Chillzee KiMo Books - என்னுயிர் கருவாச்சி..! - பத்மினி செல்வராஜ் : Ennuyir karuvacci..! - Padmini Selvaraj

என்னுயிர் கருவாச்சி..! - பத்மினி செல்வராஜ் : Ennuyir karuvacci..! - Padmini Selvaraj
 

என்னுயிர் கருவாச்சி..! - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசகர் தோழமைகளே!!!

அனைவருக்கும் வணக்கம்..! ஒரு புதிய கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.

வழக்கமான கதைகளில் வரும் ஹேன்ட்ஸமான மல்ட்டி மில்லினர் நாயகனும் , அதீத அழகுடைய மத்தியதரத்து நாயகியும் இல்லாமல், நம் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராசய்யாவும், பூங்கொடியும் தான் இந்த கதையின் நாயகன், நாயகி.

நன்றாக ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தை எப்படி கலைப்பது?...தன் எதிரிக்கு எப்படி குழி பறிப்பது? கணவன் மனைவி இடையே எப்படி வில்லங்கத்தை கொண்டு வருவது?

என்று ரூம் போட்டு யோசிக்கும் வில்லனோ, வில்லியோ இல்லாமல், எதார்த்தமான ஒரு கிராமத்து ஜோடியின் காதல் கதை…!

இந்த கதை 1999 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடந்த கதையாக பாவித்து படியுங்கள்.

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, கலகலப்பான, ஜாலியான காதல் கதைதான். படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!


என்னுயிர் கருவாச்சி..!

  

அத்தியாயம்-1.

  

1999.

  

காமாட்சிப்பட்டி..!

  

திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம்.

  

காவிரி நீர் ஆற்றிலிருந்து பிரிந்து, வாய்க்கால் வழியாக நேரடியாக அந்த ஊருக்கு வருவதால் நன்செய் விவசாயம் செழித்து இருக்கும் ஊர்.

  

ஆற்றில் நீர் வராத சமயங்களில் சோம்பி இருக்காமல், புன்செய் விவசாயத்தை கையில் எடுத்துக்கொள்வர் அந்த ஊர் மக்கள்.

  

நன்செய்யும் , புன்செய்யுமாய் வருடம் முழுவதும் செழிப்பாக விளங்கும் கிராமம்.

  

எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று மிளிரும் நெற்பயிர்களும், குலை குலையாக காய்த்து குழுங்கும் வாழை தோட்டங்களும், சாலையின் இரு புறமும் நன்கு உயர்ந்த தென்னை மரங்களும், பாக்கு மரங்கள் என எங்கு திரும்பினாலும் மனதை கொள்ளை கொள்ளும் அழகு மிகுந்த ஊர்.

  

இயற்கை வளம் மிகுந்த அந்த ஊரின் பிரதான தொழில் விவசாயம்.

  

முந்தைய தலைமுறையில் முக்கால்வாசி பேர் விவசாயத்தை தான் நம்பியிருந்தனர். அரிதாக ஒரு சிலர் மட்டுமே வெளியில் சென்று படித்து வேற ஊருக்கு வேலை தேடி சென்றுவிட்டனர்.

  

இப்பொழுது இருக்கும் தலைமுறையினருக்கு விவசாயத்தில் நாட்டம் குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய ஒன்றாகும்.

  

முந்தைய காலகட்டத்தை போல் அல்லாமல், இப்பொழுது எல்லாருக்கும் வேலை எளிதாக கிடைத்துவிடுவது ஒரு காரணம் என்றால், விவசாயத்தில் இருக்கும் நிலையில்லாத வருமானமே மிக முக்கிய காரணம்.

  

முக்கால்வாசி பேர் விவசாயத்தில் இருக்கும் நெளிவு சுழிவுகளை அறிந்துகொண்டு பருவத்திற்கு ஏற்ப பயிர் செய்யும் முறையை பின்பற்றாமல் போனதும் நிலையில்லாத வருமானத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

  

அதோடு இப்பொழுது இருக்கும் நவீன பொழுதுபோக்குகளிலும், ஆடம்பர வசதிகளின் ருசியையும் அறிந்தவர்களுக்கு வயலில் இறங்கி உடலை வருத்தி உழைப்பது என்பது முடியாமல் போய்விட்டது.

  

அதனாலயே இன்றைய தலைமுறையினர் குளுகுளு ஏ.சியில் அமர்ந்து கொண்டு, பகட்டாக உடை அணிந்து கொண்டு, அலுக்கு படாமல், நோகாமல் செய்யும் வேலைக்காக பட்டணத்தை நோக்கியோ, வெளிநாட்டை நோக்கியோ படையெடுத்து வருகின்றனர்.

  

முந்தைய தலைமுறையினர் வேறு வழியில்லாமல், தங்கள் உயிராய் மதிக்கும் விவசாயத்தை கைவிட முடியாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

  

***.

  

அப்படிப்பட்ட முந்தைய தலைமுறையினரை சேர்ந்தவர் தணிகாசலம்..!