Chillzee KiMo Books - கானல் நீரின் அலைகள் - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Kanal neerin alaigal - Srija Venkatesh

(Reading time: 1.75 - 3.25 hours)
கானல் நீரின் அலைகள் - ஸ்ரீஜா வெங்கடேஷ் : Kanal neerin alaigal - Srija Venkatesh
 

கானல் நீரின் அலைகள் - ஸ்ரீஜா வெங்கடேஷ் 

 

 

அத்தியாயம் 1:

 

ஆனந்தி தன்னை மிகக் கவனமாக அலங்கரித்துக் கொண்டாள். முகத்தில் சன்னமான மேக்கப் , உதட்டில் லேசாக லிப்கிளாஸ் , போதும். இன்னும் பத்து நிமிடத்தில் ஜெகதீஷ் வந்து விடுவார். ரெடியாக இல்லாவிட்டால் கோபம் வரலாம் என்று நினைத்தவள் தனக்குப் பிடித்த சுடிதாரை எடுத்து போட்டுக் கொண்டாள்.

 

ஆனந்தி பெரிய பிசினஸ் மேன் ராமலிங்கத்தின் ஒரே மகள். கொஞ்சம் கறுப்பு. முன் பற்கள் இரண்டும் சற்றே தூக்கியபடியே தான் இருக்கும். அதனாலேயே பள்ளியில் தேங்காய்த் துருவி என்று அழைக்கப்பட்டாள். அதே கதை தான் கல்லூரியிலும். அதனால் படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டாள். ராமலிங்கம் ஆனந்திக்காக மாப்பிள்ளைத் தேடித் தேடி சலித்துப் போன நேரத்தில் வந்தவன் தான் ஜெகதீஷ்.

 

ஜெகதீஷுக்கு அக்கா மட்டும் தான். எம் பி ஏ படித்து விட்டு ஒரு பெரிய கம்பெனியில் கை நிறைய சம்பாதிக்கிறான். பார்க்க மிகக் கம்பீரமான உருவம் , சிவந்த நிறம் என்று இருந்தவனை மிகவும் பிடித்துப் போனது ஆனந்திக்கு. ஆனால் சுமாரான மாப்பிள்ளைகளே இவளை வேண்டாம் எனும் போது இவனாவது சம்மதம் சொல்வதாவது என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் அவன் உடனேயே சம்மதித்து விட்டான். படித்த மாப்பிள்ளை என்று ராமலிங்கத்துக்கு ஒரே பெருமை. அதனால் சீர் செனத்தி எல்லாம் மிக அதிகமாகச் செய்தார்.

 

இதோ கல்யாணமாகி ஒரு வருடம் முடிந்து விட்டது. முதல் கல்யாண நாளைக் கொண்டாடத்தான் அவள் தயாராகிக் கொண்டிருக்கிறாள். சத்யம் தியேட்டரில் படம் பார்த்து விட்டு , பெரிய ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வழியில் நகைக் கடையில் ஜெகதீஷுக்கு ஒரு பிரேஸ்லெட் , ஆனந்திக்கு நெக்லேஸ் என்று வாங்கி வருவதாகத் திட்டம். இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவான்.

 

சமையலறைக்குப் போனாள்.

 

"மாமி! இன்னிக்கு எங்களுக்கு ராத்திரி வெளிய சாப்பாடு! அதனால நீங்க உங்களுக்கு மட்டும் தோசையோ , இட்லியோ எது வேணும்னாலும் செஞ்சிக்குங்க! ராத்திரி எங்களுக்காகக் காத்திருக்க வேண்டாம்! நீங்க தூங்கிடுங்க! எங்கிட்ட ஒரு சாவி இருக்கு ! நான் பாத்துக்கறேன்" என்றாள்.

 

"என் ஒருத்திக்கு எதுக்கு தோசையும் இட்லியும்? மதியத்துக்கு வெச்ச சாதம் இருக்கு. ஒரு வாய் மோர் சாதம் எனக்குப்  போதும்! இதைப் பாரு! நீ கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்காதே!" என்றாள் உரிமையுடன்.

 

ஆனந்தி சிறு வயதாயிருக்கும் போதே பட்டம்மா மாமி சமைக்க வந்து விட்டாள். அம்மா இல்லாத பெண் என்று ஆனந்தியை தோளிலும் , மார்பிலும் போட்டுத்தான் வளர்த்தாள். இவள் கல்யாணமாகிப் போகும் போது மாமியையும் சீதனமாக அனுப்பி விட்டார் ராமலிங்கம். சொல்லப் போனால் மாமி தான் ஆனந்திக்கு எல்லாம். அம்மா மாதிரி.அதனால் உரிமை எடுத்துக் கொண்டு பேசுவாள்.

 

"ஆனந்தி ! மாப்பிள்ளை எப்ப வரேன்னிருக்கார்? வந்த ஒடனே அவருக்கு பஜ்ஜியோ , போண்டாவோ குடுக்கட்டுமாடி? சட்னி அரச்சிடுறேன்!"

 

"போங்க மாமி! எப்பப் பாத்தாலும் உங்க பஜ்ஜி , போண்டா வடை. இதைத்தவிர ஒண்ணும் செய்ய மாட்டீங்க நீங்க! அவருக்கு பீட்சா , பர்கர் , வெஜ் ரோல் , கபாப் இப்படித்தான் பிடிக்கும். "

 

"என்னவோ போ! இதெல்லாம் சாப்பிடற பண்டமா? எப்படிச் செய்யறதுன்னு சொல்லித்தாடி! நானே ஆத்துல செஞ்சு தரேன்!"

 

"சரி சரி! மாமி! இந்தக் கலர் சுடிதார் எனக்குப் பொருத்தமா இருக்கா பாருங்க?"

 

"நன்னா இருக்கு! ஆனா டார்க் கலர் !உன்னைக் கூடக் கொஞ்சம் கறுப்பாக் காட்டுது! லைட்டா நீலம் , பச்சை இந்த மாதிரி போட்டா உனக்கு நல்லா இருக்கும். "