Chillzee KiMo Books : சீதா அவதாரம் - சகி : Seetha Avataram - Saki

சீதா அவதாரம் - சகி : Seetha Avataram - Saki
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 06

Story Name - Seetha Avataram

Author Name - Saki

Debut writer - No


சீதா அவதாரம் - சகி

 

சகி எழுதி பகிர்ந்திருக்கும் திரு சுஜித் நினைவு போட்டிக்கான நாவல்.
 

திங்களையொத்த மனமானது, பனிமுல்லை மலர்களுக்கு ஒப்பானது. இன்சொல்லால் அவை மகிழ்ந்திருக்கும், இன்னல்கள் கண்டு அவை வருந்தியிருக்கும். விளக்க இயலா உணர்வுகளின் விளக்கங்கள் கொண்ட அகராதியினைத் தன்னகத்தே அது கொண்டிருக்கும்! இம்மதியானது, மதியினை என்றுமே மதியாது! வருந்துவோருக்கு வருந்துவதும், காலம் பல கடந்தும், காலன் புத்தி புகட்டியும் தான் பிடித்த முயலுக்கு கால்கள் மூன்றே என்று சாதிக்கும் வல்லமை இந்த மனதிற்கு மட்டுமே உண்டு!!எனினும், அக்கூற்று சரியே, யாக்கை உணரும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும் மனம் பிடிப்பட்ட விலங்கிற்கு கால்கள் மூன்றே! அது 'காதல்' எனப்படுவதாம்! கல்வி கற்கும் ஒருவன் ஞானத்தையும், களவு கற்கும் ஒருவன் இலாப மோகத்தையும், பிள்ளை ஈனும் மங்கை மதலையையும், மணம் முடித்த மன்னவன் மனையாளையும், மனதில் வாழும் இறைவன் பக்தனையும் காதலிக்க, 'காதல்' என்னும் விலங்கால் அன்றோ சிறைப்படுத்தப்படுகிறார்கள்!!எனினும், அச்சிறையிலிருந்து எவருமே விடுதலை அடைய முனைவதில்லை, முனைவதே இல்லை..!

"டீச்சரா?" முகத்தினை சுழித்துக் கொண்டு வினா எழுப்பினாள் சீதா. அவள் முக பாவனையே ஆயிரமாயிரம் கதைகளைக் கூறியது.

"ஆ...!டீச்சர்னா சும்மா டீச்சர் இல்லை! அவங்க அப்படியே தலைநிறைய மல்லிப்பூ வைத்துக்கிட்டு தினமும் வந்து கிளாஸ் எடுப்பாங்கப்பாரு! ஐயோ...! அந்தக் கிளாஸ் முடியுற வரைக்குமே என் பார்வை அப்படி, இப்படி நகராது!" தன் நெஞ்சத்தில் கரம் பதித்து மெய்மறந்து, ஓர் ஆழ்ந்த பெருமூச்சுடன் கூறினான் அமன்.

"போதும்! அப்பறம் என்னாச்சு?" எனும்போது அவள் முகத்தில் வழிந்தோடிய பொறாமை எனும்  காற்றாற்று வெள்ளத்தை அவன் கவனிக்க தவறவில்லை. கள்ளத்தனமாய் ஒரு பார்வைப் பார்த்தவன்,

"என்ன மேடம்? எங்கேயோ எரியுது போல!" என்றான் கள்ளநகையுடன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீங்க சொல்லுங்க!" அவள் பார்வையாலே எரித்து சாம்பலாக்கி விடுவாள் போலிருந்தது.

"அப்பறம் என்ன, திடீர்னு ஒருநாள் கல்யாணம்னு பத்திரிக்கையை கொண்டுவந்து நீட்டிட்டாங்க!மனசே நொறுங்கிப் போயிடுச்சு! ஒரு வாரம் ஸ்கூலுக்கே போகலை!" என்றதும் கொள்ளை ஆனந்தம் அவள் கள்ளமில்லா முகத்தினில்!

"இப்போ என்னப் பண்றாங்க உங்க டீச்சர்??"சிலாகித்தாள் சீதா.

"நான்கு குழந்தைங்க! 2 பொண்ணு, 2 பையன்! ச்சை...! அவங்க வீட்டுக்காரருக்கு வேலை வெட்டியே இல்லைன்னு நினைக்கிறேன்." சட்டென அவன் கூறிய விதத்தில் அதிர்ந்துப் போனவளின் முகம் சிறிது சிறிதாக செம்மையானது.

"என்னாச்சு? நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா?" ஏதும் தெரியாதவன் போல அவன் விடுத்த வினாவில் மேலும் செம்மையானாள் அக்கன்னிகை.

"டீ குடிங்க!ஆறிப்போகுது!" அவன் பார்வையையும், பேச்சையையுமே திசைத்திருப்பும் எண்ணம் அவளிடம்! அதை நன்கு உணர்ந்தவன் புன்னகையுடன் தேநீரைப் பருகத் தொடங்கினான்.

"ஏ...சக்கரை நிறைய போட்டு இருக்கடி!" அவன் முகம் சுளித்த விதத்தை மெய் என நம்பி ஒரு நொடி சிலையாகினாள் சீதா.

"உன் காப்பியைக் கொடு! இந்த டீ யை நீயே குடி!" அவளது காப்பியை வலுக்கட்டாயமாக வாங்கி அருந்தினான் அவன். இது அடிக்கடி அங்கு நிகழும் நிகழ்வுகளில் ஒன்றே! அவளை தொந்தரவு செய்யாமல் அமனின் பொழுது நகர்வதில்லை.

"உங்கக்கிட்ட ஒண்ணு சொல்லணும்!"விழிகளை இறுக மூடிக்கொண்டு, மூச்சிழுத்துப் பேசினாள் சீதா.

"சொல்லுங்க..கேட்கிறேன்!" ஆர்வமாக அவள் முகத்தினை நோக்கினான் அமன்.

"அத்தை போன் பண்ணாங்க!" மீண்டும் இடைவேளை விடுத்தாள் சீதா. அவள் பேசும்போது நடுங்கிய இதழ்களும், தேகமும் எதையோ உணர்த்தியது அமனுக்கு!

"அடுத்த மாதம் நம்ம மூன்றாவது வருட திருமணநாள்னு ஞாபகப்படுத்தினாங்க!" சிறிதளவே சந்தேகம் கொண்டிருந்தவனின் சந்தேகம் வலுப்பெற்றது. அவள் பேச வந்த தலைப்பு யாதென்பதனை நன்குணர்ந்திருந்தான் அமன். அதற்கு மேலாக அவள் வார்த்தைகள் எடுப்படவில்லை. தன்னையே உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் கணவன் தன்னை மனதினைத் தெரிந்துக் கொண்டானா என்ற ஏக்கம் மட்டுமே அவளிடமிருந்தது!

"ஆ...! நல்லவேளை நான் மறந்தே போயிட்டேன். ஆமா, நமக்கு எப்போ கல்யாணம் ஆச்சு? பத்தா, பதினொன்றா?" என்றதுமே வெடித்தது அவள் கோபம்!

"என்ன? கல்யாண நாளை மறந்துட்டீங்களா?அப்போ என் பிறந்தநாள்?" என்றாள் பாவமாக!

"தெரியுமே! இரண்டு!" பெருமையுடன் அவன் கூற, சிணுங்கினாள் அக்கன்னிகை.