Chillzee KiMo Books - கண்ணின் மணி - ஸ்ரீலேகா D : Kannin Mani - Sreelekha D

 

(Reading time: 2 - 4 hours)
கண்ணின் மணி - ஸ்ரீலேகா D : Kannin Mani - Sreelekha D
 

1. Melody begins...

பூர்வி தன்னுடைய கணவன் திவேஷ் மற்றும் பிள்ளைகள் நிரவி, ஈஷானுடன் லண்டனில் வாழ்கிறாள்.
தன் குடும்பம் தவிர வேறு எந்த பிணைப்பும் இல்லாமல் இருக்கும் பூர்விக்கு தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்கள் சந்தேகங்களை கொடுக்கிறது.

அவள் ஆனந்த பூந்தோட்டம் என்று நினைத்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையிலேயே ஆனந்தமானது தானா என்ற கேள்விகள் வருகிறது.

துணைக்கு நட்பு, உறவு என்று ஒருவரும் இல்லாத நிலையில், தனி ஆளாக பூர்வி தன் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க முடியுமா?

அவள் தன் சந்தேகங்களை தெளிந்துக் கொண்டாளா? அதில் இருந்து தப்பினாளா?

 

 

அத்தியாயம் 01

போதும் விடுங்க” பூர்வி திவேஷிடம் கெஞ்சினாள்.

“மூணு நாள் பட்டினியா இருந்து வந்திருக்கேன். உன்னை விட முடியாது” கெஞ்சிய பூர்வியின் இதழ்களை பேச விடாமல் மூடினான் திவேஷ்.

பூர்வியிடம் இந்த மாதிரி எல்லாம் ஆதிக்கம் செலுத்துவது திவேஷுக்கு ரொம்ப பிடிக்கும். பூர்விக்கும் அது தெரியும். தெரிந்தே பூர்வியும் நிறைய நாட்கள் அவனுடைய சந்தோஷத்திற்காக போலியாக இப்படி கெஞ்சுவாள்.

பூர்விக்கு திவேஷ் மேலே நிற்காமல் அலைப் புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் போல அளவு இல்லாத காதல் இருந்தது. திவேஷ் உடைய காதல் மழை அவளுக்கு எப்போவுமே இனிக்கும்.

பல மணி நேரங்கள் விடாமல் தொடர்ந்து அவளை காதல் மழையில் நனைய வைத்தான் திவேஷ். ஒருவழியாக அவன் அவளை விட்டு விலகிய நேரம் பூர்வி களைத்துப் போயிருந்தாள்.

“தேங்க்ஸ் பூ”

பூர்வியின் நெற்றியில் முத்தமிட்டான் திவேஷ்.

“உன்னை ரொம்ப மிஸ் செய்தேன் பூ.”

“நானும் கூட” பூர்வியின் அந்த இரண்டு வார்த்தைகளில் காதல் போதை கலந்து இருந்தது.

“இன்னும் சில நாள் பொறுமையா இரு பூ. பெரிய கார்ப்பரேட் நம் கம்பெனி மேல ஆர்வம் காட்டி இருக்காங்க. இது பெரிய டீல். இந்த டீல் சரியா முடிஞ்சா அதுக்கு மேல வாரத்துக்கு மூணு நாள் பிரிவு கிடையாது. இருபத்தி நாலு மணி நேரமும் உன்னோடவே இருப்பேன். ஈஷான், நிரவியோட விளையாடுவேன்”

திவேஷின் விரல் பூர்வியின் உதட்டுக்கு கீழே இருந்த பெரிய மச்சத்தை வருடி விளையாடியது.

“இதையே ரொம்ப வருஷமா சொல்றீங்க திவேஷ். குழந்தைகளும் உங்களை அதிகமா மிஸ் செய்றாங்க. ஈஷான் ரொம்பவும் வாலுத்தனம் செய்றான். உங்க கண்டிப்பு அவனுக்கு அவசியம்”

திவேஷின் வெற்று மார்பில் இருந்த முடிகளில் விளையாடிக் கொண்டே பேசினாள் பூர்வி.

“நான் அவன் கிட்ட பேசுறேன் பூ. நிரவி எப்படி இருக்கா?”

“ஏழு வயசு பொண்ணுக்கு அளவுக்கு அதிகமா அமைதியா இருக்கா. சில சமயம் ஏன் இப்படி இருக்கான்னு பயமா இருக்கு. எந்த கேள்வி கேட்டாலும் ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை பதில் சொல்றா.”

“உனக்கு எதுக்கு தான் பயமில்ல பூ? சின்ன பூச்சியை பார்த்துக் கூட பயந்து அலறுவ”

திவேஷ் திரும்பவும் அவளை அணைத்துக் கொண்டான்.

“நிரவிக்கு உங்க அரவணைப்பு தேவைப்படுது திவேஷ். பெண் குழந்தைகளுக்கு அப்பாவை அதிகமா பிடிக்கும். நம்ம குழந்தைகளை பத்தி சொல்லவே வேண்டாம். நீங்க தான் அவங்களுக்கு எல்லாமே.”

“இல்லை பூ. நீ தான் எங்களுக்கு எல்லாமே. உன்னை சுத்தி நாங்க வாழுறோம்”

திவேஷின் பேச்சில் தூக்கத்தின் சாயல் கலந்திருந்தது.

“இந்த மாதிரி சொல்றீங்க. ஆனா, இப்போ எல்லாம் நீங்க எங்களோட இருக்க நாலு நாளும் ரொம்ப பிஸியா இருக்கீங்க. குழந்தைங்க கிட்ட நீங்க சரியா பேசியே பல வாரம் ஆச்சு. கம்பெனி கார்ப்பரேட் டீல் எல்லாம் சரி. குழந்தைகளும் முக்கியம் திவேஷ்.”

திவேஷிடம் பதில் இல்லை. மாறாக மெல்லிய குறட்டை சத்தம் கேட்டது. பெரு மூச்சுடன் அவனின் போர்வையை சரி செய்துக் கொடுத்து விட்டு தூங்க முயற்சி செய்தாள் பூர்வி.

திவேஷின் உடல் கொடுத்த சூடான அருகாமையில் படுத்திருப்பது அவளுக்கு சுகமாக இருந்தது. அவனுடைய அணைப்பு கொடுக்கும் இனிமையும், இதமும், பாதுகாப்பும் போல எதுவுமே இல்லை. தூக்கம் வராமல் விழித்திருந்து திவேஷின் முகத்தையே பார்த்து ரசித்தாள் பூர்வி.

திவேஷிற்கும் பூர்விக்கும் திருமணம் நடத்து பத்து வருடங்களுக்கும் மேலே ஆகி விட்டது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் பத்து வருடங்களாக பிரிட்டன் தலைநகரம் லண்டனில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டுப் பிள்ளைகள். மூத்தவள் நிரவி ஏழு வயதாகிறது. இளையவன் ஈஷான் நான்கு வயதாகிறது.