Chillzee KiMo Books - நீரினைத் தேடிடும் வேரென நான் - விபா : Neerinai thedidum verena naan - Viba

நீரினைத் தேடிடும் வேரென  நான் - விபா : Neerinai thedidum verena naan - Viba
 

நீரினைத் தேடிடும் வேரென நான் - விபா

விபாவின் புதிய நாவல்.

 

 

இன்றிலிருந்து பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆயிரம் கரங்கள் நீட்டி.. அணைக்கின்ற தாய்க்கு, பிரசவ வலியெடுக்க.. ஒரே பிரசவத்தில் ஒன்பது மகவுகளை ஈன்றெடுத்தாள் அவள்.

 

அதில் தனது மூன்றாவது மகளுக்கு மட்டும் எண்ணற்றச் சலுகைகளை வாரி இறைத்திருந்தாள் அந்த அன்னை.

 

இந்தப் புவனமென்னும் பேரரசி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐம்பெரும் படைகளால் அரணமைத்துத் தன்னைப் பேரெழில் கொண்டவளாக அமைத்துக் கொண்டாள்.

 

அத்தகைய இயற்கை அரணில் முதன்மையானவள், முக்கியமானவள்.. குறிஞ்சி மலையரசி தனது மொத்த சௌந்தரியத்தையும் கொண்டு உருவாக்கிய தேசம் தான் பாரத நாட்டின் தமிழகத்தில் உள்ள மழவர் நாடு.

 

அந்த மழவர் நாட்டின் விண் முட்டும் மலையின் உச்சியில் அரசன் அருஞ்சுனையனின் கோட்டை இருக்க.. அம்மலையின் அடிவாரத்தில் முல்லைத் தினையின் காடுகள் விரிந்து அழகுக்கு அழகு சேர்த்தது.

 

அன்றொருநாள் நள்ளிரவு நேரத்தில் அம்மலையின் உச்சியின் மீது மூன்றாம் பிறைநிலவு ஈசனின் திருச் சடையில் வீற்றிருப்பது போல் திகழ்ந்து பொன்னொளியைப் பாய்ச்சிக்கொண்டிருக்க..

 

அந்த மலையடிவாரத்தில் இருக்கும் வனதேவதையின் கால் தொடும் பாக்கியம் பெற்ற பால் வாவியின் (பால் போன்ற நீர்ச் சுவையுடைய குளம்) அருகிலே, நம் கதையின் நாயகி தமிழினி இருந்தாள்.

 

அவளைப் பாதாதிகேச வர்ணனை செய்ய எனக்கும் ஆசை தான்.. ஆனால் என்ன செய்வது? எனக்கு அவளது பாதி உருவம் தான் தெரிகிறது. முகம் வரை மட்டும் பார்க்கையில்.. அழகே பொறாமைப்படும் பேரழகி என்பார்களே, அதுபோன்ற அழகி அவள். முழு வர்ணனைக்காக அவளை உற்று நோக்குகையில் தான் தெரிந்தது.. அவள் மார்புவரை புதை மணலில் புதையுண்டு இருந்தது.

 

அப்பேர்பட்ட அழகுக்கு எதன் பொருட்டு இத்தகைய ஆபத்து வந்திருக்கக் கூடும்?எதற்காக அவ்வாறு புதையுண்டிருக்க வேண்டும்? இதோ தன் உயிரைக் கூட மதியாது அவள் கரங்கள் இறுக்கப் பற்றியிருக்கும் குடுவையில் இருப்பது யாது?

 

அதனைத் தெரிந்து கொள்ள, நாம் ஐயைந்து தினங்கள் பின்னோக்கிச் செல்லுதல் அவசியமாகிறது.

 

இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு..

 

மழவர் நாட்டின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள காந்தார வனத்தின், வெண் செண்பக மரத்துக்கடியில்.. வெண்ணிலா வதனத்தோடு.. தந்தநிற உடலோடு படமெடுக்கும் கருநாகமெனத் தொடை தொட்ட பின்னலைக் கையில் பிடித்துச் சுழற்றியபடியே தன் நாயகனுக்காய் காத்துக்கொண்டிருந்தாள் தமிழினி.

 

அவளது பொறுமை கற்பூரமாய்க் கரையும் நேரம்.. தொலைவில் புரவியின் குளம்படி கேட்க.. தனது மனங்கவர்ந்தவன் வந்துவிட்டான் என்றெண்ணி உவகைக் கொண்டது பெண் மனம்.

 

இது அரசவையாய் இருந்திருந்தால்..

 

"தனது தந்தையை வஞ்சகமாய்க் கொன்று ஆட்சி பறித்த சிற்றப்பனைத் தன் பதினான்கு வயதில் தலை கொண்ட மாவீரன்..

 

திசை எட்டும் எதிரி அற்றுத் தரணிக்குப் பெருந்தலைவனாய் ஈரேழு உலகத்தையும் கட்டி ஆளும் அசகாயச் சூரன்..