாண்டி செல்லும் நாயகிக்கு அவளின் முறைமாமனின் காதல் கிடைத்ததா இல்லையா என்பதே இக்கதையாகும்

 

 

பாகம் – 1.

தேனி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம்.

”தேனு அடியேய் தேனு, எங்கடி இருக்க? கூப்பிடறது காதுல விழலையா” என தேன்மொழியின் தாய் குமுதா காலையில் 6 மணிக்கே தன் மகளை அன்பாக அழைத்தார், அப்போதுதான் தாயின் குரல் கேட்டு தேன்மொழியே கண் திறந்தாள்.

”வரேன்மா” என சொல்லிக் கொண்டே தாயை தேடிச் சென்றாள்.

பாவாடை சட்டையில் தூக்க கலக்கத்தில் நடந்தபடியே வீட்டை விட்டு வெளியேறி கோலம் போடும் இடத்தில் கோபமாக நின்றிருந்த தன் தாயின் அருகில் சென்று கொட்டாவி விட்டாள் தேன்மொழி, அதைக்கண்டு அவளின் முதுகில் இலவசமாக ஒரு அடிபோட்டார் அவளின் தாய் குமுதா.

”ஆஆஆ அம்மா” என ஈனமாக அழைக்க.

”என்னடி அம்மா என்ன இது கோலம், எத்தனை முறை சொல்றது சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடியே எழுந்து வாசல் தெளிச்சி கோலம் போடனும், குளிக்கனும்னு சொன்னேனா இல்லையா இப்படியா தூங்கி வழியற”.

”இன்னிக்கு பரிட்சைம்மா அதான் ராவெல்லாம் படிச்சிட்டு இருந்தேன்”.

”படிக்கறது அஞ்சாம் க்ளாஸ், என்னவோ கலெக்டர் பரிட்சைக்கு தயாராகற மாதிரியிருக்கு உன் பேச்சு, இந்தா சீக்கிரமா வாசல் தெளிச்சி கோலம் போட்டுட்டு போய் குளிச்சி ரெடியாகு”.

என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட அவளும் கொட்டாவி விட்டபடியே தெரு பெருக்க தொடங்கினாள், அதே நேரம் அக்கம் பக்கம் வீடுகளையும் நோட்டம் விட்டாள்.

அத்தெருவில் அவள்வயது மட்டுமின்றி அவளை விட பெரிய பெண்கள் அனைவரும் நன்றாக குளித்து அலங்காரம் செய்துக் கொண்டு கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டவள் வியந்தாள்.

”தினமும் நான் பார்க்கிறேன் ஏன் எல்லாரும் அலங்காரமா இருக்காங்க, ரொம்ப நாள் சந்தேகத்தை இன்னிக்கு யார்கிட்டயாவது தீர்த்துக்கனும்” என நினைத்துக் கொண்டே அவசரகதியில் பேருக்கு ஒரு கோலம் போட்டுவிட்டு பக்கத்து வீட்டிற்குச் சென்றாள். அவளுடன் கூட படிக்கும் சுந்தரியும் அவளது அக்கா மேகலையும் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களும் பார்க்க அழகாக அலங்காரம் செய்துக் கொண்டு இருப்பதைக் கண்ட தேனோ தன் தோழியிடம்.

”சுந்தரி” என அழைக்க அவளும்.

”வாடி தூங்குமூஞ்சி” என கிண்டல் செய்ய.

”அதை விடு ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம்“.

”என்னது”.

”உன் அக்கா ஏன் தினமும் காலையில கோலம் போடறப்ப அழகா அலங்காரம் பண்ணிக்கிட்டு வராங்க, வீட்ல ஏதாவது விசேஷமா”.

”விசேஷமா அப்படியே விசேஷமா இருந்தாலும் தினமுமா இருக்கும் தேனு”.

”அதானே பின்ன எதுக்காக நீயும் உன் அக்காவும் இப்படி ரெடியாகி நிக்கறீங்க, இன்னிக்கு நமக்குதானே பரிட்சை அக்காதான் படிச்சி முடிச்சிடுச்சே இல்லை அவங்க ஊருக்கு போறாங்களா”.

”அதுசரி உனக்கு சில விசயம்லாம் சொன்னா புரியாது விடு”.

”ப்ச் சொல்லுடி எத்தனை முறை நான் கேட்டிருப்பேன் ஒருநாளாவது பதில் சொல்றியா”.

”சொன்னாலும் உன்னால புரிஞ்சிக்க முடியாதே”.

”ஏன்”.

”அது அப்படித்தான் நாங்க மட்டுமா அலங்காரமா இருக்கோம், இந்த தெருவில இருக்கற நிறைய வீட்ல பொண்ணுங்க இப்படித்தான் அலங்காரமா இருக்காங்க, அவங்களைப் போய் கேட்கறது”.

”ஏன் நீ சொல்லமாட்டியா சுந்தரி”.

”சொன்னாலும் வேஸ்ட்தான்” என சொல்லிவிட்டு அக்கம் பக்கம் தெருவை ஆராய்ந்தாள் சுந்தரி யாரையோ அவள் கண்கள் தேடியது.

”யாரை தேடற உன் அப்பாவையா” என தேனு கேட்க.

“இல்லை இல்லை வேற ஒருத்தவங்களை தேடறேன்“.

“வேறன்னா யாரு” என கேட்கும் போதே சுந்தரியின் கண்கள் விரிந்தது, புன்னகை புரிந்தபடியே.

”அக்கா மேகலாக்கா மாமா வராரு” என சொல்ல மேகலாவும் உடனே கோலம் போடுவதை நிறுத்திவிட்டு எழுந்து நின்றவள் தெருவைப் பார்க்க அதைக் கண்ட தேனும் யாரென பார்த்தாள்.

அங்கு சைக்கிள் மிதித்துக் கொண்டு ஒரு இளைஞன் தனது தம்பியுடன் புன்னகை பூத்தபடியே வந்துக் கொண்டிருந்தான். அவனுக்காகத்தான் மேகலா காத்திருந்தாள்.