Chillzee KiMo Books - பூ முக மாது - சசிரேகா : Poo muga madhu - Sasirekha

 

பூ முக மாது - சசிரேகா : Poo muga madhu - Sasirekha
 

பூ முக மாது - சசிரேகா

மீன் கொடி பறக்கும் பாண்டிய நாட்டின் பெருமை அனைவரும் அறிந்ததே. பாண்டிய நாட்டு மக்களின் வீரமும், காதலும் இன்றும் பலர் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும். கல்வெட்டில் பொறிக்கப்பட்ட காதல் கதையும் வீரக்கதையும் பல இருந்தாலும் என்றுமே அது அழியாதது.

மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் மட்டுமே காதலும் வீரமும் இருந்ததில்லை கல்வெட்டிலும் வரலாற்றிலும் சொல்லப்படாத எத்தனையோ மனிதர்களின் எளிமையான காதலும் வீரமும் கணக்கில் அடங்காமல் இருந்தன். அதில் ஒரு வெண்முத்தைப் போன்ற கல்வெட்டில் பொறிக்கப்படாத எளிமையான ஒரு படைவீரனின் வீரமும் அவனின் காதலும் பற்றின கற்பனை கதை இது.

 

 

பாண்டிய நாட்டின் இரண்டாவது தலைநகரான கொற்கை மாநகரம்,

  

விடியற்காலையில் சூரியனின் கதிர்கள் நீல நிற கடலின் மீது மெதுவாக விழுந்து பல புதிய வர்ணங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்க அந்த நிறங்களின் பிரதிபலிப்பு மீன் பிடித்துக் கொண்டிருந்த படகுகளில் பட்டு மீன்களும் தங்கள் நிறங்களை விடுத்து புதிய நிறங்களில் மாறியது. படகில் அமர்ந்து துடுப்பு போட்டுக் கொண்டிருந்த மாறன் தன் எதிரில் இருந்த தன் நண்பன் விஜயனிடம் பேசிக் கொண்டே வந்தான்.

  

இருவரும் ஒத்த வயதை சேர்ந்தவர்கள் மாறன் பார்க்க பரதவனை போல இருந்தாலும் விஜயன் நல்ல புஜபல தேகத்துடன் மீனவனை போல் அல்லாமல் வீரனை போன்று இருந்தான்.

  

”நண்பா பொழுது விடியப் போகுது ஏற்கனவே படகில போதுமான மீன்கள் இருக்கு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் மீன்களை பிடிச்சிக்கிட்டு கரைக்கு போய் சேரலாம். அதனால இன்னும் வேகமாக வலையை வீசு, அதில் ஏராளமான மீன்கள் சிக்கிக்கொள்ளும்” என மாறன் சொல்ல விஜயனும் அதே போல வலையை வீசினான். கொற்கையில் ஒருபுறம் மீன் பிடிப்பதும் மறுபுறம் முத்துக்களை எடுப்பதும் காலம் காலமாக நடந்துக் கொண்டிருந்தது. கொற்கை பாண்டிய முடிக்குரிய இளவரசனின் ஆட்சியில் இருந்தது. கொற்கை பாண்டியர்களின் முத்து நகரம். அது பாண்டிய நாட்டு வணிகத் துறைமுகமாகவும், பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாகவும் இருந்தது.

  

”நண்பா அங்கு பார் முத்துக்குளிப்பவர்கள் இன்று மிகவும் உற்சாகமாக இருக்கிறார்களே காரணம் என்னவாக இருக்கும்” என விஜயன் கேட்க அதற்கு மாறன்,

  

”ஓ நீ இந்த கொற்கைக்கு புதிதாக வந்தவன் அல்லவா உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதலில் இந்த கொற்கையை பற்றி நீ தெரிந்துக்கொள்வது முக்கியம். இங்கு கிடைக்கும் முத்துக்கள் தான் உலகிலேயே மிகவும் சிறந்த முத்துக்கள். இந்த முத்துக்களுக்கு மதிப்பு மிகவும் அதிகம். மன்னர்கள் அவர்களது வழி வழி வந்தவர்கள், குறுநில மன்னர்கள், பெரும் தனவந்தர்கள் இவர்களால் மட்டும்தான் இந்த விலையுயர்ந்த முத்துக்களை வாங்க இயலும், நம்மைப்போல இருக்கும் மீனவர்களுக்கு முத்துக்களை தூரத்தில் இருந்து பார்ப்பதே பெரிய விசயம். அதை தொட்டுப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள்தான் அங்கு முத்துக்குளிப்பவர்கள்.

  

கடலில் உள்ள அபாயங்களை தாண்டி முத்து சிப்பிகளை தேடிபிடித்து அதை எடுத்து வர ஆர்வம் கொண்ட இளம் வயது வாலிபர்கள் உற்சாகமாக அங்கு முத்துக்குளிக்கிறார்கள். ஒரு சில நாழிகைகள் மட்டுமே தங்கள் கையில் இருக்கும் முத்துக்களை ஆசை தீர பார்த்துவிட்டு அதோ நிற்கிறார்களே வணிகர்கள் அவர்களுக்கு விற்றுவிடுவார்கள்.” என்றான்,

  

”ஏன் நமக்கென்ன முத்துக்களை சொந்தம் கொண்டாட இயலாதா”,

  

“ஏன்னா நாமோ வறியவர்கள், உணவிற்காக உடல் வலி நோக உழைக்கும் ஜாதியினர். முத்துக்களை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது விற்றால் பொற்காசுகள் கிடைக்கும் அதை வைத்து வாழ்க்கை ஓட்டவே நினைப்போம். அதோடு முத்துக்கள் வீட்டில் வைத்துக் கொண்டால் அதற்கான வரிப்பணம் செலுத்த வேண்டும் இந்த கொற்கையில் விளையும் மொத்த முத்துக்களும் மன்னர்களுக்குச் சொந்தமானது. நாமெல்லாம் அவர்களது ஊழியர்கள்.   நம் பணி நாம செய்வதை விடுத்து பேராசை கொண்டு முத்தை திருடவோ, ஒளித்து வைக்கவோ நினைத்தால் கடினம் ஒரு நாள் மாட்டிக்கொண்டால் கடுமையான சிறை தண்டனை விதிப்பார்கள்.”,

  

“ஓ ஆக இம்மண்ணில் பிறந்தவர்களுக்கு இருக்கும் நிலமும் சொந்தமில்லை, கடவுளின் படைப்பான இந்த கடலும் சொந்தமில்லை, ஒன்று சொல் நண்பா கடல் இயற்கையின் ஒரு குழந்தை, கடவுளின் வரப்பிரசாதம், அது இங்குள்ள மனிதர்கள் அனைவருக்கும் சொந்தம் அல்லவா, இதில் மன்னர்கள் எப்படி தங்களுக்கு மட்டும்தான் இயற்கை செல்வங்கள் அனைத்தும் சொந்தம் என உரிமை கொண்டாடுகிறார்களே இது தவறில்லையா”,

  

“உஷ் இப்படி எல்லாம் பேசாத நண்பா. யார் காதிலாவது விழுந்தால் சொன்ன உனக்கும் கேட்ட எனக்கும் சிறை தண்டனை கொடுத்துவிடுவார்கள். மன்னர்கள் நம்மை பொறுத்தவரை கடவுள்களுக்கு சமம் அவர்களை எதிர்த்து பேசுவதை விடுத்து வலை வீசு” என்றான் மாறன் அதற்கு விஜயன்,

  

“இந்நாட்டு மன்னர்கள் நம்மைப்போல மனிதர்கள் மாத்திரமே, கடவுள்கள் அல்லர், நாம் இங்கு