மாசில்லா உண்மைக் காதலே - சசிரேகா : Maasilla unmai kadhale - Sasirekha
 

மாசில்லா உண்மைக் காதலே - சசிரேகா

முன்னுரை:

உறவுகளுக்குள் உள்ள பலம் பலவீனம் பற்றியும் என்னதான் சொந்தபந்தம் மேல் கோபம் வெறுப்பு இருந்தாலும் ரத்தபந்தம் என்றுமே உறவுகளை பிரியவிடாது என்பதை சொல்லும் கதையாகும்.

 

 

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஊரில் இருக்கும் பல குடும்பங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த குடும்பங்களும் உண்டு

அதிலும் நம்பியப்பன்நம்பி குடும்பமும் அகமுடைநம்பியின் குடும்பமும் பரம்பரை பரம்பரையாக அதாவது பாட்டன், முப்பாட்டன், பூட்டன் காலத்தில் இருந்து மதிப்பிற்குரிய குடும்பமாக ஊருக்குள் பெரியதலைக்கட்டுக்களாக இன்று வரை தலைநிமிர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

நம்பி என்ற அடைமொழி பெயரை தங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக்கிக் கொண்டவர்கள் அக்குடும்பத்தில் பிறக்கும் அனைவரின் பெயருக்கு பின்னால் நம்பி என்பது கட்டாயமாக சேர்க்கப்படுவது வழக்கம், வெளியில் இருந்து வந்தவர்களுக்கு இந்த பட்டம் கிடையாது.

அவர்களுக்கு பிறக்கும் அக்குடும்பத்தின் வாரிசுகளுக்கு மட்டுமே இந்த நம்பி பட்டம் கிடைக்கும். வெறும் பெயர்தான் என்றாலும் அதற்கு தனி மதிப்பும் கௌரவமும் மரியாதையும் அதிகம்.

பெயரை வைத்தே இன்னார் என மக்கள் அறிந்துக் கொள்வார்கள், அதை விட நம்பி என பெயர் வைத்திருப்பவர்கள் நம்பிக்குரியவர்கள் அவர்களை கண்கள் மூடி நம்பலாம் என்ற பேச்சும் அந்த வட்டாரத்தில் புழங்கும், அதற்கேற்ப நம்பி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் நல்லவர்களாகவும் நம்பிக்கைகுரியவர்களாகவும் வாழ்ந்துவருகிறார்கள். தங்கள் குடும்ப பெயருக்கு எந்தவிதமான களங்கமும் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்

நம்பியப்பன்நம்பி குடும்பமும் அகமுடைநம்பி குடும்பமும் சொந்தங்கள் அல்ல மாறாக பெயரில் மட்டுமே நம்பி இருப்பதால் தனித்துவமாக திகழ்வார்கள் ஊரில் பெரிய தலைகட்டுக்குடும்பங்கள் அதன் காரணமாக பல வருடங்களாக அண்ணன் தம்பி என சொந்தங்களை புதிதாக உருவாக்கிக் கொண்டு பந்தங்கள் போல பழகி வந்தார்கள்.

அதில் யார் கண் பட்டதோ இரு குடும்பங்களும் பிரிந்துவிட்டது. அந்த பிரிவிற்கு காரணம் என்னவென்று கூட ஊராருக்கு தெரியாது அந்த இரு நம்பி குடும்பங்களும் பிரிந்து 18 வருடங்கள் ஆன நிலையில்

இன்று….

நம்பியப்பன்நம்பி குடும்ப வாரிசு அவரின் பேரன்களில் ஒருவனான செந்தில்மாறன்நம்பி அடுத்த வாரம் வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பல ஏற்பாடுகளை கடமையே என நினையாமல் எப்போதும் போல் மிகவும் ஆர்வமாக செய்துக் கொண்டிருந்தான்.

நம்பி குடும்பத்திற்கென்று இருக்கும் பல ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் சாகுபடி, கரும்பு சாகுபடி செய்து நெல்லுக்காக அரிசி ஆலை ஒன்றும் கரும்பிற்காக சர்க்கரை ஆலை ஒன்று வெல்ல ஆலை ஒன்றும் அவர்களுக்கு சொந்தமாக உள்ளது.

அதிலிருந்து வரும் வருமானமே வீட்டு செலவுகள் விவசாய செலவுகள் வேலையாட்கள் சம்பளம் போக மிஞ்சியிருக்கும் மீதமுள்ள பணத்தில் சிறிது பணத்தில் தானம் தருமம் செய்துக் கொண்டு வருவார் நம்பியப்பன்நம்பி.

அவரது 3 மகன்களும் ஊருக்குள் கடைகள், வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். பணத்தேவை அந்த வீட்டில் எப்போதுமே இருந்தது இல்லை, நிம்மதியான வாழ்க்கை, என்ன கேட்டாலும் கிடைக்கும், எதைப்பற்றிய கவலையும் அவ்வீட்டில் யாருக்கும் இல்லை.

ஆனால், ஒருவருக்கு இருந்தது, அவர் செந்தில்மாறனின் பெரியம்மா சத்யவதி ஆவார். பொங்கல் முன்னிட்டு தனது மகள் கோதைநம்பிக்கு சீர் செய்ய வேண்டும் என்ற ஆசை பலவருடங்களாக அவர் மனதில் இருந்து வந்தது,

சத்யவதி -நம்பியப்பன்நம்பி குடும்பத்தின் மூத்த மருமகள் என்கிற பட்டத்தை பெற்றவர். மூத்த மருமகளுக்கு என்று இருக்கும் கடமைகளில் இருந்து சிறிதும் விலகாமல் யாரும் ஒரு வார்த்தை சொல்லிவிட முடியாத அளவு தனது பொறுப்பை நிர்வகிப்பவர். தாய் என்ற சொல்லின் பொருளுக்கு சிறிதும் கலங்கமில்லாமல் பார்த்துக் கொள்பவர் கல்லானாலும் கணவன் என வாழ்ந்து வருபவர்

அவரின் மகள் பெயரை எடுத்தாலே போதும் அந்த வீட்டின் பெரியவர்கள் கோபத்தில் கொந்தளிப்பார்கள், அதனாலேயே கோதைநம்பி என்ற பெயரையே அவ்வீட்டினர் காலப்போக்கில் மறந்துவிட்டார்கள்.

ஆயினும், ஒவ்வொரு வருடமும் பொங்கல், தீபாவளி, ஊர்த்திருவிழா என பண்டிகை நாட்கள் வரும் போதெல்லாம் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் சத்யவதியைத் தவிர, தன் மகள் தூரத்தில் இருந்தாலும் அவள் வீட்டை விட்டு சென்ற நாளில் இருந்து ஒரு முறை கூட அவளை சென்று பார்க்கவில்லை என்றாலும் அவள் நன்றாகதான் இருக்கிறாள் என நினைத்து மன அமைதி கொள்வார்.

அதற்கு மேல் அவரால் அக்குடும்பத்தாரை எதிர்த்து மகளை வீட்டுக்கு அழைக்கவோ, சீர் செய்யவோ முடியவில்லை. பெரியவர்களின் பேச்சே அவ்வீட்டில் செல்லுபடியாகும், அதில் நம்பியப்பன்நம்பி பேச்சிற்கு மறுவார்த்தை யாராலும் கூற முடியாது அப்படி ஒரு மதிப்பும் மரியாதையும் கூடவே அவர்மீது பயமும் உண்டு அனைவருக்கும்

ஆனாலும் சத்யவதி தனது முயற்சியை வழக்கம் போல இந்த வருடமும் செய்யலானார். அதற்காக தனது கணவர் நம்பியப்பன்நம்பியின் மூத்த மகன் பெரியநம்பியிடம் தயக்கத்துடனே பேச்சைத் துவங்கினார்

”ஏங்க வேலையா இருக்கீங்களோ” என இழுத்து கேட்க அவரோ செந்தில்மாறன்நம்பி கொடுத்து சென்ற கரும்பு ஆலையின் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்து அந்த ஆலையில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு சம்பளமும் போனசும் தருவதற்கான கணக்குகளை வகுத்து பெருக்கி கூட்டி கழித்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் மனைவியின் பேச்சிற்கு பதில் சொல்ல கூட நேரமில்லை அவருக்கு

பெரியநம்பி - பெயருக்கு ஏற்ப அக்குடும்பத்தின் மூத்த மகனுக்கு என இருக்கும் அத்தனை கடமைகளையும் ஒன்றுவிடாமல் முகம் சுளிக்காமல் செய்து முடிப்பவர், வீட்டின் நல்லது கெட்டது என பேச்செழும் போது நம்பியப்பன்நம்பிக்கு அடுத்து பெரியநம்பியிடம் ஆலோசனை கேட்பார்கள் அனைவரும், அவரின் பேச்சுக்கு அத்தனை மதிப்பும் மரியாதையும் உண்டு