Chillzee KiMo Books - வேறென்ன வேண்டும் உலகத்திலே - பிந்து வினோத் : Verenna vendum ulagathile - Bindu Vinod

(Reading time: 1.75 - 3.5 hours)
வேறென்ன வேண்டும் உலகத்திலே - பிந்து வினோத் : Verenna vendum ulagathile - Bindu Vinod
 

வேறென்ன வேண்டும் உலகத்திலே - பிந்து வினோத்

Second edition!!!!!

இரண்டாம் பதிப்பு.

முதல் பதிப்பில் இருந்து மாற்றங்கள் மற்றும் பிழைத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

நன்றி!!

 

சாதனா, சஹானா எனும் இரு சகோதரிகளை சுற்றி வலம் வரும் கதை இது.

இருவரும் தங்கள் வாழ்வில் பூக்கும் காதலையும், அது தொடர்பான சச்சரவுகளையும் எப்படி எதிர் கொண்டு வெல்கிறார்கள் என்பதை சுற்றி நகரும் கதை.

 

 

அத்தியாயம் 01.

கொஞ்சமாவது பொறுப்பிருந்தால் இப்படி செய்வீயா நீ?”

அம்மா சசிகலாவின் திட்டை கேட்டு கண் கலங்கிக் கொண்டிருந்த தங்கை சஹானாவை பார்த்து வருந்திய சாதனா,

“பாவம் அம்மா அவள்... வேணும்னா பணத்தை மிஸ் செய்திருப்பா? போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்து பார்ப்போமே...” என்றாள்.

“அது மட்டும் தான்டி இப்போ குறைச்சல்! இவ எப்போ பிறந்தாளோ அப்போ போச்சு என்னுடைய சந்தோஷமும் நிம்மதியும்! அதிர்ஷ்டமே இல்லாத ஜென்மம்!”

அதுவரை நடந்து விட்ட தவறினால் மனம் வருந்தி அமைதியாக இருந்த சஹானா

“நானா உங்களை என்னை பெத்துக்க சொன்னேன்?” என்றாள் துடுக்காக.

“பேசுவடி பேசுவ, இது என்ன இன்னமும் கூட பேசுவ! நீ தொலைச்சது ஒரு ரூபாவா இரண்டு ரூபாவா பத்து லட்சம் ரூபா! உங்க அக்கா கல்யாணதிற்காக நான் பார்த்து பார்த்து சேர்த்து வச்ச பணம்...”

அம்மா சொல்வதில் இருந்த உண்மை மனதை சூட, தானாக சஹானாவின் சுருதி குறைந்தது.

“சாரி அம்மா... என் தப்பு தான்...”

“இப்படி சொன்னால் தொலைஞ்ச பணம் திரும்ப வந்திருமா என்ன?”

வீட்டு அழைப்பு மணி ஒலிக்கும் ஓசைக் கேட்டது. சசிகலா அதை பற்றி எல்லாம் கவலைப்படாது சஹானாவை திட்டுவதை தொடர, சஹானாவும் கண்கள் கலங்க அமைதியாக இருந்தாள்.

சற்று தள்ளி அமர்ந்து முகத்தில் வருத்தம் பிரதிபலிக்க இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த செல்வராஜ், தன் ஊன்றுகோலுடன் எழுந்து கதவை நோக்கி செல்வதை கவனித்த சாதனா, அவசரமாக அங்கே சென்றாள்.

“நீங்க உட்காருங்க அப்பா, நான் யாருன்னு பார்க்கிறேன்...”

“பரவாயில்லைம்மா அது தான் கதவு பக்கமே வந்தாச்சே, நீ திற, யாருன்னு பார்ப்போம்... எதாவது விற்க வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்...”

அதையே தான் மனதில் நினைத்திருந்த சாதனா, வேகமாக சென்று கதவை திறந்தாள். அங்கே அவள் எதிர்பார்த்த விற்பனையாளருக்கு பதில் சற்றே மிடுக்குடன் ஒரு இளைஞன் நின்றிருந்தான். கதவை திறந்த சாதனாவை பார்த்து புன்னகைத்தவன்,

“ஹலோ! என் பெயர் தீபக்... இந்த பேக் உங்க வீட்டில் யாரோ தவற விட்டுட்டாங்க போலிருக்கு...” என்றான் நட்பு கலந்த குரலில்.

அவன் காட்டிய அந்த டிராவலர் பேகை பார்த்த சாதனாவிற்கு சந்தோஷம் பொங்கியது.

“ஆமாம் என் தங்கை பஸ்ஸில் தொலைச்சிட்டா...”

“என்னுடைய அம்மா அதே பஸ்ஸில் தான் வந்திருக்காங்க, நல்லவேளை அவங்க கையில் தான் இந்த பை சிக்கிச்சு... தப்பா எடுத்துக்காதீங்க, அட்ரஸ் பார்க்க பையை திறக்க வேண்டியதாச்சு...”

“அதனால என்ன தம்பி... இது போல் திரும்ப எடுத்துட்டு வந்து தர எத்தனை பேருக்கு மனம் வரும்? உள்ளே வாங்க... உள்ளே வந்து பேசுங்க...” என்றார் சாதனாவிற்கு சற்று பின்னே தள்ளி நின்றிருந்த செல்வராஜ்.

பையின் உள்ளே இருந்த பணம் பற்றி அறிந்திருந்தப் படியால், அம்மா சொன்ன அடையாளத்துடன் உள்ளே இவளின் தங்கை இருக்கிறாளா என்று எதற்கும் பார்த்துவிடுவது என்று முடிவு செய்தான் தீபக். ஷூவை கழற்றி விட்டு உள்ளே வந்தவன், அங்கே கண்ட காட்சியில் சற்று தயங்கி வரவேற்பறையின் அருகிலேயே நின்றான்.

உள்ளே சசிகலா இன்னமும் பெரிய குரலில் சஹானாவை திட்டிக் கொண்டிருந்தாள்.

தீபக்கிற்கு, அவனின் அம்மா சொன்ன அடையாளம் நினைவில் வந்தது

பேரு எல்லாம் தெரியலை கண்ணா, ஸ்கை ப்ளூ கலர் சுரிதார் போட்டிருந்தா... மூக்குக்கு இடது பக்கம் சின்னதா மச்சம் இருந்தது... கிட்டத்தட்ட என் உயரம் தான் இருப்பா...

திட்டு வாங்கிக் கொண்டு கண் கலங்கி கொண்டிருந்தவளை கவனித்தவன், அவளின் மூக்கின் இடது புறம் சின்ன மச்சம் இருப்பதை பார்த்தான்... இவள் தான் பணத்தை தொலைத்தவள் போலும்.