Chillzee KiMo Books - புத்தகம் மூடிய மயிலிறகே...! - பத்மினி செல்வராஜ் : Puthagam Mudiya Mayil Erage...! - Padmini Selvaraj

(Reading time: 12.5 - 24.75 hours)
புத்தகம் மூடிய மயிலிறகே...! - பத்மினி செல்வராஜ் : Puthagam Mudiya Mayil Erage...! - Padmini Selvaraj
 

புத்தகம் மூடிய மயிலிறகே...! - பத்மினி செல்வராஜ்

காதலை வெறுக்கும் நம் நாயகியையும், தன் கவிதைகள், புதினங்களுமாய் விரிந்து கிடக்கும் கற்பனை உலகில் காதலை ஆராதித்து இனிக்க இனிக்க திகட்ட திகட்ட காதலிக்கும் நம் நாயகனையும் சேர்த்து வைத்து மதிப்பிற்குரிய திருவாளர் விதியார் ஆடும் ஆட்டம் தான் புத்தகம் மூடிய மயிலிறகே...!

இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான குடும்பம்+ காதல் கலந்த ஜனரஞ்சக கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!! -அன்புடன் பத்மினி செல்வராஜ்...

 

அத்தியாயம்-1

“இந்த உலகத்திலயே ஏன் இந்த யுனிவர்சிலயே எனக்கு பிடிக்காத ஒரே சொல், ஒரே வார்த்தை, ஒரே பதம்.... எ....து தெ ரி யு மா ?

கா.........த............ல் “   என்று கிளுக்கி சிரித்தாள் அவள்...

மிருணாளினி....நம் பயணத்தின் நாயகி !

அவளின் செர்ரி இதழ்கள் விரிந்து,  வரிசையாய் அடுக்கி வைத்தாற்போன்ற பச்சரிசி பற்கள் தெரிய சிரித்தாலும்  கா த ல் என்ற பதத்தை உச்சரிக்கும் பொழுதே அவள் கண்களிலோ வண்டி வண்டியாய் வெறுப்பும் முகத்திலோ கூடை கூடையாய்  அருவருப்பும் பரவி கிடந்ததை அவள் அருகில் அமர்ந்திருந்த அவள் தோழிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை...

அவளுக்கும் மட்டுமே தெரிந்த அவள் மட்டுமே உணர்ந்த அந்த வெறுப்பையும் கசப்பையும் நொடியில் தனக்குள் போட்டு புதைத்து கொண்டு மீண்டுமாய் தன் நட்புக்களை பார்த்து புன்னகைத்தாள் மிருணாளினி..

“ஹே... மிரு... அதெல்லாம் சும்மா... எவ்வளவு பெரிய ஆளையும் அடித்து சாய்த்து விடுமாம் இந்த பொல்லாத காதல்...நம் சங்க கால இலக்கியங்கள், இதிகாசங்கள், காப்பியங்களில் எல்லாம் கூட காதலைத்தானே பெரிதாக கொண்டாடி இருக்கிறார்கள்..

நம் சங்க காலத் தமிழர்களின் வாழ்வில் மிக முக்கியமாய் முத்தாய்ப்பாய் மற்றவர்களுக்கு உதாரணமாய் வீற்றிருப்பதும் காதல் வாழ்வு தானே...

அதுவும் சங்க இலக்கியங்களில் வரும் தலைவன் தலைவியின் காதல்... ப்பா... இப்ப நினைக்கும் பொழுதும் புல்லரிக்குது... அதை படிக்கும்பொழுது நமக்கே அப்படி ஒரு காதல் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வரும் டி...

காதலன் காதலி இருவரும் முகம் பார்த்து கொள்ளவே பல நாட்கள் ஆகி நிற்கும் அந்த காலத்து காதலில் இருந்து கண்டதும் காதல் கொண்டு இல்லை.. இப்ப எல்லாம் பார்க்காமலயே சேட்டிங் லயே காதல் கொண்டு டேட்டிங் வரை சென்று நிக்கும் நவீன காதலாய் அவதாரம் எடுத்து இருந்தாலும் காதல் காதல் தான் டி...

உன்னைப் போல காதலை வெறுத்த எத்தனையோ பேர் கடைசியில் வந்து விழுந்தது இந்த காதல் எனும் குட்டையில் தான்..

 

எனக்கு என்னவோ நீயும் அப்படி ஒரு குட்டையில் தான் விழப்போகிறாய் என தோன்றுகிறது.. “ என்று குட்டியாய் காதலை பற்றி பிரசங்கம் செய்து இறுதியாய் தன் தோழியை வம்பு இழுத்து சீண்டினாள் மைத்ரேயி... நம் நாயகியின் தோழி...

அதை கேட்டதும் உடல் எல்லாம் பற்றி கொண்டதை போல எரிந்தது மிருணாளினிக்கு.. அடி வயிற்றில் எழும்பிய கசப்பான அருவருப்பான  உணர்வு அப்படியே மேலே எழுந்து  தொண்டைக்கு வந்து அதையும் தாண்டி நாவில் பட்டு கசந்து வழிந்தது மிரு பொண்ணுக்கு....

“சீ... உன் வாயை பன்னீர் சோடா ஊத்தி கழுவுடி எரும...” என்று முறைத்தாள் மிருணா....

“ஹா ஹா ஹா ஹே மிரு... நம்ம மைத்தி நாக்கு கருநாக்கு டீ.. அவள் இதுவரைக்கும் சொன்னதெல்லாம் அப்படியே பலிச்சிருக்கு…

நம்ம காலேஜ் ல கீரியும் பாம்புமா சண்டை போட்டுகிட்டு இருந்தாங்களே நம்ம சீனியர்ஸ் மகி அன்ட் மதி... அவர்களை பார்த்ததும் இவங்க கண்டிப்பா லவ் பண்ண போறாங்கனு சொன்னா..

இப்ப பார்த்தா அதே போல நடந்திருச்சுடி.. இருவரும் அப்படி ஒன்னுக்குள் ஒன்னாய் உருகி உருகி காதலிக்கிறாங்க...அதே போல நீயின்றி நான் இல்லை.. உன்னில் நான் என்னில் நீ னு டூயட் பாடின காதல் குயில்கள்,  நம்ம காலேஜ் சரவணன் மீனாட்சி காதல் வெட்டிக்கும் னு ஆருடம் சொன்னா மகராசி..

அப்படியே ஆகிடுச்சி டி.. இப்ப அந்த மீனாட்சி வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டா... அந்த காதல் மன்னன் சரவணனும் வேற மீனுவை புடிச்சிகிட்டான்...

அதனால்தான் சொல்றேன்.. அவ சொன்னா அப்படியே பலிச்சிடும்.. எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்க..... வயசு பசங்களை கண்டால் தள்ளியே நின்னுக்க.. “ என்று எச்சரித்தாள் அடுத்த தோழி ஆனந்தி...

“ஹா ஹா ஹா சூப்பர் டி நந்தி...நீ ஒருத்தியே போதும் என் புகழை உலகம் முழுவதும் பரப்ப.. விட்டா என்னை கருநாக்கு மைத்தினு முத்திரையை குத்தி ஒரு பட்டையை போட்டு வட்டமா பெருசா ஒரு பொட்டையும் வச்சு கைல சோழிய குடுத்து நடுக்கூடத்துல உட்கார வச்சு ஆருடம் சொல்ல வச்சிடுவ போல இருக்கே... “ என்று கிளுக்கி சிரித்து தன் தோழியை முறைத்தாள் மைத்தி..

“வாவ்!....சூப்பர் ஐடியா செல்லம்...பேசாம இந்த பிசினஸ் ஐ ஸ்டார்ட் பண்ணிடலாம்.. அடுத்த நாளே நம்ம காலேஜ் ல் இருக்கும் முக்கால்வாசி காதல் ஜோடிகள் உனக்கு வாடிக்கையாளர்கள் ஆகி விடுவார்கள்..