உன்னைத் தானே...! - பிந்து வினோத் : Unnai thaane - Bindu Vinod
 

உன்னைத் தானே...! - பிந்து வினோத்

Other editions available!!! Click here to view other editions of this book.

கிராமத்து இளைஞன் சசி, சென்னையில் சிந்துவை பார்த்த உடனே காதல் கொள்கிறான்.

சிந்துவிற்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை தெரிந்து சசி வருத்தம் அடையும் போதே, எதிர்பாராத விதமாக அவளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதைத் தவறாமல் பயன்படுத்தியும் கொள்கிறான்.

ஆனால் அந்த திருமணம் சிந்துவிற்கு பிடிக்குமா? அவனின் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்களா??

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

 

01. உன்னைத் தானே...!

வீட்டு மாடியில் நின்று காஃபி அருந்திய படி சூரிய உதயத்தை ரசித்து கொண்டிருந்தாள் கங்கா. நிலவளமும் நீர்வளமும் நிறைந்த அந்த மணிமங்கல கிராமத்தின் பார்க்கும் திசை எல்லாம் பச்சை பசேலென கண்ணை கவர்ந்தது. அந்த பச்சை நிறத்துடன், இளஞ்சூரியனின் மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறம் மனதை கொள்ளை கொள்வதாக இருந்தது. காலையில் அம்மா தரும் காஃபியுடன் சூரியோதயத்தை ரசிப்பது கங்காவிடம் பல வருடங்களாகவே இருந்து வரும் பழக்கம். சூரியனின் ஒளியில் மெல்ல இருள் விலகுவதை காண்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

தென் தமிழ்நாட்டில், நாகர்கோவிலை அடுத்து இருந்த அந்த மணிமங்கலம் கிராமத்தில் செல்வமும் செல்வாக்கும் பெற்று விளங்கியது கங்காவின் குடும்பம். கங்கா நாகர்கோவிலில் இருந்த கல்லூரியில் பி.எஸ்ஸி கணிதம் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். கையிலிருந்த காஃபி காலியாகவும் துள்ளல் நடையுடன் கீழே இறங்கி வந்தாள்.

அவளுடைய முதல் அண்ணன் சக்தியின் மனைவி செல்வி, சமையலறையில் பரபரப்பாக காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள். சமையலறைக்கு சென்று டம்ப்ளரை வைத்து விட்டு கல்லூரிக்கு செல்ல தயாராக தொடங்கினாள் கங்கா.

வள் கிளம்பி வந்த போது, செல்வி ஸ்பெஷலாக செய்திருந்த தோசையை சக்தி ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தான்! அம்மா சுலோச்சனா அவனருகில் அமர்ந்து பரிமாறியப் படி அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

 “அம்மா எனக்கும் தோசை ரெடியா?”

“எல்லாம் ரெடியா தான் இருக்கு வா வா...”

காலையில் எழுந்து எல்லா வேலையும் செய்வது செல்வி ஆனால் இந்த பரிமாறும் வேலையை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தாள் சுலோச்சனா. அம்மா ‘ஸ்மார்ட்’ தான் என ,மனதுள் மெச்சியபடி டைனிங் டேபிளில் சக்தி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தோசையை எடுத்து சாப்பிட தொடங்கினாள் கங்கா...

அப்பா ரத்தினசாமியுடன் ஒரு வேலையாக சென்று திரும்பிய அவளின் சின்ன அண்ணன் சசி வந்ததும் வராததுமாக,

“என்னம்மா நீங்க? அண்ணி எங்கே? நீங்களே இன்னமும் பரிமாறனுமா என்ன? அண்ணியால் இதை கூட செய்ய முடியாதா?” என்று வழக்கமான கோப குரலில் பொரிந்து தள்ளினான்.

“அவள் நந்துவுக்கு ஊட்டி விடுறாப்பா... சரி நீங்க இரண்டு பேரும் போன காரியம் என்ன ஆச்சு?”

“அவனுடைய வேலை ஆகாமல் உன் சின்ன மகன் வீட்டுக்கு வருவானா? இடத்தை தர ஒத்துக்கிட்டாங்க...”

“ரொம்ப சந்தோஷம்... முதலில் சசிக்கு சுத்தி போடனும்...”

“அம்மா திருஷ்டி சுத்துவது எல்லாம இருக்கட்டும், அண்ணன் அப்பப்போ சொல்ற விஷயம் உங்களுக்கு புரியவே மாட்டேங்குது...”

“ஹேய் வாலு, என்கிட்ட வாலை ஆட்டாதே, வேண்டாம்...”

“க்கும், இவர் பெரிய தேசிங்கு ராஜா, இவர் சொன்ன உடனே நாங்க பயந்து நடுங்க...”

சசி தங்கையின் காதை திருக கையை நீட்ட, அவள் அப்பாவின் பக்கம் சாய்ந்து,

“பாருங்க அப்பா...” என்று சலுகையுடன் சொன்னாள்.

“இரு சசி, அவள் என்ன சொல்றாள்ன்னு கேட்போமே... என்ன விஷயம்மா?”

“பெரிய அண்ணனே சும்மா இருக்கான் ஆனால் இந்த சின்ன அண்ணன் எப்போ பாரு ஏதாவது சொல்லி சொல்லி அம்மாவுக்கு தூபம் போடுறானே... உங்களுக்கு புரியலையா? சீக்கிரம் எனக்கு கல்யாணம் செய்து வச்சு அடுத்த மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு வாங்கன்னு உங்க இரண்டு பேரிடமும் சொல்லாமல் சொல்றான்...”

“அப்படியா என்ன சசி?”

அப்பாவியாக கேட்ட அம்மாவை அதிசயமாக பார்த்தாள் கங்கா. அண்ணியிடம் மல்லுகட்டும் போது வரும் சாமர்த்தியம் எல்லாம் அம்மாவிற்கு பிள்ளைகளின் முன் எங்கே போகிறது?

“அதெல்லாம் இல்லைம்மா... இந்த வாலை இந்த வீட்டை விட்டு துரத்தின பிறகு தான் எனக்கு கல்யாணம்...”

“அடடா, வர போற அண்ணி மேல என் சின்ன அண்ணனுக்கு இப்போதே என்ன பாசம் பார்த்தீங்களாம்மா?”

“என்ன?”