Chillzee KiMo T-E-N Contest Winner - Sagampari

இது ஒரு மனநிறைந்த தருணம்… என்னுடைய நாவல் 'பிணை வேண்டும் பன்மாய கள்வன்' பரிசு பெற்றுள்ளது.  இந்த நாவலை பரிசிற்குரியதாக தேர்ந்தெடுத்த  சில்சீ கீமோ குழுமத்திற்கும் நடுவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த  நன்றி. என் எழுத்துக்களை தொடர்ந்து படித்து என்னை ஊக்குவிக்கும்  வாசகர்களுக்கு மிக்க நன்றி!

என்னுடைய எழுத்துக்கள் கவிதையாக… கட்டுரையாக… கௌரவிக்கப்பட்டுள்ளன. நாவல் என்ற பிரிவில் பரிசு பெற்றுள்ளது இதுதான் முதல்முறை. சொல்லப்போனால் இது என்னுடைய முதல் முழு நீள நாவல். வாரம் ஒரு அத்தியாயம் என  ஆமை வேகத்தில் தொடர்கதை எழுதி பழகிய மனதிற்கு மூச்சை பிடித்துக் கொண்டு ஓரே ஓட்டமாக முழு கதையையும் எழுதுவது சற்றே கடினம்தான். பதட்டமும் பயமும் ஒரு குடும்பத்  தலைவியாக என்னை ஆட்கொண்ட இந்த பெரும் தொற்று காலத்தில் எழுதுவதற்கான நேரத்தை இரவிற்குள்ளும் கனவிற்குள்ளும் தேடித்தேடி எழுதினேன். அந்த வகையில்  இந்த  நாவலை எழுதியது எனக்கு ஒரு சாதனைதான். 

அப்படி சிரமப்பட்டு எழுதியாக வேண்டுமா என்ற கேள்விக்கு என்னிடம் தெளிவான பதில் இருந்தது. பல எழுத்தாளர்களின் படைப்புகள் இருக்கும் தொகுப்பில் என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று ரசித்து ஆர்வமாக எழுதினேன்.  அதேபோல நான் கதை எழுதுவதற்கும் சில காரணங்கள் உள்ளன. அவை புதிதாக எழுத ஆரம்பிக்கும் எழுத்தாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புவதால் இங்கு பதிகிறேன்.

முதல் காரணம் நம் எல்லோருக்கும் இருக்கும்… நாம் கடந்து வந்த வாழ்க்கை நமக்குள் நிறைய அனுபவங்களை பதிந்து இருக்கிறது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரே ஒரு புத்தகத்தினையாவது உருவாக்க தேவையான அருமையான கரு  இருக்கும். அதை யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும் என்ற அவா… விருப்பம்...அதீத உந்துதல்.. இருக்கும். மனதிற்குள் எழும் கேள்வியையோ… அதற்கான தேடலையோ… வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் விஷயங்களையோ மனதிற்குள் தேக்கி வைக்காமல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றும்.

நம்முடைய அனுபவங்களை கதையாக மாற்றும் திறன் -இதற்கு பல்வேறுபட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை படித்துக் கொண்டு இருந்தால் எழுதும் நடை பிடிபட்டு விடும், மாறுபட்ட பார்வை இருந்தால் கதையை வடிவமைத்து விடலாம். கதை சொல்லியாக நாம் இருக்கும்போது… கதை படிப்பவருடன் கை கோர்த்து கதைக்குள் கொண்டு செல்வது நம்முடைய  பொறுப்பு.  அதற்கு  கதை கேட்பவரின்  எதிர்பார்ப்பும் நாம் கதை சொல்லும் பாணியும் ஒத்து வர வேண்டும். அப்போதுதான் பகிர்தல் முழு நிறைவை தரும்.

அதுசரி… எனக்கான என்னுடைய வாசகர்களை நான் எங்கே தேடுவது?  அந்த தேடல் சில்சீயில் நிறைவுற்றது. குடும்பம்… காதல்… நகைச்சுவை… சமூக நோக்கு… அறிவியல் பரிமாற்றம்… அத்தனைக்கும் சங்கப்பலகைபோல நீண்டு இடமளித்தது. சில்சீ குழுமத்திற்கு நன்றி. ஆர்வமாக நான் எழுத அருமையான  வாசகர்கள் கருத்து பதிய… எழுதுவது என் தொழில் ஆயிற்று… 

ஆறு தொடர்கதைகளை எழுதியதில் சொல்ல வந்ததை வாசகர்களுக்கு புரியும் வகையில் நயமாக எழுதும் கலை பிடிபட்டுவிட்ட நம்பிக்கையில் முதல் முழு நீள நாவலை எழுதினேன்.. இந்த நாவல் சுவராஸ்யமான நாவல் என்ற திருப்தி வந்ததும் போட்டிக்கு அனுப்பி வைத்தேன்... போட்டி மனப்பான்மையுடன் அனுப்பவில்லை…!  பதட்டமோ.. எதிர்பார்ப்போ இல்லாமல் எழுதுவது ஒரு சுகமான அனுபவம்.  தடம் மாறாத வாழ்வியல், அன்பின் வலிமையை  உணர்த்தும் தொய்வில்லாத கதை கோர்வை, தன்னம்பிக்கையை தரும் சம்பவங்கள்,   இலகுவாக்கும்  நகைச்சுவை ஆகியன நாவலை வாசிப்பவருக்கும் இயல்பாக கதையில் பயணிக்கும் உணர்வை தரும் என்று நம்புகிறேன்.

 அதற்கு பலனும் கிடைத்திருக்கிறது. இரண்டாம் இடத்தை வெற்றி கொண்டது என்ற மகுடம் கிடைத்திருக்கிறது.  இன்னும் அதிகம் எழுதலாம் என்ற  அதீத நம்பிக்கையை தந்திருக்கிறது. எழுத்தை நேசிப்பவரால்தான் வாசிக்க முடியும். நிறைய வாசித்தால்தான் நிறைய எழுத முடியும்.  எழுதுவது என்பது  நம்மை சுவாராஸ்யமானவராக  மாற்றி எழுதிக் கொள்ளவும் வைக்கும்.  நிறைய வாசியுங்கள்… நிறைய எழுதுங்கள்.

 நன்றி!.

உண்மையுடன்

சாகம்பரி